கீழ சரக்கல்விளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயிலின் கோட்டை மற்றும் கோபுரத்தின் எழில் மிகு தோற்றம்.

கீழ சரக்கல்விளை எனும் ஊர், இந்தியாவின் தமிழ்நாடு எனும் மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 629002 எனும் அஞ்சல் குறியீட்டு எண்ணை கொண்டு அமைந்துள்ளது. இது அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் எனும் பிரபலமான சுற்றுலா தலத்தினை தன் வசம் கொண்ட அழகிய ஊர் ஆகும்.

பெயர் விவரம்[தொகு]

கீழ சரக்கல்விளை எனும் பெயர் தனது மண்ணின் இயல்புத்தன்மையை எடுத்துரைக்கிறது. நமது தமிழ் இலக்கணம் "கீழ" எனும் சொல்லிற்கு இரு வெவ்வேறு பொருள் கூறுகிறது. ஒன்று கிழக்கு (திசையை குறிக்கும் சொல்) மற்றொன்று அடிப்பாகம் (நிலத்தின் அடிப்பகுதி). நிலவியல் அமைப்பின் படி கீழ சரக்கல்விளை ஊரானது, அருகாமையில் உள்ள சரக்கல்விளை எனும் ஊரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. "சரக்கல்" எனும் சொல்லானது  மண்ணின் ரகத்தை எடுத்துரைக்கிறது. இவ்வூரில் நிலத்தின் அடிப்பகுதியானது இயற்கையாகவே சரளை மண்ணினை கொண்டமைந்துள்ளது (செம்மண்+திருமண்கட்டி+இவையிரண்டும் இணைந்த கற்கள்= சரளை மண்). "விளை" எனும் சொல்லானது விளைநிலம் அல்லது தோட்டத்தினை குறிக்கிறது (பலதரப்பட்ட பயிர்களை பயிரிட்டு வளர்த்திட ஏதுவான செழுமை வாய்ந்த நிலப்பகுதி). மேற்கூறியவையே இவ்வூரானது கீழ சரக்கல்விளை என பெயர் பெற முக்கிய காரணிகள் ஆகும்.

நிலவியல்[தொகு]

கீழ சரக்கல்விளை எனும் எழில்மிக்க ஊரானது இந்தியாவின் தென்முனை மாநிலமான தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோயில் மாநகரில் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோயில் மாநகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி மாநகரிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும் மற்றும் திருவனந்தபுரம் மாநகரிலிருந்து ஏறக்குறைய 85 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கீழ சரக்கல்விளை ஊரானது பத்திரகாளி அம்மன் திருக்கோயிலுக்கு புகழ்பெற்றதாகும். இக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான கோட்டை ஆகும்.

கன்னித்தன்மையே உரித்தான இளம்பெண்ணான பத்திரகாளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் இந்திய தேசம் முழுவதிலும் தனித்துவம் வாய்ந்ததாகும். கருவறை மற்றும் கோட்டை சேர்ந்து அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் 1௦௦ ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும்.

அருள்மிகு சுடலைமாட சுவாமி கோவிலின் செழுமை வாய்ந்த தோற்றம்.

மொழி[தொகு]

கீழ சரக்கல்விளை ஊரின் அலுவல் மற்றும் தாய் மொழியாக தாய் தமிழ் உள்ளது. இங்குள்ளவர்கள் பேசும் தமிழ் சற்றே மலையாளம் கலந்ததாக அறியப்படுகிறது. சில சமயங்களில் இங்குள்ளவர்கள் பேசும் தமிழ் நெல்லை மாவட்டத்திற்கு வடக்கே உள்ள தமிழர்களுக்கு எளிதில் புரியாத வண்ணமே உள்ளது. மேலும் இவ்வூர் மக்களின் பழக்க வழக்கமும் கலாச்சாரமும் தமிழக மற்றும் கேரள பாரம்பரியத்தின் கலவையாகவே இன்றளவும் இருந்து வருகிறது. கீழ சரக்கல்விளை ஊரின் பெரும்பான்மை மக்கள் இந்து மதத்தை பின்பற்றி வருகின்றனர்.

உணவு முறை[தொகு]

கீழ சரக்கல்விளை ஊர் மக்களால் சமைத்து உண்ணப்படுகிற உணவுகளும் தமிழக மற்றும் கேரள பாரம்பரியத்தின் கலவையாகவே உள்ளது. அவ்வுணவுப்பொருட்களாவன புட்டு, ஆப்பம், இடியாப்பம், உளுந்தன் சோறு, மற்றும் மீன் கறி. தின்பண்டங்களாவன சுத்து முறுக்கு, அச்சு முறுக்கு, கருப்பட்டி பலகாரம், முந்திரிக்கொத்து மற்றும் பல. இவ்வூர் மக்கள் தங்கள் தினசரி சமையலில் அதிகளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள்.

குடும்ப தெய்வம்[தொகு]

கீழ சரக்கல்விளை ஊர் மக்களின் குல தெய்வம் பத்திரகாளி அம்மன் ஆவார். பார்வதி (கொற்றவை) அம்மையின், கன்னித்தன்மையே உரித்தான இளம்பெண் சுய உருவமே பத்திரகாளி அம்மன் ஆவார். தேவியானவர் பற்பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறார். அவையாவன தேவி பாலா, தேவி பத்ரா, தேவி பால பரமேசுவரி, வட பத்திரகாளி (வடக்கு நோக்கிய அம்மை), குரு பூசை காளி, தேவி பகவதி, தேவி கன்னியாகுமரி, தேவி துர்க்கை, தேவி அழகியநாயகி, தேவி பெரியநாயகி, தேவி ராகினி, மாரியம்மன், தேவி முத்தாரம்மன் மற்றும் பல....("தேவி" எனும் அழகு தமிழ் சொல் பெண்ணின் "கன்னித்தன்மை" என்கிற பொருளை வெளிப்படுத்துகிறது). ஆனால் கீழ சரக்கல்விளை ஊர் மக்கள் தேவியை "பெரியம்மை" என அன்பு மிகுதியுடன் அழைக்கிறார்கள். மக்கள் தேவியை தன் சிந்தையில் நிறுத்தி தொழும்பொழுது சில சமயங்களில் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்தி அழுது விடவும் செய்கிறார்கள்.

