கபிலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கபிலர் (2ம் நூற்றாண்டு; திருவாதவூர், தமிழ்நாடு, இந்தியா) சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர்.

இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறலாம்.

கபில முனிவர், தொல்கபிலர், கபிலதேவ நயனார் ஆகியோர் இவரினும் வேறானவர் ஆவார். இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரின் பெயரும் கபிலர் என்றாலும் இவரும் வேறு.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

இவர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தார் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறும்.

இவர் தன்னை அந்தணர் என்று கூறிக்கொள்கிறார் (புறம் 201). "புலனழுக்கற்ற அந்தணாளன்" என இவரை மாறோக்கத்து நப்பசலையாரும் பாராட்டிக் கூறுவார் (புறம் 126).

இவர் இயற்றிய பாடல்களுள் மிகச் சிறந்து விளங்குவது பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனுக்கு தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப் பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தின் பலவகைப் பூக்களையும், சிறப்பாக பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

[தொகு] கபிலரால் பாடப்பட்டோர்

இவரால் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், செல்வக்கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வையாவி கோபெரும் பேகன், வேள் பாரி என்போர் ஆவர். இவர்களுள் பாரியின் பண்பை பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம். இவர் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினைப் பாடி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பானிடம் நூறாயிரம் காணமும், அவனது "நன்றா" என்னும் மலையின் மீது ஏறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார்.

பேகன் தன் மனைவியை பிரிந்து இன்னொருத்தியுடன் கூடி வாழ்ந்த போது பாணர், அரிசில் கிழார் போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப் படுத்த முயன்றார் (புறம் 145) எனவும் அறியலாம். இவரது பாட்டால், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்தி ஒன்பது தலைமுறையாக துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர் (புறம் 201 ) என்ற சேதி தெரிய வருகிறது.

கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது சால்பையும் பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தே என்றென்றும் நிலைக்கச் செய்தவை. இவர், மூவேந்தரும் வஞ்சகமாக பாரியை கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி வெதும்பி பாடிய செய்யுட்கள், கற்போரை துயரக்கடலுள் சேர்த்துவன ஆகும். பாரிக்கு பின் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களை சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு (200,202) தெரிவிக்கிறது. இறுதியில், பாரி மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து உயிர் நீத்து (புறம் 236, அடிக்குறிப்பு) தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார்.

[தொகு] கபிலர் குன்று

திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.

கபிலர் குன்றை அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று" என்று அழைக்கப்பட்டது. இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது. கட்டட அமைப்பை கருத்தில் கொண்டு, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகு ஊட்டப்பட்டு உள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை. பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது (புறம் 236, அடிக்குறிப்பு) திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,"செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது" (தெ.இ.க. தொகுதி 7, 863) எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.

[தொகு] கபிலரகவல்

கபிலரகவல் எனும் நூல் கபிலரே கூறுமாறு அமைந்த ஒன்றாகும். அந்நூல் பகவன் என்ற உயர்குல முனிவன் ஒருவனுக்கும், ஆதி எனும் தாழ்ந்த குலப் பெண் ஒருத்திக்கும் நால்வர் பெண்களும் மூவர் ஆண்களுமாக எழுவர் மக்களாகப் பிறந்தனர் எனவும், அவர்கள் முறையே ஊத்துக்காட்டில் வண்ணர் அகத்தில் உப்பையும், காவிரிப்பூம்பட்டினத்தில் சான்றார் வீட்டில் உறுவையும், பாணர் ஒருவர் வீட்டில் ஓளவையாரும், மலைக்குறவர் வீட்டில் வள்ளியும், மயிலையில் பறையர் வீட்டில் வள்ளுவரும், வஞ்சியில் அதிகன் வீட்டில் அதியமானும், ஆருரில் அந்தணர் ஒருவர் வீட்டில் கபிலரும் என வளர்ந்தனர் எனவும் கூறுகின்றது. ஆனால் இக்கூற்று கற்பனை என்றே அறிஞர்களால் கருதப்படுகிறது.

