தாலாட்டுப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பக்கம்: '''அறிமுகம்''' தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையைய...
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி தாலாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: ஒன்றினைக்க
(வேறுபாடு ஏதுமில்லை)

14:49, 7 மே 2010 இல் நிலவும் திருத்தம்

அறிமுகம்

தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.

பாடல் 1

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே.


இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.

பாடல் 2

உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?

பாடல் 3

பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.

பாடல் 4

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !

பாடல் 5

ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.

பாடல் 6

ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!


சேகரித்தவர்: த.கமலக்கண்ணன் மற்றும் வீ. சீனிவாசன்

இடம்: அண்ணா பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,கோயம்புத்தூர் மாவட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலாட்டுப்_பாடல்&oldid=521069" இலிருந்து மீள்விக்கப்பட்டது