கோப்பாய் ஆசிரியர் கலாசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை
அமைவிடம்
கோப்பாய், இலங்கை
தகவல்
வகைஆசிரியர் பயிற்சி கல்லூரி
குறிக்கோள்வாழக்கல்மின்
தொடக்கம்1923
அதிபர்திரு.சந்திரமௌலீசன் லலீசன்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இலங்கை, யாழ்ப்பாணம், கோப்பாயில் அமைந்துள்ள ஒரு தேசிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகும். இது ஆசிரியர் நியமனம் பெற்றவர்களுக்கான ஆசிரியர் வாண்மைத்துவ பயிற்சியினை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.

வரலாறு[தொகு]

கோப்பாய் ஆசிரிய கலாசாலை 1923 ஒக்டோபர் 1 ஆம் நாள் கோப்பாய் தெற்கு பிரதேசத்தில் சேர். பொன். இராமநாதன் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட்டது. மிசனறிமாருடைய கலாசாலைகளே யாழ்ப்பாணச் சூழலில் அக்காலத்தில் காணப்பட்டன. கொழும்புத்துறை, நல்லூர், தெல்லிப்பழை, சுன்னாகம், என பல்வேறு இடங்களில் மிசனறிமார் தாம் நிறுவிய பாடசாலைகளின் ஆசிரியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கலாசாலைகளை நிறுவினர்.

காரைநகர் ச. அருணாசலம் உபாத்தியாயர் கோப்பாயில் சைவச் சூழலிலான கலாசாலை ஒன்றைத் தொடங்குவதற்கு பெரும் முயற்சி செய்து 1916 இல் அதனை நிறைவேற்றினார். கத்தோலிக்கர் அல்லாத கிறித்தவர்களும், சைவர்களும் இணைந்து கற்கக்கூடிய வகையில் இக் கலாசாலை நடைபெறுவதற்கு அன்று அரசினால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகளுடன் இக் கலாசாலை மூடப்பட்டது. இந்தச் சூழலிலேயே சைவாசிரியர்களை பயிற்றுவிக்க வேண்டிய தேவை கருதி கோப்பாய் ஆசிரிய கலாசாலை 1923 இல் நிறுவப்பட்டது. இதன் போது கலாசாலையின் பெயர் "யாழ்ப்பாணம் அரசினர் ஆசிரியர் கல்லூரி" என அமைந்திருந்ததாக 1923 செப்டம்பர் 20 இல் வெளியான இந்து சாதனம் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் அதிபராக அக்காலத்தில் வித்தியாதிபதியாக இருந்த (கல்விப் பணிப்பாளர்) மல்லாகத்தைச் சேர்ந்த அ. பொன்னையா நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் நாற்பது ஆசிரியர்களே பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென சேர். பொன். இராமநாதன் சட்டசபையில் போராடினார். அக் காலத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்த வசதியீனங்களைக் காரணம் காட்டி அரசினர் அவரது கோரிக்கையை நிராகரித்தனர். இதனால் தான் சார்ந்த சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக 1928 ஆம் ஆண்டில் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையை அவர் நிறுவினார்.

1923 இல் நிறுவப்பட்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை படிப்படியாக வளர்ச்சி கண்டது. அக் காலத்தில் விரிவுரை ஆற்றியோர் பேராசிரியர்கள் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர்.

1945 இல் இலங்கை முழுவதும் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பாடசாலைகள் பெருகின. ஆசிரியர்களின் உருவாக்கமும், கலாசாலைகளின் தேவைகளும் உயர்ந்தன. இதனால் அரசினால் 1947 இல் பலாலி ஆசிரிய கலாசாலை நிறுவப்பட்டது. 1947  ஆம் ஆண்டு முதல் கோப்பாய் ஆசிரிய கலாசாலை மகளிர் ஆசிரிய கலாசாலையாக உருமாற்றம் பெற்றது. 1977 இல் இருபாலாரும் கற்கும் கலாசாலையாக உருமாற்றம் பெற்றது.

