அன்பு
அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.
தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
[தொகு] பொருள்
மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், பிற உறவினர், நண்பர்கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம். அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நூல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.