உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளோ காவியமோ (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளோ காவியமோ
கள்ளோ காவியமோ
நூலாசிரியர்மு. வரதராசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைசமூகப் புதினம்
வெளியீட்டாளர்பாரி நிலையம்

கள்ளோ காவியமோ என்பது மு. வரதராசன் எழுதிய ஒரு தமிழ்ப் புதினம். ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி வரையிலும் படும் துன்பத்தையும் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் இறுதிக் காலம் வரை நிழல் போலத் தொடர்ந்து வரும் உறவைப் பற்றியும் இந்நாவலில் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.

கதைச்சுருக்கம்

[தொகு]

தாயை இழந்து, குடிகாரத் தந்தையினால் பயனின்றி அத்தையின் முரட்டுக் கெடுபிடிக்குள் வாழ்க்கை நடத்தும் சிறுமியாக மங்கை. தற்செயலாகத் தொடர்வண்டி நிலையத்தில் எதிர்கொள்ளும் குடும்பத்தோடு வெளியூர் சென்று அக்குடும்பத்தினரின் வீட்டு வேலைக்காரியாகிறாள். அவ்வீட்டுப் பெரியவரின் தூண்டுதலின் பேரில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்கிறாள். செய்தித்தாள்களையும் வார, மாத இதழ்களையும் படித்து உலக ஞானம் பெறுகிறாள். பெரியவரின் மகனான அருளப்பனும் மங்கையும் தத்தமக்குள் மெளனமாகக் காதல் வளர்க்கின்றனர் சொல்லிக்கொள்ளாமலேயே. திடீரென்று அருளப்பனின் சகோதரிக்கு வீட்டு வேலைக்காக மங்கை இடம்பெயர்க்கப்படுகிறாள். மனப்போராட்ட்த்துடன் மங்கை பெங்களூர் அடைகிறாள். வேலைக்காரியாகத் தன் பணியைத் தொடர்கிறாள். அருளப்பனின் தந்தைக்கு இருவரின் காதலும் தெரிய வர, மங்கையை வரவழைத்து இருவருக்கும் மணம் செய்துவைத்து தனிவீட்டில் குடிவைக்கிறார். மகிழ்வான இல்வாழ்வின் அடையாளமாகத் தேன்மொழி பிறக்கிறாள்; வளர்கிறாள். எதிர்பாராத சூழலில் மங்கை மீது அருளப்பனுக்கு மனக்கசப்பு ஏற்பட மங்கை கணவனையும் தேன்மொழியையும் விட்டுப் பிரிந்து பம்பாய் செல்கிறாள். அங்கொரு மார்வாடியின் துணையோடு அவரின் உணவு விடுதியில் வடநாட்டுப் பெண்ணுருவில் மேற்பார்வையாளராகிறாள். மங்கையின் பிரிவிற்குப் பிறகு, அருளப்பன் தன்மீதான தவறை உணர்கிறான். ஆண்டுகள் கழிந்தும் மங்கை திரும்பவில்லை. மங்கை இறந்துவிட்டதாகத் தேன்மொழி நம்பவைக்கப் படுகிறாள். பணிநிமித்தமாகப் பம்பாய் செல்லும் அருளப்பன் எதிர்பாரா விதமாக உணவுவிடுதியொன்றில் வடநாட்டுப் பெண் உருவில் மேற்பார்வையாளராக இருக்கும் மங்கையைச் சந்திக்கிறான். இருவரும் ஊர் திரும்புகின்றனர். மருமகளை மனதார வரவேற்கிறார் பெரியவர். மகள் தேன்மொழியோ மங்கையைச் சிறிதும் ஏற்க மறுக்கிறாள். மங்கை, மன உளைச்சலால் நோய்வாய்ப்படுகிறாள். அவள் மரணிக்கும் பொழுதில் மகள் தேன்மொழி “அம்மா” என்றழைக்கிறாள். கதை நிறைவடைகிறது.

விருதுகள்

[தொகு]
  • தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது[1].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளோ_காவியமோ_(நூல்)&oldid=3284928" இலிருந்து மீள்விக்கப்பட்டது