உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் விவசாயக் கூலி ஒப்பந்தங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் ஏறத்தாழ அடிமைகள் போல் எவ்வித உரிமையுமின்றி வாழ்ந்தனர். பெரும்பாலானோர் தலித்துக்கள். சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டும், கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆட்பட்டும் வாழ்ந்தனர். பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் விவசாயக் கூலி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன .

களப்பால் ஒப்பந்தம்

[தொகு]

1944இல் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு களப்பால் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தின் அம்சங்கள்:

  1. பண்ணையாட்கள் மீது நடத்தப்படும் சாட்டையடி, சாணிப்பால் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
  2. தினக்கூலி 2 படி (2லிட்டர்); அறுவடையில் கலத்திற்கு (48 லிட்டர்) 3 படி (3லிட்டர்)[1]

மன்னார்குடி ஒப்பந்தம்

[தொகு]

1944 டிசம்பரில் மன்னார்குடி ஒப்பந்தம் போடப்பட்டது இதன்படி,

  1. பண்ணையாளர் தினக்கூலி 3 படி (3 லிட்டர்)
  2. அறுவடை தானியத்தில் 1/7 பங்கு.
  3. அரசாங்க முத்திரை மரக்காலில் (4லிட்டர்) குத்தகை நெல் அளிக்க வேண்டும். குத்தகைக்கு ரசீது கொடுக்க வேண்டும்.

பின்னர் தஞ்சை செசன்ஸ் நீதிபதி தீர்ப்பின் படி பண்ணையாளர் கூலி 3 1/2 படி (3 1/2 லிட்டர் )யாக உயர்த்தப்பட்டது.[1]

மாயூரம் (மயிலாடுதுறை) ஒப்பந்தம்

[தொகு]

28.10.1948 அன்று மாயூரம் (மயிலாடுதுறை) ஒப்பந்தம்

  1. ஆண்கள் கூலி 1 மரக்கால் (4 லிட்டர்)
  2. பெண்கள் கூலி 3/4 மரக்கால் (3லிட்டர்)
  3. அறுவடைக் காலத்தில் வேலைக்கு வராவிடில் ஒவ்வொரு தினத்துக்கும் இரண்டு மரக்கால் (8 லிட்டர்) கூலியில் பிடித்தம் செய்யப்படும்.

பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், 1952

[தொகு]

23.8.1952 அன்று பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு வேலிக்கு (6 ஏக்கர் 66 சென்ட்) மேல் நிலம் உள்ளவர்களிடம் சாகுபடி செய்யும் எந்த சாகுபடிதாரரையும் நிலத்தை விட்டு வெளியேற்றக் கூடாது. பண்ணையாளருக்கு 6 மாதச் சம்பளம் அல்லது ரூ. 150 அளித்து எழுதி வாங்கிக் கொண்டு விடுவிக்க வேண்டும் என்றது. இச்சட்டத்திற்குப் பின்பு மிராசுதாரர் -பண்ணையாளர் என்ற உறவு மாறி, விவசாயத் தொழிலாளர்கள் தினக்கூலியாக மாற்றப்பட்டனர். நிலைமை இப்படி மாறிய பிறகு, விவசாய வேலை இல்லாத காலங்களில் குறிப்பாக ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வேலைவாய்ப்பு ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. எனவே அரை வயிற்றுக்காவது சாப்பிட வேண்டுமென்பதற்காக நிலச்சொந்தக்காரர்களிடம் தானியங்களைப் (நெல், கேழ்வரகு, கம்பு போன்றவைகள்) பெற்றுக் கொண்டு அறுவடைக் காலங்களில் குறைவான கூலிக்கு வேலை செய்யவேண்டும். இது தவிர வாங்கிய கடனை அடைப்பதற்காக குடும்பம் முழுவதும் எழுதப்படாத அடிமைகள் போல் உழைக்க வேண்டும் என்ற சூழல் உருவானது.

