குறியீட்டின் இரட்டைத்தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியியலின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றானது குறியீட்டின் இரட்டைத்தன்மை (Duality of Patterning அல்லது Double Articulation). பொருளற்ற குறியீட்டு கூறுகள் (meaningless signs) ஒன்றுசேர்ந்து பொருளுடைய வடிவங்களை (meaningful forms) கட்டமைப்பதை குறியீட்டின் இரட்டைத்தன்மை எனலாம். மனித மொழிகளில் காணப்படும் தனிச்சிறப்பான பண்புகளுள் ஒன்று இது என்றும் கூறலாம். இதில் இரட்டைத்தன்மை எங்கிருந்து வருகிறது என்றால், ஒரு தளத்தில் பொருளற்ற குறியீடுகளும் மறுதளத்தில் பொருள் கொண்ட குறியீடுகளும் கொண்டுள்ளதால் ஆகும். உதாரணத்திற்கு, 'வ்' மற்றும் 'ஆ' என்னும் ஒலியன்களுக்கு (phonemes) தனியே பொருளில்லை. இவை பொருளற்ற வெறும் குறியீடுகள். இவை ஒன்று சேர்ந்து 'வா' என்று ஓர் உருபன்(morpheme) உருவாகுகையில் பொருளுடைய ஒரு வினை சொல் வெளிக்கொணரப்படுகிறது. இந்த விடயத்தை பற்றி முதலில் 1949-இல் எழுதியவர் பிரஞ்சு மொழியியலாளரான ஆன்றெ மார்தினெ (André Martinet).[1]

பொருளற்ற தளத்தில் ஒலியன்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒலியன்கள் தவிர, அவற்றினும் மேலுள்ள கூறுகள் இருக்கலாம். உதாரணத்திற்கு இரட்டைக்கிளவிகளை எடுத்துக்கொள்ளுங்கள். 'கலகல' என்னும் இரட்டைக்கிளவியின் அடிப்படை கூறு 'கல' என்பது தான். இது பொருளற்றது. இதுவே இரட்டித்து பொருளுள்ள 'கலகல' என்னும் இரட்டைக்கிளவியாக அமைகிறது. இவ்வாறு 'கல' [kɘlɘ] என்னும் நான்கு ஒலியன்கள்(அதாவது ஒன்றிக்கு மேற்பட்ட) கொண்ட கூறுகளும் பொருளற்ற தளத்தில் இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. André Martinet, Éléments de linguistique générale, Colin, 1960, new updated edition 1980.

வெளி இணைப்புகள்[தொகு]