உள்ளடக்கத்துக்குச் செல்

எச். எஸ். சிவப்பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
H.S.Shiva Prakash

ஹெச். எஸ். சிவபிரகாஷ் (H.S. Shivaprakash, பிறப்பு: 1954) கன்னட மொழியின் முன்னணி கவிஞர் மற்றும் நாடகாசிரியர்.  புது தில்லி ஜவஹர்லால நேரு பல்கலையில் கலை மற்றும் அழகியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர். இந்திய கலாசார உறவுகளுக்கான மன்றத்தின் கீழ் இயங்கும் தாகூர் மையம் என்றழைக்கப்படும் பெர்லின் கலாசார மையத்தின் இயக்குநர்.  ஒன்பது கவிதைத் தொகுதிகள், பன்னிரண்டு நாடகங்கள் மற்றும் பல நூல்களின் ஆசிரியர்.  இவரது படைப்புகள் ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிய, ஜெர்மன், போலிஷ், ஹிந்தி, மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  கன்னடம், இந்தி, மணிப்புரி, ராபா, அஸாமி, போடோ, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இவரது நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.  வசன இலக்கியம், பக்தி இயக்கங்கள், சூஃபி முதலான மெய்யியல் மரபுகள் ஆகியவற்றில் நிபுணராக அறியப்படுபவர்.[1][2][3]

வாழ்வும் பணியும்

[தொகு]

சிவபிரகாஷ் ஜூன் 1954-இல் பெங்களூரில் பிறந்தார்.  இவரது தந்தை வீரசைவ அறிஞரான சிவமூர்த்தி சாஸ்திரி, மைசூர் பேரரசரின் அவையில் பணிபுரிந்தவர்.  பெங்களூர் பல்கலையில் ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்றபின் கர்நாடக அரசுப்பணியில் ஆங்கில விரிவுரையாளராக சேர்ந்தார் சிவபிரகாஷ்.  பெங்களூர் மற்றும் தும்கூரிலுள்ள கல்லூரிகளில் இருபது வருடங்கள் ஆங்கிலம் கற்பித்தார்.  1996-இல், சாகித்ய அகாடமி வெளியிடும் ‘இந்திய இலக்கியம்’ என்னும் இருமாத இதழின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.  2001-இல் ஜவஹர்லால் நேரு பல்கலையில் இணைப் பேராசிரியராக சேர்ந்தார்.  தற்போது அழகியல் மற்றும் நிகழ்த்துகலைத் துறையில் பேராசிரியராக உள்ளார்.  2000-இல் ஐயோவா பல்கலையின் எழுத்துப் பள்ளியில் பன்னாட்டு எழுத்துப்பணி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது அதன் மதிப்புறு ஆய்வாளராக இருக்கிறார்.  மூன்றாண்டுகளுக்கு பெர்லின் தாகூர் மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கவிஞர்

[தொகு]

1977-இல் மிலரேபா என்ற முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டபோது அவருக்கு வயது 23.  கன்னடக் கவிதையின் புதிய குரலாக உடனடி கவனம் பெற்றது அது.  1983-இல் வெளியான மளேபிட்ட நெலதல்லி என்ற இரண்டாவது தொகுதியே அவருக்கு புகழும் பாராட்டும் தேடித் தந்தது.  சாமகர பிமவ்வா என்ற கவிதை உடனடி பிரபலம் பெற்றது.  அதன்பின் அனுக்‌ஷண சரிதே, சூர்யஜாலா, மலயே மண்டபா, மத்தே மத்தே என்ற நான்கு தொகுதிகளும், மறுரூபகளு, நன்ன மைநகர என்னும் இரு மொழிபெயர்ப்புத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.  இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு தற்கால குஜராத்தி கவிதைகளின் மொழிபெயர்ப்பான ‘சமகாலீன குஜராத்தி கவிதெகளு’ என்ற தொகுப்பும், மலையாளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பான ‘மனசந்தரா’ என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளன.  இவரது கவிதைகள் மெய்யியல் குறியீடுகளையும், கனவுப்படிமங்களையும், தொன்மங்களையும், அன்றாட வாழ்வுக் கருக்களையும் கொண்டு ஆற்றலின் இயல்பையும் நவீன வாழ்வின் முரண்களையும் சித்தரிப்பவை.

