ஈசல் பிடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈசல் என்பது புற்றுகளின் இனபெருக்கத்திற்காக புற்றிலுள்ள ஈசல் புழுவால் உருவாக்கப்படும் ஓர் உயிரி.

ஈசல் உற்பத்தியாகும் காலம்[தொகு]

ஈசல் பங்குனி, சித்திரை மாதங்களில் புற்றிலுள்ள ஒரு ஜோடி ஈசல் புழுக்கள் சிறப்பு தன்மை வாய்ந்த முட்டைகளை இடுகின்றன.அவை பொரிந்து ஈசல்கள் வெளி வருகின்றன.அப்போது அவை மிகச்சிறியதாக நான்கு சிறகுகளுடன் வெண்மை நிறமாக இருக்கும்.அவை புற்றிலுள்ளதாவர உணவை உண்டு ஆடி,ஆவணி மாதங்களில் முழு வளர்ச்சியை அடைகின்றன.அதாவது இணை சேர்வதற்கான வாலிப பருவத்தை அடைகின்றன.அந்நிலையில் அவை பழுப்பு நிறமாக காணப்படும்.

ஈசல் வெளியேறும் காலம்[தொகு]

மழை பெய்யும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் புற்றை விட்டு வெளியேறும்.இவ்வாறு வெளியேறும் காலம் நாட்டுக்கு நாடு பருவகாலம், மழைபொழிவு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.

ஈசல் வெளியேறத் தேவையான காரணிகள்[தொகு]

காற்று;ஈசல்கள் நான்கு இறகுகளை பெற்றிருக்கும்.அந்த சிறகுகளை கொண்டு ஈசல்களால் காற்றை எதிர்கொண்டு பறக்க இயலாது.காற்று வீசாத அமைதியான நேரத்தில்தான் அவை புற்றை விட்டு வெளியேறும்.புற்றிலிருந்து வெளியேறும் ஈசல்கள் புற்றின் அருகிலேயே விழுந்து ஒரு புது புற்றை உண்டாக்குமானால் இடநெருக்கடி,உணவு போட்டி ஆகியவை ஏற்படும்.ஆகவேதான் அவை பறந்து சென்று தூரத்தில் இறங்கி புற்றை உண்டாக்க முயல்கின்றன.

ஈரப்பதம்[தொகு]

ஈசல்கள் புற்றை விட்டு வெளியேறி பறந்து பின் பூமியை அடைந்து தன் சிறகுகளை உதிர்த்து விட்டு தன் இணையை தேடி கண்டுபிடித்து பூமிக்குள் நுழைய வேண்டும் அதற்கு பூமி நல்ல ஈரப்பதத்துடன் இருக்கவேண்டும்.

நிலாவொளி[தொகு]

ஈசல்கள் பெரும்பாலும் இரவில் தான் பறக்கும்.இரவில் பறப்பதால் தன்னை பிடித்து உண்ணும் பிற உயிரிகளிடமிருந்து காத்து கொள்ள முடியும்.நிலா வெளிச்சத்தில் நாலாதிசைகளிலும் பறந்து செல்ல இயலும்.நிலாவொளி இல்லாத காலத்தில் பறக்க வேண்டியிருந்தால் சூரிய உதயத்தின் போது பறக்கும்.

ஈசல் பிடித்தல்[தொகு]

