இந்திய நிறுவன சட்டம் 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய சின்னம்
இந்திய நாடாளுமன்றம்

நிறுவனங்கள் சட்டம் 2013 (Companies Act 2013), 1956-வது ஆண்டு நிறுவனச் சட்டத்திற்குப்பதிலாக இயற்றப்பட்டது. 1956 ஆம் ஆண்டுச் சட்டம் எற்கனவே பல திருத்தன்களைக் கொண்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் (திருத்தம்) சட்ட முன் வடிவு (The Companies (amendment) Bill 2011) அறிமுகம் செய்யபட்டு. இதன்மீது நடந்த விவாதத்தைத் தொடா்ந்து இந்திய நாடாளுமன்றம் 2012 ஆம் ஆண்டு டிசம்பா் திங்கள் 18-ம் நாள் இதனை நிறைவேற்றியது. இவ்வாறு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவு ‘2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம்’(The Companies Act 2013) என்ற சட்டமாக செயல் படுத்தப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 29 ஆம் நாள் குடியரசுத் தலைவர் அனுமதி பெற்று ஆகஸ்டு திங்கள் 30 ஆம் தேதி இந்த சட்டம் செயல் விளைவுக்கு வந்தது.[1][2]

2013 ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தில் மொத்தம் 29 பாகங்கள் 470 சட்டப்பிரிவுகள் மற்றும் 7 அட்டவணைகள் அடங்கியுள்ளன. 1956 ஆம் ஆண்டு சட்ட்த்தில் 658 சட்டப் பிரிவுகளும் 15 அட்டவணைகளும் இருந்தன [3]. பல புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. முந்தைய சட்ட்த்தில் இருந்த பயன் இழந்த தேவையற்ற 188 பிரிவுகளும் 8 அட்டவணைகளும் நீக்கப்பட்டன. சமூக பொறுப்புடைமை குறித்த பிரிவும் மற்றும் 183 பிரிவுகளும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து செயல் விளைவிற்கு வரும் எனவும் மைய அரசு அறிவித்திருந்தது [4] தனியார் நிறுவனங்களுக்கு பல பிரிவுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது[5]

சிறப்பம்சங்கள்[தொகு]

ஏற்கனவே இருந்த பிரிவுகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்[தொகு]

