உள்ளடக்கத்துக்குச் செல்

பாங்க்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்க்சி
பிறப்புஇயற்பெயர்: தெரியாது
பிறந்த நாள்: தெரியாது
பிறந்த இடம்: தெரியாது
அறியப்படுவதுசுவர் ஓவியங்கள்
தெரு ஓவியம்
பிரிஸ்டல் திரைமறைவு பண்பாட்டுச் செயற்பாடு
சிற்பம்
நையாண்டி
சமூக விமர்சனம்

பாங்க்சி என்பவர் இன்னாரென்று உறுதிப்படுத்தப்படாத, இங்கிலாந்தைச் சேர்ந்த சுவரோவியரும், அரசியற் செயற்பாட்டாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். சுவிஸ் கலைஞரான மீஸ்டர் டெர் ஸ்பீகல் (Maître de Casson) பேங்க்ஸியாக இருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன[1]. இதை மாட்ரே டி காசன் தனது இணையதளத்தில் மறுக்கிறார்[2]. 2008இல் நாளிதழ் ஒன்று நடத்திய புலனாய்வும், 2016இல் நிலவியல் தடவரைவு முறையில் நடந்த ஆய்வொன்றும் அவர் ராபின் கன்னிங்ஹாமாக இருக்கலாம் என்று சுட்டுகின்றன.[3][4] நையாண்டி மிகுந்த அவரது தெரு ஓவியங்களும், அதிரடியான வாசகங்களும், தனித்துவமான துளைவழி படியெடுத்தல் பாணியில் அமைந்த சுவரோவியங்களைக் கசப்பு நகைச்சுவை கலந்து அளிப்பவை. இவரது அரசியல், சமூக விமர்சனப் படைப்புகள் உலகெங்கிலும் உள்ள தெருக்களிலும், சுவர்களிலும், பாலங்களிலும் இடம்பெற்றுள்ளன.[5] பாங்க்சியின் படைப்புகள் ஓவியர்களும், இசைக்கலைஞர்களும் சேர்ந்து பங்களித்த "பிரிஸ்டல் திரைமறைவுப் பண்பாட்டுச் செயற்பாடுகளின்" பின்புலத்தில் பிறந்தவையாகும்.[6]

அரசியல், சமூகக் கருப்பொருட்கள்

[தொகு]
அடித்து விழுந்து வாங்கு (Shop Until You Drop) (மே பேர், இலண்டன்). பாங்க்சி கூறியது: "முதலாளித்துவம் நொறுங்கும்வரை இவ்வுலகை மாற்ற நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அதுவரை நம்மைத் தேற்றிக்கொள்ள அனைவரும் பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகவேண்டியதுதான்."[7]

சுவரோவியம் என்பது அடித்தட்டு வர்க்கத்தின் பழிவாங்கல் நடைமுறை அல்லது கெரில்லா போர்முறைகளில் ஒன்று என்றும், தம்மிலும் பெரிய, வலுவான எதிரியிடமிருந்து அதிகாரம், நிலப்பரப்பு, புகழ் ஆகியவற்றை பறித்துக்கொள்ள உதவுகிறது என்றும் பாங்க்சி கருத்துரைத்தார்.[8] "உங்களிடம் தொடர்வண்டி நிறுவனம் ஒன்று சொந்தமாக இல்லையென்றால் அப்படியொன்றை வரைந்துகொள்ளுங்கள்" என்று சொல்லும் பாங்க்சி இந்த "வர்க்கப் போராட்டத்தில்" ஒரு சமூக வர்க்கக் கூறு இருப்பதாகக் கருதுகிறார்.[8] பாங்க்சியின் படைப்புகளில் மையமாகக் குவிந்த அதிகாரத்தைக் கேலிசெய்யும் வேட்கை தெரிகிறது. அதிகாரம் இருப்பதுவும், தமக்கு எதிராகச் செயற்படுவதுவும் உண்மையே என்றாலும் அஃதொன்றும் அவ்வளவு செயற்திறன் கொண்டதல்ல; அதை எளிதில் ஏமாற்ற முடியும், ஏமாற்ற வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தமது படைப்புகள் உணர்த்தும் என்றும் நம்புகிறார்.[8]