[தொகு] கபிலர் அகவல் பாடல் ஒன்றின் பகுதி

'பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்
இறந்தவராய் உம்மை இல்லிடை இருத்திப்
பாவனை மந்திரம் பலபடப் புகன்றே
உமக்கு அவர் புத்திரர் ஊட்டிய போது
கையேந்தி நிற்பது கண்டது ஆர் புகல்வீர்'

[தொகு] சங்ககாலக் கபிலர்

[தொகு] கபிலரைப் பாராட்டியுள்ள சங்கப்பாடல்கள்

சங்ககாலக் கபிலரைச் சங்ககாலப் புலவர்களே பாராட்டிப் பாடியுள்ளர். இதனால் இவரது பெருமை இனிது விளங்கும்.

[தொகு] நக்கீரர்

'உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்' (அகநானூறு 78)

பலரும் புகழும் நல்ல பாடல்களை இசையோடு பாடிக்கொண்டு ஊர்மக்கள் சூழ ஊர் ஊராகத் திரியும் கபிலன்.

[தொகு] பொருந்தில் இளங்கீரனார்

'செறுத்த செய்யுட் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளனாயின் நன்றுமன்' (புறநானூறு 53)

செறு என்பது நன்செய் வயல். செறு என்பது செறிவு. கபிலன் பாடும் செய்யுள்கள் நன்செய் வயலில் நீர் தேங்குவது போலச் சமனிலை கொண்டவை. செறிந்த பொருளாழம் கொண்டவை. அவருடைய நாக்கு செவ்விய செந்தண்மை கொண்டவை.

கேள்வி என்பது கேட்டுக் கேட்டுப் பெறும் அறிவையும், எழுதப்படாமல் கேட்டுக் கேட்டு ஓதிவந்த வேதத்தையும் குறிக்கும். கபிலர் வேதம் கற்றவர். பிறர் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் செவிச் செல்வம் பெற்றவர்.

வெறுத்த கேள்வி என்பதிலுள்ள 'வெறுத்த' என்னும் சொல் 'விரும்பிய' என்னும் பொருளைத் தரும். கறுப்பு > கருமை என்னும் பாங்கில் அமைந்துள்ள பழஞ்சொல்.

இவற்றால் கபிலர் புகழ் பெற்று விளங்கியவர்.

[தொகு] பெருங்குன்றூர் கிழார்

'அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய, மறம் புரி கொள்கை வயங்கு செந் நாவின், உவலை கூறாக் கவலை இல் நெஞ்சின், நனவில் பாடிய நல்லிசைக், கபிலன் பெற்ற ஊர்' (பதிற்றுப்பத்து 85)

ஒன்பதாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையைச் சோழ அரசன் பெரும்பூண் சென்னி தாக்கினான். அப்போது சேரன் எதிர்த்துத் தாக்கியதைத் தாங்கமுடியாமல் சென்னியின் படை தன்னிடமிருந்த வேல்களையெல்லாம் போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டது. இதனைக் கூறுவதற்குப் பெருங்குன்றூர் கிழார் காட்டும் உவமையில்தான் கபிலர் காட்டப்படுகிறார்.

பதிற்றுப்பத்தில் உள்ள ஏழாம் பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிக் கபிலர் பல ஊர்களைப் பரிசாகப் பெற்றார். இந்த ஊர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சோழர் படை போர்க்களத்தில் எறிந்துவிட்டுச் சென்ற வேல்கள் பல என்கிறார்.

அரசவை கபிலரைப் பணிந்தது. காரசம் அவரது அறம் புரிந்த(விரும்பிய) நெஞ்சம். மறம் புரி கொள்கையையும் அவர் மேற்கொண்டவர் (ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்நெறி அறிவிக்கக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியதை இங்கு நினைவு கூரலாம்)

செந்தண்மை பிறழாத நாவுடையவர்.

