இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124ஏ (Section 124A of the Indian Penal Code)[1] பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களால் 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டு, 1862-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய தண்டணைச் சட்டப் படி பிரித்தானிய இந்தியா அரசுக்கு எதிரான பேச்சு, நடத்தை, கிளர்ச்சியை தூண்டுதல் போன்ற தேசத் துரோகக் குற்றங்களுக்கு கடுமையான தண்டணை வழங்குகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தில் தொகுதி VI -இல் பிரிவு 121ஏ மற்றும் 124ஏ புதிதாக 1870-ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1962 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் "வன்முறையைத் தூண்டுதல்" அல்லது "ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறை வழிமுறைகளின் மூலம் தூக்கியெறியுதல்" என்று இருந்தால் மட்டுமே சட்டப் பிரிவு 124ஏ ஐ பயன்படுத்த வேண்டும் என விளக்கியது.

இந்த சட்டப் பிரிவு 124ஏ பேச்சுரிமைக்கு எதிராகக் கருதப்பட்டது. இந்திராகாந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலையின் போது (25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) , சேசத் துரோக வழக்கில் சிக்கியவர்களை நீதிமன்ற கைது ஆணை இன்றியும், பிணையில் வெளி வரமுடியாதபடியும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.[2][3]

பின்னணி[தொகு]

இந்திய துணைக் கண்டத்தில் இசுலாமிய மதத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் போரிடுவார்கள் என்று அன்றைய இந்தியாவில் இருந்த பிரித்தானிய அரசாங்கம் அஞ்சியது. குறிப்பாக வஹாபி / வாலியுல்லா இயக்கத்தை ஆங்கிலேயர்கள் வெற்றிகரமாக அடக்கிய பின்னர், அத்தகைய சட்டத்தின் தேவை என உணரப்பட்டது. பிரித்தானிய இந்தியா முழுவதும், இந்திய விடுதலைக்கு ஆதரவான ஆர்வலர்களை அடக்குவதற்கு இந்த சட்டப் பிரிவு 124ஏ பயன்படுத்தப்பட்டது, இச்சட்டப் பிரிவின் கீழ் முதன் முதலில் லோகமான்ய திலகர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் குற்றவாளிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டப் பிரிவு 124ஏ விளக்கம்[தொகு]

பிரிவு 124 ஏ. தேசத் துரோகம் எவரேனும், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால் அல்லது மற்றபடி இந்தியாவில் சட்டபூர்வமாக அமைந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அது குற்றமாக கருதப்படும். இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை அல்லது அபாரதம் தண்டனையாக விதிக்கப்படலாம். இதில்,"அவநம்பிக்கை" என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது. இந்தியாவில் விடுதலை முழகத்தை எதிரொலிப்பவர்களை ஒடுக்க இந்த தேச துரோக சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியது. ஆனால், அதே பிரிட்டன் நாட்டில் இந்த சட்டம் 2009இல் நீக்கப்பட்டது. இந்தியாவில் இன்னும் தொடருகிறது.

யார், வார்த்தைகளால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது அறிகுறிகளால், அல்லது புலப்படும் பிரதிநிதித்துவத்தால், அல்லது வேறுவிதமாக, வெறுப்பு அல்லது அவமதிப்பைக் கொண்டுவர முயற்சிக்கிறார்களோ, அல்லது அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு இந்திய அரசு ஆயுள் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து வழங்கலாம். அல்லது மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
* விளக்கம் 1 .— “அதிருப்தி” என்ற வெளிப்பாட்டில் விசுவாசமின்மை மற்றும் பகை உணர்வு ஆகியவை அடங்கும்.
* விளக்கம் 2 .— வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தி ஆகியவற்றை உற்சாகப்படுத்தவோ அல்லது தூண்டவோ முயற்சிக்காமல், சட்டபூர்வமான வழிமுறைகளால் அவற்றின் மாற்றத்தைப் பெறும் நோக்கில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மறுப்பதை வெளிப்படுத்தும் கருத்துகள், இந்த பிரிவின் கீழ் ஒரு குற்றமாக இல்லை.
* விளக்கம் 3 .— வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தி ஆகியவற்றை உற்சாகப்படுத்தவோ அல்லது தூண்டவோ முயற்சிக்காமல் அரசாங்கத்தின் நிர்வாக அல்லது பிற நடவடிக்கைகளை மறுப்பதை வெளிப்படுத்தும் கருத்துகள், இந்த பிரிவின் கீழ் ஒரு குற்றமாக கருதப்படாது.[4]

விமர்சனங்கள்[தொகு]

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் மாற்ற பரிசீலிக்காமல் போனது எதனால் என்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.[5][6] இச்சட்டப் பிரிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்வதால், இந்திய உச்ச நீதிமன்றம் இச்சட்டப் பிரிவை செயல்படுத்தவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.[7]

சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள்[தொகு]

தேசத்துரோகம் குறித்து இந்திய சட்ட ஆணையம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் தேசத்துரோகம் வழக்கில் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக உயர்த்தி என பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தேசத்துரோகம் குறித்த சட்ட ஆணையத்தின் அறிக்கை விரிவான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பெற்று பொது நலனுக்கான நியாயமான முடிவை எடுக்கப்படும் என்றார்.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Section 124A in The Indian Penal Code
  2. Chndrachud, Abhinav (2021-02-22). "The Case to Amend Sedition Law, India's Self-Inflicted Wound". TheLeaflet (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. Utkarsh, Anand (2021-03-04). "Disagreeing with govt is not sedition, says SC". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Section 124A in The Indian Penal Code". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 22 May 2019.
  5. 'தேச துரோக சட்டப்பிரிவு 124ஏ' 75 வருடங்களுக்குப் பிறகும் அவசியமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
  6. பிரித்தானிய கால தேச துரோக சட்டம் எதற்கு?: உச்ச நீதிமன்றம் கேள்வி
  7. தேசத் துரோக சட்ட விதிகள் மறு ஆய்வு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
  8. தேசத்துரோகம் சட்டம்: கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்- மத்திய அமைச்சர்

வெளி இணைப்புகள்[தொகு]