உரோச்சட்டர் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோச்சட்டர் தேவாலயம் - வடமேற்குப் பக்கத்திலிருந்து

உரோச்சட்டர் தேவாலயம் (Rochester Cathedral) என்பது கென்ட் மாவட்டத்தில் உள்ள இங்கிலாந்தின் இரண்டாவது மிகப் பழமையான தேவாலயம் ஆகும். இது கி.பி. 604 இல் யூஃது ஆயரால் நிறுவப்பட்டது. தற்போதைய ஆலயத்தின் வேலைப்பாடுகள் கி.பி. 1080 இல் பிரெஞ்சுத் துறவி குண்டல்ப் அவர்களின் காலத்திலிருந்தே துவங்கப்பட்டுள்ளது. நார்மன் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட ஆலயத்தின் நடுக்கூடம், நிலவரை, ரோமானிய வழிப்பாணியில் அமைந்த கட்டிட முகப்பும் இவ்வாலயத்தின் சிறப்பம்சங்கள். பின்னர் தோன்றிய கோதிக் கட்டிடக்கலையும் இவ்வாலயத்தை அழகுபடுத்தியுள்ளது. இவ்வாலயத்தினுள் அமைந்துள்ள நூலகத்தின் முதன்மை வாயிற்கதவு (முன்னனுமதி பெற்றே பார்க்க முடியும்) 14 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இங்கிலாந்தின் சில பழமையானக் கதவுகளில் ஒன்று.[1] டெஃடுசு ரோஃப்பின்சசு என்ற மிகப்பழமையான ஆங்கில சட்ட நூல், இங்குள்ள துறவிகளாலே எழுதப்பட்டது.

வரலாறு[தொகு]

கி.பி. 42 இல் உரோமானியர்கள், உரோச்சட்டர் பகுதிகளை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்து, துரோபிரிவே என்று பெயரிட்டனர். கி.பி. 407 இல் உரோமானியர்கள் வெளியேறிய பின்னர் நிலவிய குழப்ப நிலையை பயன்படுத்தி, சூட்டுகள், கென்ட் கடற்கரை வழியாக மெட்வே பகுதிக்குள் நுழைந்தனர். பின்னர் அய்லஃசபோர்ட் என்ற இடத்தில் பிரித்தானியர்களை தோற்கடித்து, மேற்கு கென்டில் இருந்த சாக்சன்களுடன் இணைத்து கென்ட் இராச்சியத்தை நிறுவினர். இதன் பின்னர் உரோச்சட்டரை சுற்றிய பகுதிகள் செஃடர்வரா லாதே (lathe of Cesterwara) என்று அழைக்கப்பட்டது.

கி.பி. 604 இல், கேன்டர்பரி பேராயர் அகுத்தினார், உரோச்சட்டரில் ஒரு பேராலயத்தை எழுப்பும் பணிக்காக இறைப்பணியாளர் யூஃதுவை அனுப்பினார். இதற்கான நிலத்தை கென்ட் இராச்சியத்தின் மன்னர் ஏத்தல்பர்ட் வழங்கினார். பின்னர் அகுத்தினார் யூஃதுவை உரோச்சட்டரின் முதல் ஆயராக நியமித்தார்.

நோர்மானியர்களின் படையெடுப்பிற்குப் பின்னர் கி.பி. 1077 இல் உரோச்சட்டர் ஆயராக குண்டல்ப் பொறுப்பேற்றார். கி.பி. 1080 இல், சுமார் 450 வருடம் பழமையான உரோச்சட்டர் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில், புதிய ஆலயத்தை எழுப்பி புனித அந்திரேயா திருத்தூதருக்காய் அர்ப்பணித்தார். கி.பி. 1130 இல் ஆலயத்தின் பணிகள் நிறைவடைந்தது.

கி.பி. 1137 இல் நிகழ்ந்த தீவிபத்தில் உரோச்சட்டர் பேராலயம் பெரிதும் சேதமடைந்தது.

கி.பி. 1227 இல் நோர்மானியர்களால் அமைக்கப்பட்ட பாடகர்கள் இருக்கையிடம் புதுப்பிக்கப்பட்டது. கி.பி. 1343 இல், ஆயர் கமோ தி கைத் (Hamo de Hythe) ஆலய கோபுரத்தை உயர்த்தி, நான்கு மணிகளைத் தொங்கவிட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rochester Cathedral - About the Cathedral". Archived from the original on 2015-04-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
  2. Holden, Clive (2015). "ROCHESTER – AN EARLY HISTORY". River Medway. Amberley Publishing Limited. பக். 34-36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781445638034. 

வெளியிணைப்புகள்[தொகு]

  1. உரோச்சட்டர் தேவாலயம் - மெய்நிகர் சுற்றுலா பரணிடப்பட்டது 2016-01-15 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோச்சட்டர்_தேவாலயம்&oldid=3603919" இலிருந்து மீள்விக்கப்பட்டது