ஏறாண் முல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏறாண் முல்லை என்னும் தொடருக்கு ஏறு(சிங்கம்) போன்ற ஆண்மகனின் இருப்புநிலை என்பது பொருள்.

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஏறாண் முல்லை என்பதும் ஒன்று. இது [வாகைத்திணை]]யின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் இரண்டு உள்ளன. [1]

வல்லாண் முல்லை பற்றிக் கூறும் தொல்காப்பியம் [2] இதனைத் தனியே குறிப்பிடவில்லை.

புறப்பொருள் வெண்பாமாலை வாகைத்திணையின் 33 துறைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறது. எதிர்ப்பார் இன்றி ஒடுங்க வைத்து ஏற்றம் பெற்ற குடியின் பெருமையைக் கூறுவது இத்துறை.[3]

வீட்டுக்கு ஒருவராக நாட்டைக் காக்கும் போருக்குச் செல்கிறார்கள். சின்னக் குடிசையில் தூணைப் பற்றிக்கொண்டு நிற்கும் தாயிடம் அவளது மகனைக் கேட்கிறார்கள். அவள் சொல்கிறாள். “என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. எனினும் அவன் போர்களத்தில் உங்களுக்கு முன்னே நிற்பான்” என்கிறாள். [4]

போருக்குச் சென்றவர்களெல்லாம் காயம் பட்டுக் கிடக்கிறார்கள். வேப்பந் தழையை ஒடித்து விசிறுகிறார்கள். போர்த்திறத்தைக் காஞ்சிப் பண் கூட்டிப் பாடுகிறார்கள். ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய் தடவுகிறார்கள். ஒருவன் மட்டும் தேரில் ஏறிச் செல்கிறான். இவன் பகை வேந்தனைச் சாய்ப்பான் போல் காணப்படுகிறான். [5]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறம் 86, 296
  2. தொல்காப்பியம் புறத்திணையியல் 17
  3. மாறு இன்றி மறம் கனலும்
    ஏறாண் குடி எடுத்து உரைத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை – 159
  4. புறம் 86
  5. புறம் 296
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறாண்_முல்லை&oldid=1204878" இலிருந்து மீள்விக்கப்பட்டது