  1. 1956 ஆம் ஆண்டு சட்டப்படி தனியாா் நிறுவனத்தில் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 50 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.( பிரிவு 2 (68))
  2. பதிவு செய்யும் நடைமுறை விரைவு படுத்தப்பட்டுள்ளது, உறுதி ஆவணங்களைச் சேர்ப்பதின் மூலமும், வெளிப்பாடுகளை அறிவிப்பதன் மூலமும் எளிமையும் ஆக்கப்பட்டுள்ளது, ( பிரிவு 7 )
  3. பொது நல நோக்கத்தைக்குறிக்கோளாகக் கொண்ட நிறுவனங்கள், தவறு செய்யாமல் இருக்கும் வண்ணம் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன(பிரிவு 8 )
  4. 1956 ஆண்டு சட்டப்படி நிறுவனத்தின் அமைப்பு முறையேட்டில் (Memorandum of Association) உள்ள நோக்கப்பகுதி (Object, clause) 1. முக்கிய நோக்கங்கள், 2 உடன்நிகழ்வு அல்லது துணை நோக்கங்கள் மற்றும் 3. பிற நோக்கங்கள் என்றிருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த்து. ஆனால் 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் இது மாற்றப்பட்டு, ஒரு நிறுவனம் அமைப்பு முறையில் எதற்காக அந்நிறுவனம் பதியப்பட்டதோ அதற்கான நோக்கங்கள் மட்டுமே குறிக்கப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பிரிவு 4 (1) (c))
  5. திட்ட அறிக்கையில் அளித்த தவறான தகவல்களின் அடிப்படையிலும் முக்கிய தகவல்களை மறைத்து ஒரு நிறுவனம் பதியப்படுமானால் அதனால் ஏற்படும் தனி நபரின் இழப்பிற்கு இயக்குனர்கள் மற்றும் நிறுவனத்தைத் துவங்கியவர்கள் சொந்தமாக பொறுப்பேற்க வேண்டும்.
  6. பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் (listed companies ) , நிறுனத்தை பதிவு செய்தோர் அல்லது, அதிகப்படியான பங்குமூலதனம் வைத்திருக்கும் 10 நபர்களுடைய பங்கு மூலதனத்தில் மாற்றம் ஏற்படும் பொழுது பதிவாளருக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
  7. இயக்குனர்களின் கடைமைகளும் பொறுப்புககளும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
  8. இயக்குனர்களில் ஒருவராவது இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்
  9. வரையறுக்கப்பட்ட நிறுவனக்களில் சுதந்திரமான இயக்குனர்கள் நியமிக்கப்படவேண்டும். பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் ( Listed Companies ) மூன்றில் ஒரு பங்கு இயக்குனர்கள் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும்.. மற்ற பொது நிறுவனங்களுக்கு இது, விதிகளில் குறிப்பிடப்படும். இவர்களின் பொறுப்பும் கடமைகளும் இப்பொழுது தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது
  10. இயக்குனர்களின் தணிக்கைக்குழு, இயக்குனர்களின் ஊதியக்குழு, இயக்குனர்களின் ஈடுபாடுள்ளவர்களின் ( Stake Holders) தொடர்புக்குழு மற்றும் தலைமை நிர்வாக அலுவலர், தலைமை நிதி அலுவலர், நிறுவனத்தின் செயலர் ஆகியயோருக்கு சட்ட பின்பலம் வழங்கப்பட்டுள்ளது
  11. பொதுமக்களிடமிருந்து எந்த வகையான நிறுவனங்கள் பொது வைப்பு நிதி பெறலாம் ( Public Deposit) என்பது வறையறை செய்யப்பட்டுள்ளது.
  12. நிறுவனகளை ஆய்வுசெய்வதும் புலனாய்வு செய்வதும் செழுமையாக்கப்பட்டுள்ளது.
  13. தவறுகளுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு தணடனை மற்றும், திரும்பத்திரும்மச்செய்யப்படும் குற்றங்களுக்கு அதிகப்படியான தண்டனை விதிப்பது தெளிவாக்கப்பட்டுள்ளது
