உதயதாரகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயதாரகை (Morning Star) ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆகும்.[1] ஆகும். இது அமெரிக்க இலங்கை மிசன் மூலம் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது இதழ் 1841 சனவரி 7 இல் வெளிவந்தது.[1] இப் பத்திரிகை தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது.

முதல் ஆசிரியர்கள்[தொகு]

இப்பத்திரிகை மானிப்பாயைச் சேர்ந்த நேத்தன் ஸ்ட்ரோங் என்ற அம்பலவாணர் சிற்றம்பலம் (இறப்பு: 14 பெப்ரவரி 1894) என்பவரால் வெளியிடப்பட்டது.[2] இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. பஞ்சதந்திரக் கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதயதாரகையில் வெளியிட்டார்.[3] இதற்கு முன்னர் இலங்கையில் தொடங்கப் பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர்.

பத்திரிகையின் நோக்கம்[தொகு]

உதயதாரகை முதல் இதழின் ஆசிரியத் தலையங்கத்தில், ".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 183.
  2. Obituary: Mr Nathan Strong, இந்து சாதனம், 21 பெப்ரவரி 1894
  3. மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 182.

உசாத்துணைகள்[தொகு]

  • கதிரேசு, எஸ்; A Hand Book to the Jaffna Peninsula and a souvenir of the opening of the railway to the North; யாழ்ப்பாணம், 1905, (மறுபதிப்பு: ஏசியன் அஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2004).
  • மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).
  • ஜெபநேசன், எஸ்., இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு 2007 (மீள்பதிப்பு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயதாரகை&oldid=3420301" இலிருந்து மீள்விக்கப்பட்டது