சிந்தாமணிச் சுருக்கம்
சிந்தாமணிச் சுருக்கம் என்னும் நூல் 15-ஆம் நூற்றாண்டில் பகழிக்கூத்தரால் இயற்றப்பட்டது. சிந்தாமணிச் சுருக்கம் என்னும் இந்த நூலுக்குப் பகழிக்கூத்தர் வைத்த பெயர் ‘சிந்தாமணி விளக்கம்’.
சீவகசிந்தாமணி நூலிலுள்ள கருத்துகளைச் சுருக்கிச் சொல்லும் நூலாக இஃது அமைந்துள்ளது. சீவக சிந்தாமணியில் இலக்கணையார் இலம்பகம் வரையில் உள்ள 10 இலம்பகங்களுக்கு மட்டும் சிந்தாமணிச் சுருக்கம் கிடைத்துள்ளதாக மு. ராகவையங்கார் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலில் அது வரையில் உள்ள பாடல்கள் 318. ஒவ்வொரு பாடலும் 14 சீர் கொண்ட கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். இவற்றின் விருத்தங்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.
இந்நூல் மதுரையில் அரங்கேற்றப்பட்டது என்பதை அடியில் தரப்பட்டுள்ள இந்நூலின் பாடலால் அறியலாம். இந்தப் பாடலை, இந்நூலிலுள்ள பாடலுக்கும், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்துக்கும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
கொல்லையில் இரும்புனக் குற்றியை அடைந்தபுல்
- கோடா தெனப்பழமை நூல்
- கூறும் திறத்தைக் குறித்துக் கருத்துடன்
- கூறினேன் என்னுடைய புன்
சொல்லையும் பொருளையும் காதையிற் படுவழுத்
- தொகையையும் அளந்து கண்டு
- சோர்வுரைக் கப்பெரும் பாரமோ பணைமுலைத்
- துடியிடைப் பவளவாய் வெண்
முல்லைநகை அங்கயற் கண்ணுமை மடந்தையுடன்
- முன்னே முளைக்கும் பிரான்
- முடிசூடும் எம்பிரான் மூவாத தம்பிரான்
- முத்தமிழ்த் திருஆல வாய்
எல்லைதனில் மதுரைமா நகரியில் இருந்திவை
- எடுத்துரைத் தேன்ஆத லால்
- இத்தல விசேடத்தை எண்ணியும் பெரியோர்கள்
- இகழப் படார் கா ணுமே.
சிந்தாமணி மாலை என்னும் பெயருடன் வேறு நூல் ஒன்று இருப்பதாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005