  14. விதிகளை முறையாக அனுசரிக்காத நிறுவனங்களுக்கு அதிகப்படியான கட்டணம் பெற வழி செய்யப்பட்டுள்ளது. “திட்ட அறிவிப்பிற்குப் பதிலான அறிக்கை” (Statement in lieu of Prospectus) தனியார் நிறுவனங்களால் அளிக்கப்பட வேண்டும் என்று 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் விதிக்கப்பட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் இது மாற்றப்பட்டு விட்டது. நிறுவனங்கள் விரிவான திட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும். திட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபனந்தனைகள் மாற்றப்பட வேண்டுமானால் நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் சிறப்புத்தீர்மானத்தின் வாயிலாக பங்குதாரா்கள் அளிக்கும் ஒப்புதல் தேவை.
  15. தங்கள் பங்குகளை நிறுவனங்கள் திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்வது தொடர்பான விதிமுறைகளை எளிதாக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் பங்காதாயத்தைத் ( Dividend) திருப்பித் தருவதிலோ, கடனீட்டும் பத்திரங்களை மீட்டுத் தருவதிலோ வைப்புத்தொகையோ அல்லது அதன். வட்டித்தொகை தருவதிலோ தவறும் பட்சத்தில், அந்நிறுவனங்கள் தம் பங்குகளை திரும்ப விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.
  16. ஆண்டுப் பொதுக்கூட்டம் (Annual General Meeting) நிறுவனம் பதிவு செய்யப்பட்ட 9 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். இது ஏற்கனவே 18 மாதங்களாக இருந்தது
  17. அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் அன்பளிப்பு 7.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது, இது ஏற்கனவே 5 விழுக்காடாக இருந்தது (பிரிவு 182)
  18. ஒரு நிறுவனத்தின் இயக்குநர் எண்ணிக்கையின் உச்சவரம்பு 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே 12 ஆக இருந்தது. ஒரு இயக்குநர் தற்போது 20 நிறுவனங்களில் இயக்குநராக இருக்கலாம். இது ஏற்கனவே 15 ஆக இருந்தது. இந்த 20 நிறுவனங்களில் 10க்கு மேற்பட்ட பொது நிறுவனங்களில் இயக்குராக இருக்கக்கூடாது. நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது நான்கு இயக்குநர்கள் கூட்டம் நடத்த வேண்டும். இரண்டு கூட்டங்களுக்கான இடைவெளி 120 நாட்கள் மிகாமல் இருக்கவேண்டும் மேலும் இயக்குநா்கள் காணொலிக் காட்சிமூலமாக ( Video Conference) இயக்குநர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
  19. இயக்குநர்களுக்கு கடன் வழங்குவதற்கு, மற்றும் நிறுவனத்திலோ அல்லது துணை நிறுவனத்திலோ இயக்குநரை நியமிப்பதற்கு மைய அரசின் அனுமதி தேவையில்லை என்று புதிய சட்டம் கூறுகிறது. 1956 ஆம் ஆண்டு சட்டப்படி இது தேவை.
  20. கலைக்கப்பட்ட நிறுவனத்தின் கடன்சுமை, சேர்ந்த பொறுப்புத் துறப்பு தொடர்பான அதிகாரங்கள் தற்போது தீர்ப்பாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அது ஏற்கனவே பழைய சட்டப்படி நீதி மன்றத்திடமிருந்தது.
  21. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்த விதிமுறைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
  22. சட்டத்தின் பிரிவுகளை மீறுபவர்களுக்குத் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது
  23. நிறுவனங்கள் தங்களுடைய கணக்குகளை மின்னணு வடிவில் பராமரிக்க வேண்டும். நிறுவனங்களின் நிதி அறிக்கைகள், இருப்புச்சீட்டு, லாப நட்டக்கணக்கு, ரொக்க வரவு செலவு அறிக்கை முதலியன தொகுப்பு அறிக்கை வடிவில் (Consolidated from) சமர்ப்பிக்கப்படவேண்டும். தனித்தனியாகத் தாக்கல் செய்யவேண்டும் என்று பழைய சட்டம் விதித்திருந்த விதிமுறையை இம்முறை மாற்றம் செய்துள்ளது.

