உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு மரபுவழிக் கறுப்புப் பிரேட்டா
பிரேட்டாவின் எசுப்பானிய வடிவம் - பிலிப்பி சேகரிப்பு

பிரேட்டா (biretta) என்பது, மூன்று அல்லது நான்கு உச்சிகள் அல்லது "முகடு"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி. சில தொப்பிகளில் உச்சியில் பந்து போன்ற குஞ்சம் ஒன்று பொருத்தப்பட்டு இருப்பது உண்டு. மூன்று உச்சிகளைக் கொண்ட பிரேட்டாக்களை ரோமன் கத்தோலிக்கக் குருமார்களும், சில ஆங்கிலிக்க, லூத்தேரன் குருமார்களும் அணிவர். நான்கு உச்சிகளைக் கொண்ட தொப்பி கத்தோலிக்க சமயப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறுபவர்கள் அணியும் கல்விசார்ந்த உடையின் ஒரு பகுதியாக அணியப்படுகிறது. சனல் தீவுகள் போன்ற சில நாடுகளில் வழக்கறிஞர்களும் பிரேட்டாக்களை நீதிமன்றங்களில் அணிவதுண்டு.

பிரேட்டாக்களின் தோற்றம் குறித்துத் தெளிவான தகவல்கள் கிடையா. 10 ஆம் நூற்றாண்டில் இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மத்திய காலத்தில் பயன்பாட்டில் இருந்த மென்மையானதும், சதுரமானதுமான கல்வி சார்ந்த தொப்பியில் இருந்து இது வளர்சியடைந்து இருக்கலாம் என்பது ஒரு கருத்து. 1311 ஆம் ஆண்டின் பேர்காமோ ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் பின்னர் குருமார்கள் பிரேட்டாவை அணியவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னரே இது சமயத் தொடர்பான உடைகளில் பரவலாகப் பயன்படத் தொடங்கியது. இத்தொப்பிகள் சிலவற்றில் காணப்படும் குஞ்சம் பிற்காலத்திலேயே சேர்க்கப்பட்டது. தொடக்ககாலப் பிரேட்டாக்களில் குஞ்சம் இருக்கவில்லை.

வழிபாடு தொடர்பான பிரேட்டா

[தொகு]
மேற்றிராணியார் வில்லெம் யாக்கோபசு எய்க் குங்கும நிறப் பிரேட்டாவை அணிந்திருக்கும் தோற்றம்

கர்தினல்கள் முதல் குருமார்கள், குருத்துவ மாணவர்கள் உட்பட எல்லாத் தரங்களிலும் உள்ள குருமார்கள் பிரேட்டாவை அணிவர். கர்தினல்கள் அணியும் பிரேட்டா குங்கும நிறம் கொண்டபட்டுத் துணியால் ஆனது. இரண்டாவது வத்திக்கான் அவைக் கூட்டத்தின் பின்னர், வழமையாக கர்தினல்களுக்கு வழங்கப்படும் கலேரோ என்னும் தலையணிக்குப் பதிலாக பிரேட்டோ வழங்கும் மரபு ஏற்பட்டது. மேற்றிராணிமார்கள் அணியும் பிரேட்டா சிவப்புக் கலந்த இளஞ்சிவப்பு நிறமானது. மாணவக் குருமார் உட்பட்ட பிற தரங்களில் உள்ள குருமார்கள் கறுப்பு நிற பிரேட்டாக்களை அணிவர். பாப்பாண்டவர்கள் பிரேட்டாவைப் பயன்படுத்துவது இல்லை. பதினாறாவது பாப்பாண்டவர் பெனடிக்ட் கமௌரோ என்னும் பழையகாலத் தலையணியை மீண்டும் அறிமுகப்படுத்தியதில் இருந்து அதுவே பாப்பாண்டவர்களுக்கு உரிய தலையணியாக இருந்து வருகிறது.

கர்தினல்களின் பிரேட்டாக்களில் குஞ்சம் இருப்பதில்லை. ஊதா நிறக் குஞ்சம் கொண்ட பிரேட்டாக்கள் மேற்றிராணிமாருக்கு உரியவை. வத்திக்கானில் குருமாருக்குள் உயர்ந்த தரத்தில் உள்ளவர்கள் (prelates) சிவப்புக் கொஞ்சம் கொண்ட கறுப்புத் தொப்பியை அணிவர். மறை மாவட்டக் குருமார் அணியும் பிரேட்டாவில் கறுப்புக் குஞ்சம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருப்பதுண்டு. குருத்துவ மாணவர்கள் குஞ்சம் இல்லாத பிடேட்டாக்களை அணிவதற்கே உரித்துடையவர்கள், எனினும் இதற்கு முறைப்படியான விதிகள் எதுவும் இல்லை. பெனடிக்டியர், பிரான்சிசுக்கியர், டொமினிக்கியர்களைப் போல் மடங்களைச் சார்ந்த குருமாரும், சந்நியாசிகளாக இருப்பவர்களும் தமக்கே உரித்தான வழக்கங்களைக் கொண்டிருப்பதுடன், பிரேட்டாக்களை அவர்கள் அணிவது இல்லை. எனினும், பிரிமொன்ட்ரி ஒழுங்கைச் (Order of Prémontré) சேர்ந்த குருமார்களில் சிலர் வெண்ணிறப் பிரேட்டாக்களை அணிவது உண்டு. யேசு சபையினர் போன்ற மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பிந்திய கிறித்தவ ஒழுங்குகள் சிலவற்றைச் சேர்ந்த குருமார்களிற் சில தரத்தினர் பொதுவாகக் குஞ்சம் இல்லாத கருநிறப் பிரேட்டாக்களை அணிகின்றனர்.

