மொழி விளையாட்டு
Pathu
மதிமொழி விளையாட்டு
[தொகு]பொதுமக்கள் பேசும் மொழி பொதுமொழி. புலவர்கள் மதிநலத்தால் பேசும் மொழி மதிமொழி. மதிமொழியில் செதுமொழி, முதுமொழி, புதுமொழி என்னும் பாங்குகள் உண்டு. புலவர்கள் செந்தமிழில் இயற்றமிழில் எழுதும் பாடல்கள் செதுமொழி. பழம்புலவர்கள் மூதறிவால் எழுதிவைத்த பாடல்கள் முதுமொழி. புதிய புலவர்கள் திரிசொல்லும் கலந்து எழுதும் பாடல்கள் புதுமொழி. இப்படிக் கூடல் நகரில் மொழியை வளர்த்தனர். மொழியை விழாக் கொண்டாடி வளர்த்தனர், விளையாட்டாகப் பேணினர். [1] இது சங்க கால விழா விளையாட்டு. செதுமொழி நிலத்தில் முதுமொழி நீரைப் பாய்ச்சி, அறிவுப்புல நாவால் உழுது புதுமொழி விளைவிக்கும் தொழில்-விளையாட்டை அவர்கள் நடத்தி மகிழ்ந்தனர்.
பிசிமொழி விளையாட்டு
[தொகு]பிசி என்பது விடுகதை. தொல்காப்பியம் இதனை இரண்டு வகைப்படுத்திக் காட்டுகிறது. [2] [3]
ஒருவர் விடுகதை சொல்வார். மற்றொருவர் அதனை விடுவிப்பார். அல்லது எதிர் விடுகதை சொல்லி, அவரவர் விடுகதையை அவரவரே விடுவித்துச் சமனாக்குவார்.
- சில விடுகதைகள்
- தங்கக் கொப்பரை கிழிஞ்சு கிடக்குது தைக்க நாதி இல்லை. பூலாப்பூ பூத்துக் கிடக்குது பொறுக்க நாதி இல்லை அது என்ன? (வானத்தில் மீன்கள்)
- கை உண்டு விரல் இல்லை. கழுத்து உண்டு தலை இல்லை அது என்ன? (சட்டை)
பிணைமொழி விளையாட்டு
[தொகு]புதிதாகப் பிணைத்து இட்டுக்கட்டிச் சொல்வது பிணைமொழி. இதனைத் தொல்காப்பியம் பண்ணத்தி எனக் குறிப்பிடுகிறது. [4]
- பண்ணத்தி
- கொன்றை வேய்ந்த செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே - ஔவையாரின் கொன்றைவேந்தன். (இதில் கொன்றை வேய்ந்த செல்வன் என்பது விடுகதையாக அமைந்துள்ளது)
- இக்காலப் பிணைமொழிகளில் சில
- கக கழு கதை - இது கழுதை என மறைமுகமாகச் சொல்கிறது.
- இல்லுனக்கு இல்லென்ன இல்தெரியும் - உனக்கு என்ன தெரியும் என்பதை இவ்வாறு கூறுவர்.
- எது பெரிது? நூறா, தொண்ணூறா? - சொல்லால் மயக்குதல்
- காக்கா பற பற, குருவி பற பற, கொக்கு பற பற, (மாடு பற பற)
- எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்?
- கம்பராமாயணத்தின் ஆசிரியர் யார்?
- நந்திக் கலம்பகம் யார்மீது பாடப்பட்டது?
- தொடர்வினா
- எங்கே போகிறாய் - ஊருக்குப் போகிறேன்
- என்ன ஊர் - மயிலாப்பூர்
- என்ன மயில் - காட்டு மயில்
- என்ன காடு - ஆர்க்காடு
- என்ன ஆர் - அடையார்
- என்ன வடை - ஆமை வடை
- என்ன ஆமை - குளத்து ஆமை
- என்ன குளம் - செட்டிகுளம் (இப்படித் தெரிந்தவரை விரித்துக்கொண்டே செல்வர்)
நாப்பயிற்சி விளையாட்டு
[தொகு]நாவுக்கு உச்சரிப்புப் பயிற்சி தரும் விளையாட்டுகளைப் பேசுமொழி விளையாட்டாகக் கொள்ளலாம். இவற்றைச் சேர்ந்தாற்போல் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.
- ஓடுற நரியிலே ஒருநரி சிறுநரி, சிறுநரி முதுகிலே ஒருபிடி நரைமயிர்
- மலையிலே ஒருகல் உருளுது புரளுது
- கடல்லையிலே ஒருகல் உருளுது புரளுது, தத்தளிக்குது தாளம் போடுது
- இது யாரு தச்ச சட்டை, எங்க தாத்தா தைச்ச சட்டை
- ஊர் பூவரச மரமெல்லாம் என் பூவரச மரம் (இதைத் திரும்பத் திரும்ப விரைவாகச் சொல்லும்போது 'ஊர்ப் புருசனெல்லாம் என் புருசன்' என வாய் குழறிவிடும்.)
சொற்களஞ்சிய விளையாட்டு
[தொகு]கிடைவரிசையில் படித்தாலும், குத்து-வரிசையில் படித்தாலும் அதே சொற்கள் வருதல்.
|
|
திருப்பிப் படி
[தொகு]திருப்பிப் படிக்கும்போதும் அதே சொல் அல்லது தொடர் வருதல். இதனை மாலை-மாற்று எனச் சித்திரக்கவி கூறும்.
- திதி
- மாமா
- காக்கா
- தேருவருதே
- மோருவருமோ
- விகடகவி
- நீதிபதிநீ
- குடகு
- வாழ்வா
வேடிக்கைப் பாடல்
[தொகு]- அய்யாதுரைக்குக் கல்யாணம்
- அவரவர் வீட்டிலே சாப்பாடு
- கொட்டு மேளம் கோயிலுலே
- வெற்றிலைப் பாக்கு கடையிலே
- சுண்ணாம்பு சூளையிலை
- அய்யாதுரைக்குக் கல்யாணம்
இவற்றையும் பார்க்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! (கலித்தொகை 68) - ↑ நொடியொடு புணர்ந்த பிசி - தொல்காப்பியம் 3-467
- ↑ ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் தோன்றுவது கிளந்த துணிவினானும் என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே - தொல்காப்பியம் 3-478
- ↑ பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப் பாட்டின் இயல பண்ணத்தி(ய்)யே - தொல்காப்பியம் 3-482 அதுவே தானும் பிசியொடு மானும் - தொல்காப்பியம் 3-483