புதிய பிரிவுகள்[தொகு]

  1. ஒருநபர் நிறுவனம் (One person company) என்னும் புதிய ஏற்பாட்டை இந்த சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நபரைக் கொண்ட தனியார் வரம்புடைய நிறுவனம் (Private limited company having one person) இவ்வாறு ‘ஒரு நபர் நிறுவனம்’ என்றழைக்கப்படுகிறது (பிரிவு 2 (62) )
  2. திட்ட அறிக்கையில் அளித்த தவறான தகவல்களின் அடிப்படையிலும் முக்கிய தகவல்களை மறைத்து ஒரு நிறுவனம் பதியப்படுமானால் மேலும் தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் அதன் பெயரை நிறுவனங்களின் பெயர்பட்டியலிருந்து நேரடியாக நீக்கலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது.(பிரிவு 35,7)
  3. நிறுவன உறுப்பினர்கள் மின்னணு மூலம் வாக்களிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
  4. ஒரு நிறுவனம், ஒன்றிற்கு மேற்பட்ட துணை நிறுவனங்களை (Subsidiary companies) கைவசம் வைத்திருந்தால், தொகுப்பு நிதி நிலை அறிக்கைகளை தயாரித்து அளிப்பது கட்டாயமாகும். துணை நிறுவனம் என்பது இணை மற்றும் கூட்டு நிறுவனத்தையும் சேர்த்ததாகும். (பிரிவு 129)
  5. 2013ஆம் ஆண்டு சட்டத்தில் நிறுவனச்சமூகப்பொறுப்புடைமை என்னும் புதிய பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு லாபம் ஈட்டும் நிறுவனங்கள் பொது நன்மை தரும் திட்டங்களை வகுத்துச்செயல் படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
  6. வாரியம் தீர்மானிக்கும் பட்டயக்கணக்காயர் அல்லது செலவினக் கணக்கீட்டுக்கணக்காயர் அல்லது இயக்குனர், உள்ளகத் தணிக்கையைச் செய்யவேண்டும் என்பது சில நிறுவனங்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது (பிரிவு 140)
  7. வரம்புடைய பொறுப்புக் கூட்டாளிகள் (Limited Liability Partners) தணிக்கையாளர்களாக நியமனம் செய்யப்படலாம்.(பிரிவு 141)
  8. தணிக்கையாளர்களுக்கு சில பணிகளை செய்தல் ஆகாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. (பிரிவு 144)
  9. குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும் என்பது சில வகை நிறுவனங்களுக்குக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
  10. மேலும் ஒரு இயக்குனராவது கடந்த பட்டிகை ஆண்டில் குறைந்தது 182 நாட்கள் இந்தியாவில் தங்கிருக்க வேண்டும்.(பிரிவு149)
  11. பல்வேறு புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மதிப்பீட்டாளர்கள் (Registered value) அரசாங்க நிறுவனங்கள் (Government companies) நிதி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மற்றும் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் (National companies law tribunal) சிறப்பு நீதி மன்றங்கள் ஆகியனவாகும்.
  12. முந்தைய நிறுவனச் சட்டத்தில் சொற்களுக்கான விளக்கம் அல்லது இலக்கணம்/வரையறை (definition) தரப்படவில்லை. ஆனால் இந்த புதிய சட்டதடதில் பிரிவு 2 ல் 30 க்கும் அதிகமான சொற்களுக்கு விளக்கம்/ வரையறை கொடுக்கப்பட்டுள்ளது
  13. நிதியாண்டு என்பது இனிமேல் ஒரே சீரானதாக இருக்கும். அனைத்து நிறுவனங்களும் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை உள்ள ஆண்டைக் கடைப்பிடிக்க வேண்டும்
  14. நிறுவனத்தின் திட்ட அறிவிப்பில் சேர்க்கப்படும் பொருள் அல்லது விடுபடும் பொருள் மூலம், தவறான தகவல் அளிக்கப்பட்டிருந்தால் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பு உண்டு.(பிரிவு 37)
  15. 1956ஆம் ஆண்டு சட்டம் “ஒரு முறை ஒதுக்கு திட்ட அறிவிப்பை” நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அட்டவணை வங்கிகள் ஆகியன மட்டுமே வெளியிட அனுமதி அளித்திருந்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் படி “இந்தியப் பங்கு மற்றும் பரிவர்தனை வாரியத்திற்கு” ஒரு முறை ஒதுக்கி திட்ட அறிவிப்பை தாக்கல் செய்ய விரும்பும் நிறுவனங்களை முடிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  16. செலுத்தப் பெறாத அல்லது கோரப்படாத கடனீட்டும் பத்திரக்கணக்கு அட்டவணை வங்கியில் துவக்கப்பட்டு சிறப்புக்கணக்கிற்கு மாற்றப்படும். இது “செலுத்தப்பெறாத கடனீட்டுப்பத்திரக்கணக்கு” என்று அழைக்கப்படும். (பிரிவு 124)
  17. வங்கியில்லாத நிதிநிறுவனங்கள் (Non Banking Finanace Companies) வைப்பீடு பெறுவது போன்ற நிகழ்வுகளில் இந்திய சேம வங்கியின் (Reserve Bank of India) விதிமுறைப்படி தான் செயல்படவேண்டும்
  18. சிலவகை நிறுவனங்களுக்குத் தணிக்கைக்குழு, பணி மற்றும் ஊதியக்குழு, பங்குதாரர் மற்றும் தொடர்புக் குழு போன்றவைகள் இயக்குநர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயக்க வேண்டும்மென்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது (பிரிவு 177,178)
  19. புதிதாக துவங்கப்பட்ட ஒரு நபர் நிறுவனம் அதன் ஒரே உறுப்பினருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து விதிமுறைகள் வகுத்து நெறிப்படுத்தப்பட்டுள்ளது
