நூலக விபரப்பட்டியல்
நூலக விபரப்பட்டியல் என்பது ஒரு நூலகத்தில் அல்லது பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நூலக வலையமைப்பு ஒன்றைச் சேர்ந்த நூலகங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள உசாத்துணை உருப்படிகள் தொடர்பான பதிவு ஆகும். நூல்கள், கணினிக் கோப்புகள், வரைபடங்கள், நிலப்படங்கள் போன்ற, நூலகத் தொடர்புடைய, தகவல் சார்ந்த பொருட்களே உசாத்துணை உருப்படிகள் எனப்படுகின்றன.
அட்டை நூல்விபரப் பட்டியல்கள் பல தலைமுறைகளாகவே நூலகப் பயனாளிகளுக்குப் பழக்கமானவை. ஆனால், அண்மைக் காலத்தில் இவ்வாறான அட்டைப் பட்டியல்களுக்குப் பதிலாக இணையவழிப் பொது அணுக்க விபரப்பட்டியல் புழக்கத்துக்கு வந்துள்ளது. இணையவழிப் பொது அணுக்க விபரப்பட்டியல் வசதி கொண்ட நூலகங்கள் சில இன்னும் அட்டை விபரப்பட்டியலையும் பயன்படுத்துகின்றன. எனினும், இவற்றுட் பல நூலகங்களில் அட்டை விபரப் பட்டியல்கள் இரண்டாம் நிலை வளங்களாகவே பயன்படுகின்றன என்பதுடன், பெரும்பாலும் அவை இற்றைப்படுத்தப்படுவதும் இல்லை. இவ்வாறான நூலகங்களில், அட்டை விபரப்பட்டியல்களைக் கடைசியாக இற்றைப்படுத்திய ஆண்டு குறித்த அறிவிப்பையும் வைத்துள்ளன. அட்டை நூல்விபரப் பட்டியலைப் பயன்படுத்தாமல் விடுவதன் மூலம் இடம் மிச்சப்படுவதால், நூலகத்தின் பிற தேவைகளுக்கு இடவசதி கூடுதலாகக் கிடைக்கிறது.
நோக்கம்
[தொகு]உசாத்துணை முறைமை ஒன்றின் நோக்கங்களைக் குறித்து 1876 ஆம் ஆண்டில் முதன் முதலாக எடுத்துரைத்தவர் சார்லசு ஆம்மி கட்டர் (Charles Ammi Cutter) என்பவர். அவரது "அச்சிட்ட அகரமுதலி விபரப்பட்டியலுக்கான விதிகள்" (Rules for a Printed Dictionary Catalog) என்னும் நூலில் இது குறித்து எழுதியுள்ளார். கட்டருடைய கூற்றின்படி நூல்விபரப்பட்டியல்களில் நோக்கங்கள் பின்வருமாறு.[1]
- நூலாசிரியர், தலைப்பு, விடயம், வகை போன்ற ஏதாவது ஒன்று தெரியுமானால் அதைப் பயன்படுத்தி நூலைத் தேடுதல்.
- நூலாசிரியர், விடயம், வகை என்பவற்றின் அடிப்படையில் நூலகத்தில் என்னென்ன உள்ளன என்பதைக் காட்டுதல்.
- பதிப்பு, நூலின் தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நூல்களைத் தெரிவு செய்ய உதவுதல்.
20 ஆம் நூற்றாண்டின் பல காலகட்டங்களிலும் உருவாக்கப்பட்ட நவீன வரைவிலக்கணங்களிலும் மேற்படி நோக்கங்களை இனங்கண்டுகொள்ள முடிகிறது. 1960/61 காலப்பகுதியில், "லுபெட்சுக்கி" (Lubetzky) என்பவராலும், பாரிசில் இடம்பெற்ற பட்டியலாக்கக் கொள்கைகள் மீதான மாநாட்டிலும் கட்டரின் நோக்கங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன. நூல்விபரப்பட்டியலின் நோக்கங்கள், செயற்பாடுகள் என்பவற்றை விளக்குவதற்கான மிக அண்மைக்கால முயற்சி 1998 ஆம் ஆண்டில், "உசாத்துணைப் பதிவுகளுக்கான செயற்பாட்டுத் தேவைகள்" (Functional Requirements for Bibliographic Records) என்னும் மாதிரி உருவாக்கத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஒரு நூலகப் பயனாளியின் செயற்பாடுகள் தேடுதல், அடையாளங்காணல், தெரிவுசெய்தல், பெற்றுக்கொள்ளல் என்னும் நான்கும் ஆகும்.
நூலகம் ஒன்றில் என்னென்ன உசாத்துணை உருப்படிகள் இருக்கின்றன என்பதைக் காட்டும் ஒரு பதிவாக அல்லது கணக்கு வைப்பாகவும் நூல்விபரப்பட்டியல்கள் அமைகின்றன. நூல் விபரப்பட்டியலில் ஒரு நூல் பற்றிய பதிவு இல்லை என்றால், அந்த நூலகத்தில் அந்த நூல் இல்லை என்றே பொருள்படும். எனவே விபரம் அறிந்த நூலகத் திருடர்கள், தாம் பிடிபடக்கூடிய வாய்ப்புக்களைக் குறைப்பதற்காக, நூலைத் திருடும்போது, விபரப்பட்டியல் அட்டையையும் திருடிச் செல்வது உண்டு.[2]
தகவல்கள்
[தொகு]நூல் விபரப்பட்டியல் ஒன்றில் ஒரு நூல் குறித்த என்னென்ன விபரங்கள், என்ன வடிவில் பதியப்பட வேண்டும் என்பதற்கான தரமுறைகள் உள்ளன. பொதுவாகப் பின்வரும் தகவல்கள் ஒரு நூலின் விபரப்பட்டியல் பதிவில் காணப்படும்.
- நூலாசிரியர்
- நூலின் தலைப்பு
- பதிப்பு விபரம்
- வெளியீட்டு விபரம்
- நூலின் பௌதீக விபரங்கள்
- தொடர்
- குறிப்புக்கள்
- ISBN இலக்கம்
- பட்டியல் பதிவுத் தலைப்புக் குறிப்புக்கள்
வகைகள்
[தொகு]நூல் விபரப்பட்டியல்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் பின்வருவன அடங்கும்.
- நூலசிரியர் விபரப்பட்டியல்
- தலைப்பு விபரப்பட்டியல்
- அகரமுதலி விபரப்பட்டியல்
- சிறப்புச்சொல் விபரப்பட்டியல்
- கலப்பு அகரமுதல் விபரப்பட்டியல் வடிவங்கள்
- முறைசார்ந்த விபரப்பட்டியல்
குறிப்புகள்
[தொகு]- ↑ பைரூஸ், எம். பீ. எம்., 2009, பக். 3, 4.
- ↑ The curious tale of the stolen books, by Martin Vennard for BBC News Magazine, April 24, 2013.