உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொக்கான் தரையில் இருந்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். இந்தியாவில் இவ்விளையாட்டை சொட்டாங்கல் அல்லது சொட்டாங்காய் என்பார்கள். இவ்விளையாட்டுக்குச் சமதரை முக்கியமானது. முந்திய காலங்களில் மூன்று சல்லிக்/கூழாங் கற்களையோ அல்லது ஐந்து சல்லிக்/கூழாங் கற்களையோ வைத்துத்தான் கொக்கான் வெட்டியுள்ளார்கள். காலப்போக்கில் கோலியின் வரவுக்குப் பின் இரண்டு கற்களும், ஒரு கோலியும் அல்லது நான்கு கற்களும், ஒரு கோலியும் என்று வைத்து விளையாடும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. கோலியோடு விளையாடும் போது ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் விளையாடுவார்கள். சீமெந்து விறாந்தை கோலியோடு கொக்கான் வெட்டுவதற்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் கோலி மேலெழும்பாது.

தேவையானவை

[தொகு]

கொக்கான் வெட்டுவதற்கு ஒரு கோலியும், இரு சிறிய கற்களும் அல்லது ஒரு கோலியும், நான்கு சிறிய கற்களும், அல்லது மூன்று/ஐந்து சல்லிக்/கூழாங் கற்களும் சமதரையும் வேண்டும்.

கொக்கான் வெட்டும் முறை

[தொகு]

முதலில் கைகளுக்குள் கற்களை வைத்துக் கொண்டு கோலியை மேலெறிந்து விட்டு, அது கீழே விழுந்து மீண்டும் மேலெழுந்து விழுவதற்குள், சுட்டு விரலால் நிலத்தைத் தொட்டு விட்டு கோலியை ஏந்த வேண்டும்.

கோலியை இரண்டு தரம் தரையில் மோத விட்டாலோ, நிலத்தில் சுட்டு விரல் படா விட்டாலோ, கோலியை பிடிக்காமல் விட்டாலோ, பிடிக்கும் போது கைகளுக்குள் உள்ள கற்களில் ஒன்று கீழே விழுந்து விட்டாலோ விளையாடுபவர் தோற்றவராவார். எந்தக் கட்டத்திலும் கோலி இருதரம் தரையைத் தொடக் கூடாது.

இரண்டாவதாக, கோலியை மேலெறிந்து விட்டு கற்களைக் கீழே நிலத்தில் போட வேண்டும். கோலி நிலத்தில் வீழ்ந்து மேலெழுந்ததும் இரண்டு கற்களை எடுத்து விட்டு கோலியை ஏந்த வேண்டும். இரண்டு கற்களை எடுக்கும் போது மற்றைய இரண்டு கற்களிலும் விரல்கள் பட்டு விடக் கூடாது. மீண்டும் கோலியை மேலெறிந்து... மற்றைய இரண்டு கற்களையும் அதே முறையில் எடுக்க வேண்டும்.

மூன்றாவதாக, இரண்டாவது முறை போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் எடுக்கும் போது ஒவ்வொரு கல்லாக இரண்டு கற்களை எடுக்க வேண்டும். மீண்டும் அதே போல மற்றைய இரண்டு கற்களையும் எடுக்க வேண்டும். கற்களை எடுக்கும் கையாலேயே கோலியையும் ஏந்த வேண்டும். ஏந்தும் போது கோலி கற்களில் பட்டு நிலத்தில் வீழ்ந்து விட்டாலோ கற்களில் ஏதாவது வீழ்ந்து விட்டாலோ விளையாடுபவர் தோற்றவராவார்.

நான்காவதாக, இரண்டாவது, மூன்றாவதைப் போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் கற்களை எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும்.(இதன் போது கற்களைச் சிதற விடாமல் ஒன்றாக நிலத்தில் போடுவது நல்லது.)

ஐந்தாவதாக, கற்களைப் போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மார்பிளை ஏந்த வேண்டும். இதன் போது கொஞ்சம் விரைவு காட்டாது விட்டால் கோலியை விட்டு விடுவீர்கள்.

ஆறாவதாக, நான்காவது முறையைப் போல நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். கற்களை எடுக்கும் போதும் நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும். ஆனால் கற்களைப் போடும் போதோ, அள்ளி எடுக்கும் போது கோலியை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.

ஏழாவதாக, ஐந்தாவது முறையைப் போல கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். ஆனால் ஆறாவதைப் போல, கற்களைப் போடும் போதோ, சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்கும் போதோ கோலியை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.

எட்டாவது, (பழம்) கற்களையும் மார்பிளையும் ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் ஏந்த வேண்டும். ஐந்தையும் ஏந்தி விட்டால் மீண்டும் அந்த ஐந்தையும் ஒன்றாக மேலெறிந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். பிடித்து விட்டால் ஐந்து புள்ளிகள். புறங்கையிலும் ஏந்தி, ஒன்றிரண்டு தரையிலும் வீழ்ந்து விட்டால் புறங்கையில் ஏந்தியதை மீண்டும் மேலெறிந்து அது கீழே வருவதற்கு இடையில் தரையில் வீழ்ந்ததையும் எடுத்துக் கொண்டு மேலெறிந்ததையும் ஏந்தி விட வேண்டும். புறங்கையில் எத்தனை கற்கள் வந்ததோ அத்தனை புள்ளிகள். எறிந்து ஏந்தும் போது ஒன்று தவறி வீழ்ந்தாலும் விளையாடுபவர் தோற்றவராவார்.

ஒவ்வொரு முறையும் ஒருவர் தோற்று விட்டால் அடுத்தவர் தான் தோற்ற இடத்திலிருந்து தொடர வேண்டும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கான்&oldid=1990602" இலிருந்து மீள்விக்கப்பட்டது