பலாலி ஆசிரிய கலாசாலையின் இணைவு[தொகு]

ஈழப்போர் சூழ்நிலையால், பலாலி ஆசிரிய கலாசாலை 2012 ஆம் ஆண்டு தொடக்கம் கோப்பாய் ஆசிரிய கலாசாலை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இலங்கைக் கல்வி அமைச்சு 2013 பெப்ரவரி 19 இல் பலாலி ஆசிரிய கலாசாலையின் அனைத்துப் பொறுப்புகளையும், கணக்குகளையும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டது.

ஆசிரிய மாணவர் - மாணவ ஆசிரியர்[தொகு]

கலாசாலையில் பயில்வோர் ‘ஆசிரிய மாணவர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றியபின் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுவதால் இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. தேசிய கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெறுவோர் 'மாணவ ஆசிரியர்கள்' என அழைக்கப்படுகின்றனர்.

கலாசாலைப் பண்[தொகு]

யாழ்நகர் மீதமர் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலை வாழ்க எனத் தொடங்கும் கலாசாலைப் பண் பல ஆண்டுகளாக இங்கு பாடப்படுகின்றது. இதனை எழுதியவர் நல்லூர் பண்டிதர் இராசையா ஆவார்.

கலாசாலையின் வழிபாட்டிடங்கள்[தொகு]

யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் வருகை தந்து தியானம் செய்த இடத்தில் அமையப்பெற்ற யோகமண்டபம் 2014 ஆம் ஆண்டில் யோகாம்பிகை சமேத யோகலிங்கேசுவரப் பெருமான் ஆலயமாக விளங்குகின்றது. இதைவிட அன்னை மரியாள் சிற்றாலயமும் காணப்படுகின்றது.

கலாசாலையின் நூலகம்[தொகு]

கலாசாலையின் நூலகம் 1971 இல் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் கிருஷ்ணை சபதம் என்ற நாடகத்தை பெண் ஆசிரிய மாணவர்கள் மேடையேற்றி அதன் மூலம் இந்நூலகத்தைத் தொடங்கினர். இதனால் இந்த நூலகம் கிருஷ்ணை படிப்பகம் என வழங்கப்படுகின்றது. ஈழத்தமிழ்ப்பரப்பில் கிடைத்தற்கரிய சில நூல்களும் இங்கு உள்ளன.

கலாசாலையில் சேவையாற்றிய அதிபர்கள்[தொகு]

கலாசாலை அதிபர்களாக பின்வருவோர் சேவையாற்றி உள்ளனர்.[1]

  • அ. பொன்னையா 01.10.1923 – 31.08.1935
  • ஆ. இ. சண்முகரத்தினம் 1936 – 15.05.1947
  • செல்வி ஞானம் முருகேசு 16.05.1947 - 31.12.1962
  • திருமதி இரதிலக்சுமி ஆனந்தக்குமாரசாமி 01.01.1963 - 12.01.1985
  • செல்வி சத்தியமலர் சின்னப்பு 13.01.1985 - 11.01.1989
  • வை. கா. சிவப்பிரகாசம் 12.11.1989 - 11.01.1993
  • திருமதி சிவயோகநாயகி இராமநாதன் 12.01.1993 - 11.08.1996
  • கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை 12.08.1996 - 20.05.1998
  • முருகேசம்பிள்ளை பரஞ்சோதி 21.05.1 998 - 02.01.2003
  • ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தமூர்த்தி 03.01.2003 - 13.10.2008
  • செல்வி மலர் சின்னையா 13.10.2008 - 18.05.2010
  • கைத்தன் பேர்ணாட் 19.05.2010 - 03.11.2010
  • வே. கா. கணபதிப்பிள்ளை 04.11.2010 - 16.08.2014
  • வீரகத்தி கருணலிங்கம் 17.08.2014 - 31.12.2022
  • சந்திரமௌலீசன் லலீசன் 01.01.2023 இலிருந்து இன்றுவரை[2]

கலாசாலையின் நூற்றாண்டு[தொகு]

1923 இல் நிர்மாணிக்கப்பட்ட கலாசாலை 2023 இல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. இதற்கென நூற்றாண்டு நினைவுச் சின்னம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. புதிய மாணவர் விடுதி 2023 பெப்ரவரி தொடக்கம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோப்பாய் ஆசிரிய கலாசாலை". நூலக நிறுவனம்.
  2. "கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக லலீசன்". https://www.virakesari.lk/article/144586.