விரிசுருள் சிரை நோய்
விரிசுருள் சிரை நோய் Varicose veins | |
---|---|
விரிசுருள் சிரை நோயால் பாதிப்படைந்த கால் | |
சிறப்பு | இரத்தநாள அறுவை சிகிச்சை |
சிகிச்சை | குருதிக்குழ் உள்நோக்கு சிகிச்சை |
விரிசுருள் சிரை நோய் (varicose veins) என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும். இவ்வாறு வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் உடலின் மற்ற இடங்களில் தோன்றும் என்றாலும், பொதுவாக இந்நோயானது காலில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் சிக்கலைக் குறிக்கிறது.[1] கால்களில் பாயும் அசுத்தக் குருதியை இதயத்தை நோக்கிச் செலுத்த சிரை ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இவற்றில் வெளிப்புறச் சிரைகள், உட்புறச் சிரைகள் என இரு வகைகள் உண்டு.[2] வெளிப்புறச் சிரைகளில் உள்ள குருதியானது, உட்புறச் சிரைகள் வழியாகப் பெருஞ்சிரைக்குச் சென்று, இதயத்துக்குச் செல்லுகின்றன. இந்தக் குருதியோட்டத்துக்குச் சிரைக் குழாய்களில் உள்ள வால்வுகள் உதவுகின்றன. இந்த வால்வுகளானது, குருதியை உடலில் மேல்நோக்கி மட்டுமே செலுத்தக்கூடியன. குருதி கீழ் நோக்கி வருவதைத் தடுத்துவிடுவன. இது பொதுவான உடலியங்குமுறை. சிலருக்குப் பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியாக அமைவதில்லை அல்லது சில நோய்களின்போது சரியாகப் பணி செய்வதில்லை. இதன் விளைவாக, கால்களில் உள்ள குருதி புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கிச் செல்ல முடியாமல், காலிலேயே தேங்கிவிடுவதுண்டு. இதனால் காலில் தோலுக்கு அடியில் இருக்கும் வெளிப்புறச் சிரைகள் அகன்று விரிந்து வீங்கிக் காணப்படும். பாம்பு போல் சுருண்டு நெளிந்து இருக்கும். சிலந்திபோல் பரவியிருக்கும். கால் வலிக்கும். இதைத் தொடர்ந்து காலில், பாதத்தில் வீக்கம் தோன்றும். இரவு நேரத்தில் வலி குறைந்த மாதிரி இருக்கும். ஆனால், காலில் எரிச்சல் உண்டாகும். தசைகள் இழுத்துக்கொள்ளும். இதற்கு அடுத்த கட்டமாக, இந்த ரத்தக் குழாய்கள் உள்ள இடத்தில் புண் ஆகிவிட்டால், சீக்கிரத்தில் ஆறாது. வருடக்கணக்கில் நீடிக்கும். அங்கு தோல் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும். அரிப்பு ஏற்படும். அதிகம் சொரிந்தால் அல்லது அதில் லேசாக அடிபட்டால் ரத்தம் பீச்சுவது போன்ற சிக்கல்கள் உண்டாகும்.[3]
அறுவை சிகிச்சை அல்லமல் இதந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்தல், நிற்கும்போதும், வேலை செய்யும்போதும் காலுக்கு ‘ஸ்டாக்கிங்ஸ்’ எனும் மீள்காலுறையை அணிந்து கொள்ளுதல் அல்லது பாதம் தொடங்கி முழங்கால் வரை ‘கிரீப் பேண்டேஜ்’ எனும் மீள்துணியைச் சுற்றிக்கொள்ளுதல், படுத்துறங்கும்போது கால்களுக்குத் தலையணை வைத்து உயரப்படுத்திக்கொள்ளுதல், உடற்பருமனானவர்கள், நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் இதற்கு தோலைக் கீறி ரத்தக் குழாயைச் சரி செய்யும் மரபான அறுவைச் சிகிச்சை, லேசர் கொண்டு இதைச் சரிப்படுத்துதல், சிரைக் குழாய்க்குள் மருந்து செலுத்திச் சரி செய்வதல் போன்ற சிகிச்சைகளை நோயாளிகளின் தன்மையைக் கொண்டு ரத்தநாள அறுவை சிகிச்சையாளரால் மேற்கொள்ளப்படுகின்றது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Varicose Veins". 2010-07-06. Archived from the original on 6 July 2010. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016. Mount Sinai Hospital, New York
- ↑ "Understanding Venous Reflux – the cause of varicose veins and venous leg ulcers". 2011. Archived from the original on 2017-10-25. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
- ↑ Żylaki – Przewlekła niewydolność żylna: Zakrzepica – Medycyna Praktyczna: Lekarze pacjentom. Zakrzepica. Retrieved on 2013-09-02.
- ↑ டாக்டர் கு. கணேசன் (11 ஆகத்து 2018). "சிரை நோயிலிருந்து விடுதலை?". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2018.