முந்திரா வழக்கு
முந்திரா முறைகேடு வழக்கு, விடுதலை இந்தியாவில் அரசு தொடர்பாக பதிவான முதல் ஊழல் முறைகேடாகும். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஹரிதாஸ் முந்திரா என்ற வணிகருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை, 1957களில் அதன் உண்மையான சந்தை மதிப்பைவிட கூடுதல் மதிப்பில் ரூபாய் 1.26 கோடி பங்குகளை, இந்திய அரசு நிறுவனமான, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வாங்கியதான குற்றச்சாட்டை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்தது.[1]
இந்த வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சக்லா அளித்த அறிக்கையை அடுத்து நேருவின் அரசில் நிதி அமைச்சராக இருந்து, இந்த பங்கு வர்த்தகத்துக்கு அனுமதி தந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.
இந்த வழக்கை மேலும் விசாரிக்க அப்போது பதவி நீட்டிப்பு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த விவியன் போஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி குழுவிற்கு ரூபாய் 1.5 இலட்சமும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மத்திய குழுவிற்கு ரூபாய் 1 இலட்சமும், ஹரிதாஸ் முந்திரா நன்கொடை அளித்ததற்கு கைம்மாறாகவே அவரது நிறுவனத்தின் பங்குகளை, இந்திய ஆயுள்காப்பீடு நிறுவனம், கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக நீதிபதி விவியன் போஸ் கண்டறிந்தார்.
10 சூன் 1959 அன்று புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, நீதிபதி விவியன் போசின் இந்தக் குற்றச்சாட்டுகள் கற்பனை என்றும், நீதிபதி விவியன் போசுக்கு அறிவு குறைவு என்றும் நேரு விமர்சித்தார். பின்னர் தமது தவறை உணர்ந்த பிரதமர் ஜவகர்லால் நேரு நீதிபதிக்கு கடிதம் வாயிலாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.