இரண்டாவது வத்திக்கான் உலகக் கிறித்தவ அவை அமர்வுக்குப் பின்னர் குருமார்களுடைய உடைகள் தொடர்பான விதி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் பிரேட்டாவின் பயன்பாடு ஒழிந்துவிடவில்லை. வழிபாட்டில் இருக்கும்போது அணியும் சரியான தலையணியாக இது இன்றும் பயன்பட்டு வருகிறது. எனினும், இதை விரும்பினால் மட்டும் அணியும் வகையில் மாற்றம் செய்துள்ளனர். கர்தினால்களும், மேற்றிராணிமாரும் இதைப் பயன்படுத்தி வந்தாலும், குருமார்கள் இதனைக் குறைவாகவே பயன்படுத்தி வருகின்றனர். சில குருமார்கள், திறந்த வெளியில் இடம்பெறும் இறந்தவர்களை அடக்கம் செய்தல், ஊர்வலங்கள், கூட்டு வழிபாடுகள் போன்றவற்றின் போது பிரேட்டாக்களை அணிகின்றனர்.

கல்விசார்ந்த பிரேட்டா

[தொகு]
முழுக் கல்விசார்ந்த உடையில் இருக்கும் எசுப்பானியக் கல்லூரித் தலைவர். எசுப்பானியப் பல்கலைக் கழகங்களில் அணியப்படும் கல்விசார் தலையணியான பிரேட்டாவை அணிந்துள்ளார்.

ஐரோப்பாவில் மத்தியகாலப் பல்கலைக் கழகங்களில் புதிய மாணவர்களுக்கு முதுநிலை, முனைவர் பட்டங்களை வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக பிரெட்டேசியோ எனப்படும் பிரேட்டா அணிவிப்பதும் இடம்பெறும். இது பட்டம் பெறுபவரின் தகைமைக்குச் சான்றாக அடையாளப் புத்தகம் வழங்குவதுடன் இடம்பெறும்.[1] இதற்குப் பயன்பட்ட நான்கு மூலைகள் கொண்ட பிரேட்டா சமயத் தேவைகளுக்கு ஆனவையல்ல.[2] கல்விசார்ந்த பிரேட்டாக்கள், ஐரோப்பாவிலும், பிரித்தானியத் தீவுகளிலும் பல்வேறு பாணிகளைச் சேர்ந்த கல்விசார் பிரேட்டாக்களாக வளர்ச்சியடைந்தன. இன்று சில மதஞ்சாராத பல்கலைக்கழகங்களில் கல்விசார் தலையணிகள் உண்மையான பிரேட்டாக்களாக இல்லாவிட்டாலும் கூட அவற்றையும் பிரேட்டாக்கள் எனவே அழைக்கின்றனர்.

கிறித்தவ மதத் தொடர்பான பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்தைப் பெறுபவர்களுக்கு, அத்தகுதிக்கான முக்கிய அடையாளமாக இருப்பது நான்கு உச்சிகளைக் கொண்ட பிரேட்டாவே.[3] தொடக்க நிகழ்வுகளிலும், பிற கல்வித் தொடர்புடைய நிகழ்வுகளிலும், கிறித்தவ சமயப் பல்கலைக் கழகங்களையும், பாடப் பிரிவுகளையும் சேர்ந்த முனைவர்கள், முனைவர் பட்டத்துக்குரிய பிரேட்டாக்களை அணியும் உரிமை கொண்டவர்கள்.

குறிப்புகள்

[தொகு]
  1. Olmert, Michael (1996). Milton's Teeth and Ovid's Umbrella: Curiouser & Curiouser Adventures in History, p.178. Simon & Schuster, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0684801647.
  2. Ephemerdies Liturgicae, 1901, vol. XIV, 214: "Biretum doctorale quatuor apicibus constans, iam diximus, confundendum non est cum clericali, ac proinde nullimode in choro adibendum.
  3. John Abel Nainfa, Costume of Prelates of The Catholic Church: According To Roman Etiquette, 164.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேட்டா&oldid=4176270" இலிருந்து மீள்விக்கப்பட்டது