பயனர்:அக்னிப்புத்திரன்
' சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்
ஒரு இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அம்மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுக்கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும். இவ்வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கைமுறையக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளன. இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச்சிறந்து விளங்கும் ஒரு மொழியாகத் தமிழ்மொழி விளங்கி வருகின்றது.
மக்கள் வாழ்க்கைக்குப் பயன்தரும் முறையில் படைக்கப்பட்ட பலவகைக் கலைகளுள் இலக்கியம் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வின் சிறப்பியல்பாக உள்ள மொழியைக் கொண்டு இலக்கியம் விளைகிறது. உயர்ந்த கற்பனை, விழுமிய உணர்ச்சி, அழகிய வடிவமைப்பு ஆகியன கொண்டு அமைந்து படிப்பவரைப் பரவசப்படுத்தும் இலக்கியங்கள் தமிழில் ஏராளம்.
பண்டக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியத்க்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த நூல் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் மட்டுமே. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பல புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்கள அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர். அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.
சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவது காதலும் வீரமுமே ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு ஒழுங்குமுறையாகத் தொகுக்கப்பட்டு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பிரிவாக அமைந்துள்ளன. பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலலபெற்ற வாழ்வினைப் பெற்று தனித் தன்மையோடு விளங்கி வருகின்றன. பாட்டும் தொகையும் ஆகிய சங்க இலக்கியம் தோன்றிய காலத்தைத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்.
எட்டுத்தொகையில் எட்டு நூல்களும், பத்துப்பாட்டில் பத்து நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை நூல்கள்:
1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு
எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்து எட்டுத்தொகை."
பத்துப்பாட்டு நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணற்றுப்படை 5. கூத்தாராற்றுப்படை (மலைபடுகடாம்) 6. மரக் காஞ்சி 7. முல்லைப்பாட்டு 8. குறிஞ்சிப் பாட்டு 9. நெடுநல்வாடை 10. பட்டினப்பாலை
பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:
"முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை பெருகு வள மரக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து."
இலக்கிய இன்பம்:
சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் உள்ள கலித்தொகையில் கபிலர் இருபத்தொன்பது பாடல்கள் பாடியுள்ளார். இவை கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி எனப்படும். அதில் ஒரு பாடலைப் பார்ப்போம். பாடலைக் கவனியுங்கள். அற்புதமான காதல் காட்சி நம் கண் முன்னே தோன்றும்.
தலைவி தன் தோழியிடம் கூறுவது போல அமைந்த பாடல் இது. தற்காலத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இன்னும் வெளிவரவுள்ள திரைப்படங்களிலும் பார்ப்பீர்கள். ஆனால் அந்தச் சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முகிழ்ந்த ஒன்று என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா?
சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி விளையாடிய அவள் மீது பருவ வயதில் காதல் கொண்ட இளைஞன் ஒருவன் நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குரியவளைச் சந்திக்க முடியாத நிலையில் மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. தன் உள்ளம் கவர்ந்த காரிகையைக் காண அவள் இல்லம் நோக்கி வேகமாகச் செல்லுகிறான். தன் காதல் உள்ளத்தை இன்று எப்படியும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் சென்ற அவனுக்குப் பெரும் ஏமாற்றம். அங்கே வீட்டின் புறத்தே அன்பிற்குரியவளும் அவளுடய அன்னையும் இருப்பதைக் காண்கின்றான். உடனே சூழலைப் புரிந்துகொண்டு, "தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்கின்றான். அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள். அழகிய பொற்கிண்ணத்திலே தண்ணீர் தருகிறாள் தலைவி. தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று அவளின் அழகிய வளையல் அணிந்த கரத்தையும் பற்றிவிடுகிறான் தலைவன். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் தன்னை மறந்த நிலையில், "அம்மா! இங்க வந்து பாரும்மா..இவன் செயலை" என்று அலறிவிடுகிறாள். உள்ளே இருந்த அம்மா அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள். சட்டென்று தன் நிலையை உணர்ந்த தலைவி, "தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதான் உங்களைக் கூப்பிட்டேன்" என்று கூறி உண்மை நிலையை மறைத்து விடுகிறாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா? என்று கேட்டுக்கொண்டே விக்கல நீக்க, தலைவனின் தலையையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள். அந்தச் சமயத்தில் தலைவன் கடைக்கண்ணாலே தலைவியைப் பார்த்துப் புன்னகை பூக்கின்றான். கண்கள் அங்கே மனதைக் கொள்ளையடித்தன.
இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு கற்பனை வளமா? சங்க இலக்கியப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் மனதைக் கவரும்படி மிகச்சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன.
ஈராயிரமாண்டுகளாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி. ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கருத்து வளமுடன் விளங்கிய உயர்தனிச் செம்மொழி. தமிழ் மக்களின் நாகரிகமும் பண்பாடும், அரசியல் அமைப்பும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், முன்னேற்றம் மிக்க சிறந்த அரசியல், பொருளாதார, நாகரிகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும். தமிழன் என்று சொன்னாலே தலை நிமிர்ந்து நிற்கத் தோன்றுகின்றது அல்லவா?
- அக்னிப்புத்திரன் (agniputhiran@yahoo.com)