அந்தோனி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தோனி என்பவர் தூத்துக்குடியை அடுத்த புன்னைக்காயல் என்னும் ஊரில் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் சந்தந்தோனியார் அம்மானை என்னும் தமிழ்ச் சிற்றிலக்கியத்தை உருவாக்கிய புலவர் ஆவார்.

என்றீக்கே என்றீக்கசு என்பவரோடு தொடர்பு[தொகு]

புலவர் அந்தோனி தமிழகத்தில் தமிழ்ப்பணியும் இறைபணியும் ஆற்றிய என்றீக்கே என்றீக்கசோடு (1520-1600) தொடர்பு கொண்டிருந்தார். என்றீக்கசு பாதிரியார் தாம் எழுதிய "அடியார் வரலாறு" (Flos Sanctorum) என்னும் நூலில் புனித அந்தோனியாரின் வரலாற்றை "சுத்தவாளர் அந்தோனி" என்னும் தலைப்பில் பதிவு செய்திருந்தார்.

என்றீக்கசின் வேண்டுகோளுக்கு இணங்க புலவர் அந்தோனி புனித அந்தோனியாரின் வரலாற்றை அம்மானை வடிவத்தில் "சந்தந்தந்தோனியார் அம்மானை" என்ற பெயரில் 1586-1600 காலகட்டத்தில் ஆக்கினார் என்று தெரிகிறது.[1]

சந்தந்தோனியார் அம்மானை[தொகு]

புலவர் அந்தோனி பாடிய இந்த அம்மானை தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. "சந்தந்தோனியார்" என்னும் பெயர் "சந்த்+அந்தோனியார்" என்னும் இருசொற்களின் தொகுப்பாகும். "சந்த்" என்னும் சொல் "sanctus" என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து போர்த்துகீசிய மொழிவடிவம் பெற்றது. அதற்கு "புனித, புனிதர்" (saint, holy) என்பது பொருள்.

சந்தந்தோனியார் அம்மானை பிற்காலத்தில் புனித பதுவை அந்தோனியார் அம்மானை என்னும் பெயர் பெற்றது. நூலின் முதற்பதிப்பு 1892ஆம் ஆண்டு திரிகோணமலை அ.இன்னாசித்தம்பி என்பவரால் யாழ்ப்பாணம் அச்சுவேலி பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் பல பதிப்புகளைக் கடந்து 1992ஆம் ஆண்டு ஆ.பி அந்தோனி இராசு என்பவரால் திருச்சிராப்பள்ளியில் முதற்பதிப்பின் நூற்றாண்டு விழாப்பதிப்பாக வெளிவந்துள்ளது.

நூலின் உள்ளடக்கம்[தொகு]

இந்த அம்மானையில் அந்தோனியார் பிறப்புமுதல் அவர் செய்த அற்புதங்கள், அவர் 1231ஆம் ஆண்டு சூன் 13ஆம் நாள் இறையடி சேர்தல், உடனிருந்த குருக்கள் அவரது உடலை பதுவை நகரில் அடக்கம் செய்தல் ஆகிய அனைத்து வரலாற்றையும் புலவர் பாடியுள்ளார்.

கோவேறு கழுதை நற்கருணையை வணங்கிய கதை[தொகு]

கிறித்தவ மறை உண்மையானதாக இருந்தால் கிறித்தவர்கள் போற்றும் நற்கருணையைத் தனது கோவேறு கழுதை வணங்குமாறு செய்ய வேண்டும் என்று தீயவர் ஒருவர் சபதம் செய்தார். அந்தோனியார் நற்கருணைய்டன் வர கழுதை தன்முன் போடப்பட்ட புல்லையும் தண்ணீரையும் பாராமல் நற்கருணையை நோக்கி ஒடி மண்டியிட்டு வணங்கியதாம். இதனைக் கவிஞர்:

"பாவப் பதிதன் பகர்ந்த உரைப்படி

கோவக் கழுதைதனைக் கூடியபேர்கள் முன்னே

மூன்று நாள்கட்டி முதிய பசியெழுப்பி

ஈண்டு சபையில் எதிர்கொண்டு போகலுற்றான்

புல்லுச் சுமையொருவன் புனலொருவன் கொண்டுவர

எல்லாரும் வேசரிமுன் இட்டார் புல்தண்ணீரை

புல்லும் அருந்தாமல் புனலையும் கண்பாராமல்

நல்லோன் கரத்திருக்கும் நற்கருணையைப் பார்த்து

முட்டிட்டு வேசரிதான் முந்தும் தலைகுனிந்து

இட்டம் புரிந்தவகை எல்லாரும் கண்டார்கள்."

என்று பாடுகிறார்.

நூல் ஆதாரம்[தொகு]

  1. முனைவர் இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, பூரண ரீத்தா பதிப்பகம், தஞ்சாவூர் (வெளியீடு: கிறித்தவ ஆய்வு மையம், திருச்சிராப்பள்ளி), 2010, பக். 58-59.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_(எழுத்தாளர்)&oldid=2762269" இலிருந்து மீள்விக்கப்பட்டது