நாடகாசிரியர்

[தொகு]

1988-இல் சிவபிரகாஷ் தனது முதல் நாடகமான மஹாசைத்ராவை பதிப்பித்தார்.  ‘சமுதாயா’ என்ற நாடகக் குழுவிற்காக சி.ஜி. கிருஷ்ணசுவாமி இதனை மேடையாக்கமாக அமைத்தது பெரும் வரவேற்பு பெற்றது.  12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரசைவரான பசவண்ணாவின் வாழ்வையும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்நாடகம் கல்யாண நகரத்தின் கைவினைஞர்-புனிதரின் போராட்டங்களை மார்க்சீய நோக்கில் விவரிக்கிறது. கன்னட இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாக ஏற்கப்பட்டது இந்நாடகம்.  கன்னடத்தில் பசவண்ணாவைக் குறித்து எழுதப்பட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் மிகச்சிறந்தவையாகக் கருதப்படும் மூன்று நாடகங்களில் மஹாசைத்ர ஒன்று. பி. லங்கேஷின் ’சங்க்ராந்தி’ கிரீஷ் கர்னாடின் ’தலேதண்டா’ ஆகியவை பிற இரண்டு நாடகங்கள்.

இந்நாடகத்திற்காக சிவப்பிரகாஷ் கன்னட சாகித்ய அகாடமி விருது பெற்றார்.  சுல்தான் திப்பு, ஷேக்ஸ்பியரே ஸ்வப்னனௌகே, மந்தேஸ்வாமி கதாப்ரசங்க, மதாரி மதியா, மதுரேகாண்டா, மாதவி, மாத்ரிகா, மகரசந்திரா, சதி, காசண்ட்ரா, மடுவேஹென்னு ஆகியவை இவரது பிற நாடகங்கள்.  ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியரை’ கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஃபெடரிக் கார்சியா லோர்காவின் ‘தி ஷுமேக்கர்ஸ் ப்ராடிஜியஸ் வைஃப்’ என்ற நாடகத்தை மல்லம்மன மனே ஹோட்லு என்ற பெயரிலும் ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’தை மரணயகன திருஷ்டாந்தா என்ற பெயரிலும் மொழியாக்கம் செய்துள்ளார். 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தலித் புனிதரைப் பற்றிய மந்தேஸ்வாமி கதாபிரசங்கா என்ற நாடகம் சுரேஷ் அங்கவல்லியால் 300-க்கும் மேற்பட்ட முறை மேடையேற்றம் கண்டுள்ளது.  இது அதிகம் அறியப்படாதிருந்த மந்தேஸ்வாமி பற்றிய ஆர்வத்தைத் தூண்டி கன்னட கல்விப்புலத்தில் பெரும் ஆராய்ச்சிகள் நிகழ காரணமானது.  இவரது நாடகங்கள் பெரும்பாலும் மார்க்சியம் மற்றும் சைவ மெய்யியல் – குறிப்பாக வீரசைவம் மற்றும் காஷ்மீர சைவம் – ஆகியவற்றால் தூண்டப்பெற்றவை.  சூஃபியிசக் கூறுகளும், மஹாயான, ஜென் பௌத்த மெய்யியல் கூறுகளும் இவரது நாடகங்களில் இடம்பெறுவன.  வடிவரீதியாக இவரது நாடகங்கள் ஜப்பானிய நோ அரங்கையும் ப்ரெக்டின் காவிய அரங்கையும் ஒட்டியவை.

மஹாசைத்ர சர்ச்சை

[தொகு]

கர்நாடகாவின் 3 பல்கலைகளில் மஹாசைத்ர பாடமாக பரிந்துரைக்கப்பட்டது.  1995-இல் பதிப்பிக்கப்பட்டு ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு குல்பர்கா பல்கலையில் இது பாடமாக பரிந்துரைக்கப்பட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது.  லிங்காயத்துகளில் ஒரு பிரிவினர் ஜகத்குரு மாதே மஹாதேவியின் தலைமையில் இதனை எதிர்த்தனர்.  பசவண்ணாவை தவறாக படம்பிடித்துக் காட்டுவதால் நாடகத்தை தடைசெய்ய வேண்டும் என்று கர்நாடக அரசை கோரினர்.  நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு பல்கலையின் பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.  டெல்லியின் திறந்தநிலைப் பல்கலை ஒன்றின் பேராசிரியர் இளங்கலை பாடப்புத்தகத்திற்கென பசவண்ணாவைக் குறித்து ஒரு பாடம் எழுதப்போய் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை கருவாகக் கொண்டு 2003-இல் கீதா ஹரிஹரன் எழுதிய ‘இன் டைம்ஸ் ஆஃப் சீஜ்’ என்ற புதினத்திற்கு இந்த சர்ச்சை தூண்டுதலாயிருந்திருக்கக் கூடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Transmutations of Power and Desire in Bhakti Expressions
  2. Ki. Ram.Nagaraj, ""Milarepa" Kuritu", in Milarepa, Kannada Sangha, Christ College, Bangalore, 1977
  3. Malebidda Neladalli, Kannada Sangha, Christ College, Bangalore, 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எஸ்._சிவப்பிரகாஷ்&oldid=4162358" இலிருந்து மீள்விக்கப்பட்டது