எம். எம். தண்டபாணி தேசிகர்
எம். எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27, 1908 - சூன் 26, 1972) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பொருளடக்கம் |
வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]
தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1952 தியாராசர் ஆராதனை சம்பவம் [தொகு]
1952 தியாராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழைமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழைமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.[1]
நடித்த திரைப்படங்கள் [தொகு]
- பட்டினத்தார் (1935)
- தாயுமானவர் (1938)
- மாணிக்கவாசகர் (1939)
- நந்தனார் (1942)
- திருமழிசை ஆழ்வார் (1948)
விருதுகளும் பட்டங்களும் [தொகு]
- சங்கீத சாகித்திய சிரோமணி பட்டத்தை 1951 ஏப்ரல் 3 ஆம் நாள் எம். பக்தவத்சலம் வழங்கிக் கௌரவித்தார்.
- இசைப்பேரறிஞர் விருது, 1957; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)