விழாக்கள்[தொகு]

சனிக்கிழமை மாலை, சித்திரை திருவிழா.

இவ்விடம் 4 திருவிழாக்கள் சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. வருடத்தின் முதல் திருவிழா சித்திரையிலும், இரண்டாவது ஆடியிலும், மூன்றாவது புரட்டாசியிலும்  மற்றும் நான்காவது கார்த்திகையிலும் கொண்டாடப்படுகிறது. எல்லா வருடமும் சித்திரை திங்கள் ஒடுக்கத்து வெள்ளிக்கிழமைக்கு, முந்தைய வெள்ளிக்கிழமை அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் மட்டும் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் ஒடுக்கத்து வெள்ளிக்கிழமைக்கு, முந்தைய வெள்ளிக்கிழமை அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோயில் ஆகிய இரு கோயில்களிலுமே கொடை விழாவானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசியில் நவராத்திரி விழாவின் போது அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் தேவியை 10 நாட்கள் கொலுவிருத்தி பக்தி மிகுதியுடன் வழிபடுகின்றனர். மேலும் 10வது நாள் நண்பகலில் பொதுமக்கள் அனைவருக்கும் சுவையான காய்கறி சாப்பாடு பரிமாறி விழாவினை நன்முறையில் நிறைவு செய்கின்றனர். கார்த்திகை மாதம் ஒடுக்கத்து வெள்ளிக்கிழமைக்கு, முந்தைய வெள்ளிக்கிழமை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலில் அம்மைக்கு சிறப்பு கொடைவிழா நடத்தப்படுகிறது.

மேலும் இவ்வூர் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் மற்றும் தீப ஒளி திருநாளை எல்லா வருடமும் நன்முறையில் சிறப்பிக்கின்றனர். இவ்விழாக்களின் போது சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்படுகிறார்கள்.

மக்கள் தொகை மற்றும் எழுத்தறிவு[தொகு]

2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கீழ சரக்கல்விளை ஊரின் மொத்த மக்கள் தொகையானது 266 ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 49 விழுக்காடும், பெண்கள் 51 விழுக்காடும் ஆவர். கீழ சரக்கல்விளையில் 92 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு உள்ளவர்களாகவே விளங்குகின்றனர். இது எழுத்தறிவில் மொத்த தமிழ்நாட்டின் சராசரியில் 80.09 விழுக்காடு ஆகும். இவ்வூரில் 4 விழுக்காடு பேர்கள் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாகவே விளங்குகின்றனர்.

தோட்டம் மற்றும் விவசாயம்[தொகு]

கீழ சரக்கல்விளையில் முக்கிய பயிர்களாக பயிரிடப்பட்டு ஆண்டு தோரும் அறுவடை செய்யப்படும் பயிர்களாவன தென்னை, வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகும் (நெல் பயிரிடுதல் சில வருடங்களுக்கு முன்னரே கைவிடப்பட்டுள்ளது.) திருவிதாங்கூர் மன்னர் திரு. ராம வர்மன் அவர்கள் ஆட்சிக்காலத்தில் அரசால் பாசனத்திற்காக உருவாக்கப்பட்ட கால்வாய்கள் மற்றும் ஆறு, மனிதர்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால் பாழடைந்தபோதிலும், கீழ சரக்கல்விளை ஊரின் நிலக்கிழார்கள் மற்றும் விவசாயத்தின் மீது உயிருள்ளவர்கள் தங்கள் நிலம் மற்றும் தோட்டத்தை முறையாக பராமரித்து தங்கள் சொந்த செலவில் இன்றளவும் பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்து வருகின்றனர். இவர்களின் இந்த நற்செயலால் கீழ சரக்கல்விளை ஊர் இன்று வரை இயற்கை எழில் கொஞ்சும் பசும்புரமாக காட்சியளிக்கிறது.

நிர்வாகம்[தொகு]

தலைவர்[தொகு]

திரு. கா. சிவன்

துணைத்தலைவர்[தொகு]

திரு. ந. ஆனந்த்

செயலாளர்[தொகு]

திரு. ந. முத்துக்கிருஷ்ணன்

துணைச்செயலாளர்[தொகு]

திரு. ரெ. ரெகுமணி

பொருளாளர்[தொகு]

திரு. கு. ரவிக்குமார்

கோயில்கள்[தொகு]

  • அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில்
  • அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோயில்
  • அய்யா நாராயண சுவாமி கோயில்
  • அருள்மிகு பூசைப்பிறை பத்திரகாளி அம்மன் கோயில்

அருகிலுள்ளோர்கள்[தொகு]

  • சரக்கல்விளை
  • வேதகாரக்குடியிருப்பு
  • வெள்ளாடிச்சிவிளை
  • கன்னங்குளம்

சமீபத்திய நிகழ்வு[தொகு]

வீர வணக்கத்தில் பங்குபெற்றோர்!

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த 44 துணை ராணுவ வீரர்களுக்கு மரியாதை நிமித்தமாக பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ சரக்கல்விளை ஊர் பொது மக்கள் வீர வணக்கம் மற்றும் 5 நிமிடம் அமைதி அஞ்சலி செலுத்தினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ_சரக்கல்விளை&oldid=3632605" இலிருந்து மீள்விக்கப்பட்டது