போர் எதிர்ப்பு, மிகைநுகர்வு எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வாதிகார எதிர்ப்பு, அரசுவேண்டாக் கொள்கை, மறுப்பியல், இருத்தலியல் போன்றன இவரது படைப்புகளில் காணலாகும் சமூக, அரசியல் கருப்பொருட்கள். பேராசை, வறுமை, இரட்டை நிலைப்பாடு, சலிப்பு, மனக்கசப்பு, அபத்த மனநிலை, சமுக அந்நியமாதல் போன்ற மாந்தர்நிலைக் கூறுகளையும் விமர்சிக்கிறார்.[9] பாங்க்சி பொதுவாக காட்சிப்புலம் சார்ந்த படிமங்களையே தனது படைப்புகளில் சார்ந்திருந்தாலும், அவரது பல நூல்களிலும் அரசியல் சார்ந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "யாரெல்லாம் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்" என்ற தனது பட்டியலைத் தொகுத்துச் சொல்லும்போது, "பாசிசக் குண்டர்கள், மத அடிப்படைவாதிகள், இந்த மாதிரி யாரையெல்லாம் சுடவேண்டும் என்று உங்களுக்குச் சொல்பவர்கள்" என்று பட்டியலிடுகிறார்.[10] தனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லும்போது " நான் இவ்வுலகின் நிலை கண்டு எந்த அளவுக்குத் துயருறுகிறேன் என்றால், நான் தின்னும் இரண்டாவது ஆப்பிள் பணியாரத்தைத் தின்று முடிக்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்" என்கிறார்."[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dobke, Hans-Heiner (2019-12-09). "Ist Banksy der Leipziger Maler Maître de Casson?". TRENDKRAFT (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  2. "Maître de Casson". maitredecasson.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  3. Sherwin, Adam (3 March 2016). "Banksy: Geographic profiling 'proves' artist really is Robin Gunningham, according to scientists". Independent. http://www.independent.co.uk/news/people/banksy-geographic-profiling-proves-artist-really-is-robin-gunningham-according-to-scientists-a6909896.html. பார்த்த நாள்: 4 March 2016. 
  4. Hauge, Michelle V.; Stevenson, Mark D.; Rossmo, D. Kim; Le Comber, Steven (3 March 2016). "Tagging Banksy: using geographic profiling to investigate a modern art mystery". Journal of Spatial Science. doi:10.1080/14498596.2016.1138246. http://www.tandfonline.com/doi/abs/10.1080/14498596.2016.1138246?journalCode=tjss20. 
  5. "The Banksy Paradox: 7 Sides to the World's Most Infamous Street Artist[தொடர்பிழந்த இணைப்பு], 19 July 2007
  6. Baker, Lindsay (28 March 2008). "Banksy: off the wall – Telegraph". The Daily Telegraph (London: Telegraph Media Group). http://www.telegraph.co.uk/culture/art/3672135/Banksy-off-the-wall.html. பார்த்த நாள்: 24 June 2009. 
  7. Wall and Piece, by Banksy, 2006, Century, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84413-787-2, pg 204
  8. 8.0 8.1 8.2 Banksy Graffiti: A Book About The Thinking Street Artist by The Huffington Post, 30 August 2012
  9. Jonathon Keats (3 August 2012). "Why Banksy Deserves An Olympic Gold More Than Usain Bolt – Forbes". Forbes.com. http://www.forbes.com/sites/jonathonkeats/2012/08/03/why-banksy-deserves-an-olympic-gold-more-than-usain-bolt/. பார்த்த நாள்: 1 January 2013. 
  10. Wall and Piece, by Banksy, 2006, Century, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84413-787-2, pg 110
  11. Wall and Piece, by Banksy, 2006, Century, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84413-787-2, pg 155
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்க்சி&oldid=3350160" இலிருந்து மீள்விக்கப்பட்டது