பஞ்சரத்நம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சரத்நம் என்னும் சொல் ஐந்து ரத்தினக் கல் பதிந்த அணிகலன். இந்த அணிகலன் போலச் சிறப்புற்று விளங்கும் நூல் பஞ்சரத்நம்.

பாரதிதாசன் கவிதைகளில் பஞ்சரத்நம் என்னும் நூல் ஒன்று உள்ளது. மயிலம் ஶ்ரீசிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் என்னும் பெயரில் அந்த நூல் உள்ளது.[1]

கும்பகோணம் ஆசிரியர் தி. க. பெரியண்ணம்பிள்ளை இயற்றிய இரண்டு பஞ்சரத்நம் நூல்கள் உள்ளன. [2]

  1. திருவாரூர் தியாகராச சுவாமி பஞ்சரத்நம்
  2. திருவாரூர் அல்லியங்கோதையம்மை பஞ்சரத்நம்

இந்த நூல்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்கள் ஆசிரிய விருத்தத்தால் ஆனவை. மேலும் வெண்பா யாப்பில் அமைந்த காப்புப்பாடல் ஒன்று நூலின் தொடக்கத்திலும், கலிவிருத்தம் யாப்பில் அமைந்த பாடல் ஒன்று நூலின் இறுதியிலும் உள்ளன.

திருவாரூர் தியாகராச சுவாமி பஞ்சரத்நம்[தொகு]

எடுத்துக்காட்டு, பாடல் ஒன்று:

எத்தனைக் கொடுங்குணம் இருந்திடினும் அவைகளை

எண்ணாமல் ஏழையேனுக்கு
இரங்கி வரம் அருள்புரிந்திடல் வேண்டும் எவை எனில்
எழிலார்ந்த கமல மலரை

ஒத்த நின் கழல் இணையை நித்தமும் கண்கள்

கண்டு ஓயாது களிகூரவும்
ஓது நின் சீர்த்தியே என் செவிகள் கேட்கவும்
உன்னையே தலை பணியவும்

பத்தியொடு அரசமலர் கையெடுத்தே பூசை பண்ணிடவும்

எண்ணினேன் கண்
பாலனே கையில் கபாலனே சூலனே
பகரும் ஆரூர் மூலனே

சித்தமுடன் இவை தந்து எனைத் துயர் புரிந்திடும்

தீவினை தவிர்த்து ஆள்வையே
தேவிராசற்கு அரிய பூவிராசற்கு எளிய
தியாகராசக் கடவுளே (5)

திருவாரூர் அல்லியங்கோதையம்மை பஞ்சரத்நம்[தொகு]

எடுத்துக்காட்டுப் பாடல் ஒன்று:

பூ ஏறு பொழில் புடை உடுத்து ஒளிர் இபக்காடு

பொலியும் அகிலாண்ட உமையாய்ப்
பொங்கும் அண்ணாமலையில் உண்ணாமுலைப் பெயர்
புனைந்து அமரும் மா தேவியாய்

நா ஏறு புகழ் பூண்ட காளத்தி மா மலையில்

நன்கு அமரும் ஞானம் முன்னர்
நண்ணு பூங்கோதை எனும் நாம நாயகியுமாய்
நலம் மலித் திருத் தில்லையில்

பாவேறு சிவகாம வல்லியாய் அடியார்கள்

பரவு திரு ஐயாற்றிலே
பகர் அறம் வளர்த்த உமை ஆகிப் பொலிந்திடும்
பண்புடையள் நீ அல்லையோ

ஆ எறு பரன் இடத்து அன்னையே என்னை ஆள்

அன்னையே ஆரூரில் வாழ்
அல்லியங் கோதை இமை செல்லெனும் கோதை இமை
அல்லியம் கோதை உமையே

எண்ணிக்கையால் பெயர் பெற்ற சில நூல்கள்[தொகு]

இரட்டைமணி மாலை - இரண்டு வகையான யாப்பமைதி கொண்ட பாடல்களால் படப்படுவது
மும்மணி மாலை - மூன்று வகையான யாப்பமைதி கொண்ட பாடல்களால் படப்படுவது
நான்மணி மாலை - நான்கு வகையான யாப்பமைதி கொண்ட பாடல்களால் படப்படுவது
திரிகடுகம் - 3 கருத்துகள் அடங்கிய பாடல்களைக் கொண்ட பல பாடல்களைக் கொண்ட நூல்
நான்மணிக் கடிகை - 4 கருத்துகள் அடங்கிய பாடல்களைக் கொண்ட பல பாடல்களைக் கொண்ட நூல்
சிறுபஞ்சமூலம் - 5 கருத்துகள் அடங்கிய பாடல்களைக் கொண்ட பல பாடல்களைக் கொண்ட நூல்
பதிகம் - 10 பாடல்கள் கொண்ட நூல்
5 பாடல்கள் கொண்ட நூல் - பஞ்சரத்ம்

மேற்கோள்கள்[தொகு]

  1. [https://www.tamilvu.org/library/l9210/html/l92100in.htm பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளின் முழுத்தொகுப்பு]
  2. கும்பகோணம் ஆசிரியர் தி. க. பெரியண்ணம்பிள்ளை இயற்றிய (1) திருவாரூர் தியாகராச சுவாமி பஞ்சரத்நம் (2) திருவாரூர் அல்லியங்கோதையம்மை பஞ்சரத்நம் ஆகிய இரு நூல்கள் சென்னையிலிருக்கும் பு. வீ. அப்பாசாமி முதலியாரின் மீனாட்சியம்மை கலாநிதி என்னும் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது -- ஆண்டு: கர வருடம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சரத்நம்&oldid=3842845" இலிருந்து மீள்விக்கப்பட்டது