கவலை என்பதன் எதிர்ச்சொல் உவலை. உவலை = மகிழ்ச்சி. அவருக்குக் கவலையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை.

கனவு = கற்பனை எண்ணங்களின் ஓட்டம். நனவில் பாடுதல் என்பது எண்ணி எண்ணித் திட்டமிட்டுக் கற்பனைகளைச் சேர்த்துப் பாடாமல் இயல்பாக நனவு நிகழ்ச்சி போல் பாடுவது.

[தொகு] மாறோக்கத்து நப்பசலையார்

'நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம், புலன் அழுக்கற்ற அந்தணாளன், இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றிப், பரந்து இசை நிற்கப் பாடினன்' (புறநானூறு 126)

குட்டுவன் குடகடலில் பொன்னைக் கொண்டுவரும் நாவாய் ஓட்டினான். அப்போது பிற கலங்கள்(நாவாய்க் கப்பல்கள்) செல்லவில்லை. அதுபோலக் கபிலர் பாடும்போது பிற புலவர்கள் பாடுவதில்லையாம்.

[தொகு] கபிலர், பாரியிடம்

[தொகு] கபிலர், பாரி மகளிருடன்

[தொகு] கபிலர், பேகனிடம்

[தொகு] கபிலர், சேரலாதனோடு

[தொகு] கபிலரின் குறிஞ்சிப்பாட்டு

[தொகு] கபிலரின் குறிஞ்சிக்கலி (கலித்தொகை)

[தொகு] கபிலரின் குறிஞ்சி நூறு (ஐங்குறு நூறு)

===கபிலரின் பிற பாடல்கள

[தொகு] கபில நெடுநகர்

வேந்தர்க்குப் பெண் தர மறுத்த மகட்பாற் காஞ்சிப் பாடல் ஒன்றில் (புறநானூறு 337) கபிலர், கபில நெடுநகர் என்னும் ஊரைக் குறிப்பிட்டுள்ளார். பெண் தர மறுக்கப்பட்ட மறவர் மகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவள் பாரியின் பனிச்சுனை போலக் காண்பதற்கு இனியவள் என்றும், (அச் சுனையில் நீராடிய பின்) அவள் தன் கூந்நலைப் புலர்த்தும் அகில் நறும்புகை கபில நெடுநகர் வரையில் கமழும் என்றும் கபிலர் குறிப்பிடுகிறார்.

இதனால் இவ்வூர் பாரியின் பனிச்சுனைக்குப் பக்கத்தில் இருந்தது என்பதை உணரமுடிகிறது. கபிலர் வாழ்ந்த இந்த ஊரை மக்கள் கபில நெடுநகர் என்றனர். இது கபிலருக்குப் பாரி வழங்கிய ஊர் எனலாம்.

[தொகு] கபிலர் பதினொருவர்

திருமால் தனக்குள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளவற்றில் 'பதினொரு கபிலரும்' அடக்கம் என்று கடுவன் இள எயினனார் தம் பரிபாடலில் குறிப்பிட்டுள்ளார். (பரிபாடல் 3)

[தொகு] கபிலை - சொல் விளக்கம்

தொல்காப்பியர் பாடாண் திணைப் பாடல்களின் துறைகளை விரித்துக் கூறும்போது 'கபிலை கண்ணிய வேள்வி நிலை' என்னும் துறை ஒன்றைக் குறிப்பிடுகிறார். (புறத்திணையியல் 35)

இங்குக் கபிலை என்பது பசுவைக் குறிக்கும். தொல்காப்பியரின் இந்தத் தொடர் கோதானத்தைக் குறிப்பிடுகிறது.

வெண்மையும் செம்மையும், வெண்மையும் கருமையும், கருமையும் செம்மையும் என்று நிறம் கலந்த தோற்றம் கொண்ட பசுக்களைக் கபிலைப்பசு என்பது நாட்டுப்புற வழக்கு.

இந்தக் கபிலையைக் கபிலரோடு பொருத்திப் பார்க்கலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D&oldid=983899" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்