கமலாபாய் ஹோஸ்பெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்பு(1896-05-23)23 மே 1896
சிர்பூர்
இறப்பு15 நவம்பர் 1981(1981-11-15) (அகவை 85)
தேசியம் India

கமலாபாய் ஹோஸ்பெட் (Kamalabai Hospet) (1896 – 1981) கமலாதை ஹோஸ்பெட் என்றும் அழைக்கப்படும் இவர் மாத்ரு சேவா சங்கத்தின் இணை நிறுவனர் ஆவார். இது இந்திய மாநிலமான மகாராட்டிராவின், நாக்பூரில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பாகும்.

வேணுதாய் நேனே (1896 – 1973) என்பவருடன் சேர்ந்து, 1921 இல் மாத்ரு சேவா சங்கத்தையும் 1971 ஆம் ஆண்டில், வித்யா சிக்சன் பிரசாரக் மண்டல் என்ற நிறுவனத்தை நிறுவினார். இது இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கமலாபாய், 1896 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் துளேவில் உள்ள சிர்பூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணா தாத்யா மோகோனி மற்றும் இராதாபாய் மோகோனி ஆகியோரின் ஏழாவது குழந்தையாக பிறந்தார். இவரின் இயற்பெயர் யமுனா கிருஷ்ண மோகோனி என்பதாகும். அன்றைய வழக்கப்படி 12 வயதிலேயே குருராவ் ஹோஸ்பெட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது 15ஆவது வயதில் இவரது கணவர் இறந்துவிட்டார். ஹோஸ்பேட் குடும்பம் மிகவும் பழமைவாதமாக இருந்தது. எனவே அன்றைய வழக்கப்படி கமலாபாயின் தலையிலுள்ள முடிகளை களையவேண்டுமென நிபந்தனை வித்தித்தது. கமலாபாயின் சகோதரர் உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் இவரை நாக்பூரில் உள்ள இவரது தாய்வீட்டிற்குத் திருப்பி அனுப்பினார்.

பிற்கால வாழ்வு[தொகு]

மேலதிக கல்விக்காக புனேவிலுள்ள உள்ள இங்கனாவிற்கு மகரிசிஷி தோண்டோ கேசவ் கர்வே நிறுவிய கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், தனது கல்வியை இங்கு முடிக்கவில்லை. தனது கல்விக்காக செலவிடும் தனது சகோதரர்களின் குடும்பங்களுக்கு நிதிச் சுமையைத் தவிர்க்கவும், தான் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், நாக்பூரில் உள்ள தபரின் மருத்துவமனையில் செவிலியர் படிப்பில் சேர்ந்தார். (1918-1920).

மருத்துவமனையில் பயிற்சியில் இருந்தபோது, ஒரு ஏழை இந்திய நோயாளிக்கு படுக்கையை ஒதுக்கியதற்காக பிரிட்டிசு மருத்துவரால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அனைத்து இந்திய பெண்களுக்கும் பாரபட்சமின்றி சேவை செய்யும் ஒரு மகப்பேறு இல்லத்தை தொடங்க முடிவு செய்தார். இதன் விளைவாக, தனது பயிற்சியை முடித்தவுடன் நாக்பூரில் உள்ள சிதாபுல்டியில் மாத்ரு சேவா சங்கம் என்ற பெயரில் நான்கு படுக்கைகளுடன் கூடிய ஒரு மகப்பேறு இல்லத்தை நிறுவினார். பின்னர், தனது வாழ்நாளில் மகாராட்டிரம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களில் 21 கிளைகளாக விரிவாக்கம் செய்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தனிப்பட்ட கவனிப்பையும் கவனத்தையும் செலுத்தினார். மகப்பேறு இல்லத்தை நடத்துவதைத் தவிர, இவர் ஒரு செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் சமூகப் பணி நிறுவனம், நந்தன்வானில் மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளி, பஞ்சவடியில் மூத்த குடிமக்கள் இல்லம், மாத்ரு சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் அனாதை இல்லம் போன்றவற்றையும் நடத்தி வந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கமலாபாய் பெரும் சேவையாற்றினார். 1920ல் நாக்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றினார்.

இறப்பு[தொகு]

கமால்பாய் 15 நவம்பர் 1981 அன்று இறந்தார்.

அங்கீகாரம்[தொகு]

கமலாபாய்க்கு 1959 ஆம் ஆண்டு இந்திய செஞ்சிலுவை சங்கத்தால் நலவா பதக்கம் வழங்கப்பட்டது. இது இந்தியாவில் செவிலியத் துறையில் சிறந்து விளங்கும் விருதாகும். 1961 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவரது சமூகப் பணிகளுக்கு பத்மசிறீ பட்டத்தையும்[1] 1980 இல் ஜம்னாலால் பஜாஜ் விருதையும் வழங்கி கௌரவித்தது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 2013-05-10.
  2. "Jamnalal Bajaj Awards Archive". Jamnalal Bajaj Foundation.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாபாய்_ஹோஸ்பெட்&oldid=3647406" இலிருந்து மீள்விக்கப்பட்டது