ஈசலை வெளியேற்ற செல்கள் புற்றின் மேல் பகுதியில் ஒன்று முதல் இரண்டு அங்குல நீளத்தில் சற்று மேடாக வாயில் அமைத்து கட்டியிருக்கும். அதற்கு வருவு என மக்கள் அழைக்கின்றனர். பூமி ஈரமாக உள்ள சமயங்களில் இரவு நேரத்தில் செல்கள் அந்த வாய்களை திறந்து வைத்து வானிலையை கண்காணிக்கும்.தகுந்த நேரத்தில் ஈசல்களை வெளியேற்றும்.ஈசல் பிடிப்போர் பகலில் புற்று இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு வருவு கட்டியிருப்பதை உறுதி செய்துகொள்வர்.வருவுகளின் எண்ணிக்கையைக் கொண்டு புற்றிலிருக்கும் ஈசலின் அளவை மதிப்பிடுவர்கள். ஈசல் கொட்டை என்ற ஒரு வகை கொட்டையையும் பெருமருந்து கொடியின் வேர் இரணடையும் வருத்து பொடிசெய்து டப்பியில் அடைத்துகொள்வர்.இரவில் லாந்தர் விளக்கை எடுத்துகொண்டு புற்றை அடைந்து புற்றின் மீது பொடியை தூவி காத்திருப்பர்.பொடியின் மணத்தால் கவரப்பட்ட ஈசல்கள் லாந்தர் விளக்கு ஒளியால் ஈர்க்கபட்டு வெளியேறும்.புற்றின் அருகில் வட்ட வடிவில் குழி வெட்டி அதன் குறுக்கே இரு குச்சிகளை வைத்து அதன் மீது லாந்தர் விளக்கை வைத்து விடுவர். லாந்தர் விளக்கை சுற்றி பறக்கும் ஈசல்கள் குழியில் விழுந்துவிடும்.அவற்றை பைகளில் சேகரித்து எடுத்து வருவர்.

ஈசலைப் பக்குவம் செய்தல்[தொகு]

ஈசலை சாக்குபையில் போட்டு வாய்பகுதியை ஒருவரும் அடிப்பகுதியை மற்றொருவரும் பிடித்துகொண்டு முன்னும் பின்னும் இழுத்து குலுக்குவர்.அவ்வாறு ஆட்டும் போது ஈசலின் இறகுகள் உதிர்ந்துவிடும்.பின் முறத்திலிட்டு புடைத்து இறகுகளை நீக்கி விடுவர்.

ஈசலைச் சமைத்தல்[தொகு]

இறகு நீக்கி சுத்தம் செய்யப்பட்ட ஈசலை கடாயில் இட்டு சிறிது உப்பு சேர்த்து கரண்டியால் கிளறிவிட்டு வேகவைப்பர். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெந்த ஈசலை வெயிலில் நன்கு உலர்த்துவர். ஈரம் போக நன்கு உலர்ந்தபின் ஈசலை கையால் தேய்த்தால் ஈசலின் தலை, கால்கள் உதிர்ந்துவிடும். பின் முறத்தில் இட்டு நன்கு புடைத்து சுத்தம் செய்வர். உலர்ந்த ஈசலை இரு விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கினால் எண்ணெய் வெளியேறுவதை காணலாம். ஈசல் கொழுப்பும் புரதமும் நிறைந்த உணவாகும். இது எளிதில் செரிக்காது. உலர்ந்த ஈசலை அப்படியே உண்ணலாம் அல்லது வெல்லம் சேர்த்தும் உண்ணலாம்.

ஈசலே ஈசலே,
ஈசக் கறையானே,
ஆத்தாளூம் அப்பனும்,
ஆத்தங்கரையிலே செத்துக்கிடக்க,
சில்லாம் பறையைத் தூக்கிக்கிட்டு,
சிலுக்குச் சிலுக்குன்னு ஓடிவா.

இது ஈசல் விளையாட்டுப் பாடல்.[1]

பார்க்க[தொகு]

கறையான் சிறகு முளைத்து ஈசலாகப் பறப்பதில்லை. புதிய புற்றை உருவாக்க அதாவது இனபெருக்கம் செய்ய ராணி-ஈசல் புழு-முட்டை இடும். அம்முட்டையிலிருந்து வெளிவரும் முதிர்வடைந்த புற்றீசல்களே புதுமழை பொழிந்ததும் வெளிவந்து பறக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. விருமாண்டி திரைப்படத்தில் இடம்பெறும் "சண்டியரே சண்டியரே" பாடலின் முன்னிசையில் (prelude) இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

கருவிநூல்[தொகு]

  • பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசல்_பிடித்தல்&oldid=1531889" இலிருந்து மீள்விக்கப்பட்டது