கணவாய் மாரியம்மன் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனவாய் மாரியம்மன் கோயில் தமிழ்நாடு, தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோயில் ஆகும். கோயிலைச் சுற்றி இயற்கையான மரங்கள் அமைந்து குளுமையாக இருப்பதோடு அமைதியையும் ஏற்படுத்துகிறது.

இந்தக் கோவிலுக்குச் செல்ல தர்மபுரியிலிருந்து கடத்தூர் வழியில் 15 கி.மீ தொலைவில் உள்ள மாரியம்மன் நகர் என்ற நிறுத்தத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.

பெயர்க் காரணம்[தொகு]

இந்த அம்மனுக்குக் கனவாய் மாரியம்மன் என ஏன் பெயர் வந்தது என்பதற்கு ஒரு பழங்கால கதை ஒன்று உள்ளது. தற்போது மூக்கனூர் மலை என அழைக்கப்படும் பெரியமலையின் தொடர்ச்சி மலையான குப்பைமலைக்கும் அதன் அருகில் இருக்கும் கருங்குப்பை என அழைக்கப்படும் மலைக்கும் இடையில் கணவாய் ஒன்று உள்ளது. கடத்தூர் பகுதியை சேர்ந்த வணிகன் ஒருவன் பல தூரத் தேசங்களுக்குச் சென்று வணிகம் மேற்கொண்டு தங்கம், வைரம் வைடூரியம் மாணிக்கம் முத்து பவளம் போன்ற பொருள்களை ஈட்டினான். தான் சேர்த்த செல்வங்களை எடுத்துக்கொண்டு தன் குதிரையில் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்தான். அவ்வாறு வரும்போது குப்பை மலைக்கும் கருங்குப்பை மலைக்கும் இடையில் உள்ள கணவாயைக் கடக்கும் சூழல் ஏற்பட்டது.

அடர்ந்த காட்டுப்பகுதியான கணவாயில் தன் குதிரையின் துணையோடு வேறு துணையின்றி தான் உழைத்துப் பெற்ற பொருள்களோடு பயணிக்கலானான். அடர்ந்த கணவாயை நெருங்கும் தறுவாயில் தன் பின்னால் யாரோ சிலர் பின் தொடர்வதாக உணர்ந்தான். திகிலுடன் திரும்பிப் பார்த்தான். அங்கே முகமூடி அணிந்த ஐந்து கொள்ளையர்கள் குதிரையில் அவனைப் பின் தொடர்ந்தனர். குதிரையை வேகமாக ஓட்டிக்கொண்டே தன் குலதெய்வமான மாரியம்மனிடம் வேண்டிக்கொண்டான். தன்னைப் பின்தொடரும் கொள்ளையரிடமிருந்து காப்பாற்றுமாறு உள்ளம் உருக வேண்டினான்.

சிறிது நேரத்தில் தனக்கும் கொள்ளையருக்குமான தூரம் அதிகமாவதை உணர்ந்தான். என்ன காரணம் என்று பார்த்தான் தன் பின்னால் வந்த கொள்ளையர்களுக்குப் பின்னால் வீரமங்கை ஒருத்தி வௌ்ளைக் குதிரையில் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்ட பின்னர் கொள்ளையர்கள் மறைந்து போயினர். கொள்ளையர்களுக்குப் பின்னால் வௌ்ளைக் குதிரையில் வந்த அந்த பெண் உருவத்தை வணிகன் பின் தொடர்ந்தான். அவ்வுருவம் படைசால்பட்டி என்ற ஊரின் தென்மேற்கே உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் மறைந்து போனது. இதனைக் கண்ட வணிகன் தன்னை காப்பாற்றியது தன் குலதெய்வமான மாரியம்மன் தான் என நம்பினான். அந்த உருவம் மறைந்த இடத்திலேயே ஓர் ஆலயம் எழுப்பினான். தன்னைக் கணவாயில் காப்பாற்றியதால் அதில் எழுந்தருளிய அம்மனுக்குக் கணவாய் மாரியம்மன் என அழைத்து வந்தான்.

படைசால்பட்டி என அழைக்கப்பட்ட ஊர் கால ஓட்டத்தில் மருவி ஒடசல்பட்டி என ஆனது. ஒடசல்பட்டியில் இருந்த இக்கோயில் தற்போது அதனை மையமாகக் கொண்ட மாரியம்மன் நகர் என்ற சிற்றூராகப் பிரிந்துள்ளது.

இப்போதும் கடத்தூரைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பெரும்பாலான மக்களுக்குக் கனவாய் மாரியம்மனே குலதெய்வமாக உள்ளது.

அம்மனின் புகழை மாரியம்மன் நகரில் வசிக்கும் கவிஞர் கோவிந்தராசு அவர்கள்

"மும்மலை குன்றின்
அடிவாரத்தில் நின்று
கள்வர்களை தடுத்து
காத்தருளிய
கனவாய் மாரியம்மனே!"

என்று பாடியுள்ளார்