  20. நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவர்கள், தமக்கு தெரிந்த தகவல்களைப் பயன்படுத்தி வாணிகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
  21. கடன் என்னும் வரையறையில் கடனீட்டுப் பத்திரம் அடங்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட கடன்களின் முழுவிபரம் செய்யப்பட்ட முதலீடு அல்லது கொடுக்கப்பட்ட பொறுப்புறுதி அல்லது சொத்துபிணயம் இவற்றை பெற்றவரின் நோக்கம் முதலிய தகவல்கள் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
  22. புதிய சட்டத்தின் அட்டவணை V-ல் மேலாண் இயக்குநர் / முழு நேரஇயக்குநர் / மேலாளர் ஆகியோரை நியமனம் செய்யும், விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளின்படி ஒரு நிறுவனம் இவர்களை சிறப்புத்தீர்மானம் வழியாக நியமனம் செய்வதற்கு மைய அரசின் அனுமதி வேண்டும்.
  23. 2013ஆம் ஆண்டுச் சட்டம் நிறுவனங்கள் தவறு இழைக்கும் பட்சத்தில் மைய அரசால் புலனாய்வு செய்யத்துவங்கும் போது நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் வழங்குகிறது. நிறுவனத்தின் சொத்துக்கள் அனுமதிக்கப்பட்ட ஒருவரால் மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும்
  24. நிறுவனம் ஆயுள்முடிவு அல்லது கலைப்பது என்பது தன்னிச்சையாகவோ அல்லது தீர்ப்பாயத்தின் ஆணைவாயிலாகவோ செய்யப்படலாம். நிறுவனத்தைக் கலைக்கும் அதிகாரம் பெற்றோர் மற்றும் அவர்களை எப்படி நியமனம் செய்வது என்பது குறித்து பல விதி முறைகள் புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.
  25. நலிவுற்ற நிறுவனங்களின் மறுவாழ்விற்கு வகை செய்யும் வண்ணம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன
  26. விண்ணப்பங்கள் ஆவணங்கள் ஆகியவற்றை பதிவாளரிடம் தாக்கல் செய்தல், அவரிடமிருக்கும் ஆவணங்களை ஆய்வு செய்தல், முன்னிருத்தல் ஆவணங்களின் சாட்சியம் ஆகியவை இணையத்தைப் பயன்படுத்திச் செய்யலாம்.
  27. புது வகையாக ‘நிதி’ என்னும் நிறுவனத்தைப் பதிவு செய்யலாம் இதன் நோக்கம் தமது உறுப்பினர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கிவிப்பதாக இருக்க வேண்டும்
  28. நிறுவனங்கள் வழக்குகளில் ஈடுபடும் பொழுது சமரசத் தீர்விற்காக “இடைநின்றிணைத்தல் மற்றும் சமரச முறை வல்லுனர்கள் அடங்கிய குழு” ஒன்றை அமைத்து சமரசம் செய்து கொள்ள இச்சட்டம் அனுமதிக்கின்றது
  29. மைய அரசிற்கு சிறப்பு நீதி மன்றங்களை நிறுவ சட்டம் அதிகாரம் வழங்குகிறது. மைய அரசு உச்ச நீதி மன்றத்தைக் கலந்து முடிவெடுக்க வேண்டும். (பிரிவு 435) இச்சிறப்பு நீதிமன்றங்கள் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களை விசாரிக்கலாம் (பிரிவு436)
  30. மோசடி (fraud) என்னும் குற்றத்திற்கு இலக்கணம் வகுத்து, கடுமையான தண்டனையையும் குறிப்பிட்டு, இச்சட்டம் இதனை விளக்குகின்றது
  31. 2013ஆம் ஆண்டு சட்டம் ‘செயல்படாத நிறுவனம்’ என்ற புதிய வகையை அறிமுகம் செய்கிறது. சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒருசில காரணங்களை எதிர்நோக்கி, தமக்கு ‘செயல்படாத நிறுவனம்’ என்னும் தகுதியை வேண்டி, பதிவாளரை அணுகலாம். இப்படிப்பட்ட நிறுவனங்களின் பட்டியலைப் பதிவாளர் பராமரித்து வர வேண்டும். எதிா் நோக்கியிருக்கும் காரணங்கள் சொத்து அல்லது அறிவுசார் சொத்து ஒன்றை வைத்திருப்பதற்காகவோ, தமக்கு குறிப்பிட்ட கணக்கு வழக்கு நடவடிக்கைகள் ஏதும் இல்லாமலோ இருக்கலாம். இந்நிறுவனம் தற்போது செயல்படாமலிருந்தாலும் பிற்காலத்தில் செயல்படாலம் (பிரிவு 455)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Commencement Notification Of Companies Act 2013" (PDF). Ministry of Corporate Affairs, India. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  2. Varma, Sindhu. "India: New Companies Act, 2013 – The Cat Is Finally Out". Mondaq. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  3. Prasad, Suresh. "Complete list of Sections of Companies Act, 2013". AUBSP. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "MCA notifies 183 sections of Companies Act 2013". Business Standards. 26 March 2014. http://www.business-standard.com/article/companies/mca-notifies-183-sections-of-companies-act-2013-114032601009_1.html. பார்த்த நாள்: 27 July 2016. 
  5. http://www.companiesact.in/Companies-Act-2013/News-Details/545/%20MCA%20lays%20draft%20notification%20us%20462%20for%20Private%20Companies%20in%20Parliament

வெளி இணைப்புகள்[தொகு]

நடுவண் அரசின் அறிவிப்புகளும் சுற்றறிக்கைகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_நிறுவன_சட்டம்_2013&oldid=3927632" இலிருந்து மீள்விக்கப்பட்டது