குறைந்தபட்சக் கூலிச் சட்டம் , 1948

[தொகு]

ஒன்றிய அரசு குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தை 1948ல் நிறைவேற்றியது. ஆனால் தமிழகத்தில் 1953ல் தான் அதற்கான விதிகள் வகுக்கப்பட்டன. 28.11.1959 அன்று தஞ்சை நீங்கலாக தமிழ்நாடு முழுவதற்குமான குறைந்தபட்சக் கூலி அறிவிக்கப்பட்டது. இதில் 1957இல் 15வது முத்தரப்பு மாநாட்டில் டாக்டர் அக்ராய்ட் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2600 கலோரி தேவை, வீட்டுவாடகை மொத்தச் செலவில் 10 சதமானம், மருந்து, சுகாதாரம், கல்வி, மின்சாரம், போக்குவரத்து மற்றும் துணிகளுக்காக 20 சதமானம் என்பது அந்த குறைந்தபட்சக் கூலி அறிவிப்பில் பிரதிபலிக்கவில்லை. மேலும் குறைந்தபட்சக் கூலியை செயல்படுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகள் உறுதியாக இல்லை.

கீழ்வெண்மணி போராட்டமும் , கணபதியா பிள்ளை கமிஷன் பரிந்துரைகளும்

[தொகு]

கீழ்வெண்மணி 1968 டிசம்பர் 25 அன்று விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெளியூர் ஆட்களைக் கொண்டு வயது வேலையில் இறக்கினர். இவைகள் அனைத்தையும் எதிர்த்துத் தான் கூலி உயர்வு பெற முடிந்தது. இவர்களின் ஒற்றுமை, சங்கமாக இருப்பதுதான் பலமாக இருந்தது. சங்கம், ஒற்றுமையை உடைத்திட நிலப்பிரபுக்கள் கூட்டாகச் சேர்ந்து அவர்களுக்கென சங்கம் அமைத்துத் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தினர். அதன் உச்சக் கட்டம் தான் வெண்மணியில் 44 உயிர்கள், குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தீக்கிரையாக்கப்பட்டது.வெண்மணி பயங்கரத்திற்கு, தியாகத்திற்கு பின்னர் கணபதியா பிள்ளை கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையில், வெளியாட்கள் இறக்குமதிதான் பிரச்சனைக்குக் காரணம். உள்ளூர் ஆட்களுக்கு வேலை அளிக்க வேண்டும். ஒரே விதக் கூலி அளிக்க வேண்டும் என்றது.மேலும் கடைநிலை ஊழியன் பெறும் ஊதியம் கூட விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படா விட்டால் அவர்கள் எப்படி வாழ முடியும் எனக் கேள்வி எழுப்பியது. அதன் பின்னர் , 3.3.1976ல் தான் உழவுக்கு 5 மணி நேரம்; இதர வேலைகளுக்கு 7 மணிநேரம் என நேரம் வரையறுக்கப்பட்டது. சம வேலைக்கு சம கூலி மற்றும் வயது வந்தவர், வயது வராதவர் எனப் பிரிக்கப்பட்டது.

1997க்குப் பின்

[தொகு]

27.08.1997 அன்று அமைக்கப்பட்ட கோலப்பன் தலைமையிலான குழு கிராமப்புற மக்களின் வாழ்நிலை பற்றி ஆய்வு செய்து 43 பரிந்துரைகளை அளித்தது. 28.10.1999ல் அமலுக்கு வந்த கூலியின் போது தான் ஆண்களுக்கு 6 மணிநேரம், பெண்களுக்கு 5 மணி நேரம் என வேலை நேரம் தீர்மானிக்கப்பட்டது.இதன் பின்னர் 8.7.2005 மற்றும் 1.10.2009ல் கூலி விகிதம் திருத்தியமைக்கப்பட்டது. 2009ல் கூலி ரூ. 100.இக்கூலி விகிதம் இதுவரை மாற்றியமைக்கப்படவில்லை. ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்தது ரூ. 167. இதே ஒன்றிய அரசு விவசாயத் தொழிலாளர் குறைந்தபட்சக் கூலி ரூ.182 என அறிவித்ததைக் கூட இத்திட்டத்திற்கு கொடுக்கவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தஞ்சை மாவட்ட களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  • சிபிஐ(எம்) பொன்விழா , தீக்கதிர் சிறப்பு மலர் , 2015