வ. ந. கிரிதரன்
வ. ந. கிரிதரன் | |
---|---|
பிறப்பு | நவரத்தினம் கிரிதரன் வண்ணார்பண்ணை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
வ.ந.கிரிதரன், (நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய, ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர், வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்றார். தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியிலும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். அங்கு கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர், இங்கு மேலும் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் தகமைகள் பெற்றுள்ளார்.
எழுத்துலக வாழ்வு
[தொகு]மிக இளவயதிலேயே எழுத தொடங்கிய வ.ந.கிரிதரன், பல சிறுவர் கால படைப்புக்களை படைத்துள்ளார். இவரின் படைப்புக்கள் ஈழநாடு 'சிறுவர் மலர்', சுதந்திரன், கண்மணி, சிரித்திரன், வீரகேசரி, ஈழமணி 'கணையாழி', 'சுபமங்களா', ஆனந்தவிகடன், 'துளிர்', 'தாயகம்', 'தேடல்', 'சுவடுகள்', 'திண்ணை', 'தடஸ்.தமிழ்' உட்படப் பல பத்திரிகை, சஞ்சிகை மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது 17 வயதில் படைக்கப்பட்ட 'சலனங்கள்' என்னும் சிறுகதை சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டது. 'பொந்துப் பறவைகள்' என்னும் சிறுகதை சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டமொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகதையொன்று குட்டிக்கதையாகி ஆனந்தவிகடனின் பவளவிழாக் குட்டிக் கதைப் போட்டியில் ரூபா 3000 சன்மானம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள், மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு', 'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன. 'வானியற் பெளதிகம்' (Astro Physics) பற்றிய அறிவியற் கட்டுரைகள் பல வீரகேசரி, கணையாழி, பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மொறட்டுவைத் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார். கனடாவிற்கு புலம் புகுந்த பின்பு இவரின் பல படைப்புக்கள் இங்குள்ள சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. மேலும் ரொறன்ரோவில் 'இரவி (வார பத்திரிகை)', 'கல்வி (வார பத்திரிகை)' , குரல் (கையெழுத்துப் பிரதி), 'நமது பூமி (செய்தி கடிதம்)', 'கணினி உலகம் (செய்தி கடிதம்)' ஆகிய பல ஆரம்ப கால தமிழ் படைப்பு முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். இவை சில இதழ்களோடு நின்றுவிட்டன. எனினும் 2000 ஆண்டு இவர் ஆரம்பித்த பதிவுகள் இணைய இதழ் தொடர்ந்து வெளிவருகின்றது.
எழுதிய நூல்கள்
[தொகு]- மண்ணின் குரல் (சிறுநாவல், கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்பு), 1986, கனடா: மங்கை பதிப்பகம்
- எழுக அதி மானுடா! (கவிதைகள்), 1992, கனடா: மங்கை பதிப்பகம்
- அமெரிக்கா (சிறு நாவல், சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு), 1996, தமிழ்நாடு: ஸ்நேகா, கனடா: மங்கை பதிப்பகம்
- நல்லூர் ராஜதானி நகர அமைப்பு, 1996, தமிழ்நாடு: ஸ்நேகா, கனடா: மங்கை பதிப்பகம்
- மண்ணின் குரல் (வன்னி மண், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், கணங்களும் குணங்களும், மண்ணின் குரல் ஆகிய புதினங்களின் தொகுப்பு), 1998, தமிழ்நாடு: குமரன் பப்ளிஷர்ஸ்
- குடிவரவாளன், புதினம், 2016, ஓவியா பதிப்பகம், தமிழ்நாடு
விருதுகள்
[தொகு]- இலக்கியச் சாதனை விருது, 2022, கனடா தமிழ் இலக்கியத்தோட்டம்
வெளி இணைப்புகள்
[தொகு]- வ.ந.கிரிதரன் படைப்புகள் - பிரதிலிபி பரணிடப்பட்டது 2022-06-29 at the வந்தவழி இயந்திரம்
- வ.ந.கிரிதரன் அறிவியற் கட்டுரைகளும், கதைகளும் பரணிடப்பட்டது 2022-06-29 at the வந்தவழி இயந்திரம்
- வ.ந.கிரிதரன் பக்கம்
- சிறுகதைகள்
- கவிதைகள்
- கட்டுரைகள்
- சிறுகதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு
- நல்லூர் இராஜதானி: நகர மைப்பு (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- வ.ந.கிரிதரனின் ஆங்கிலப் பக்கம்
- பதிவுகள் இணையத்தளம்
- வ.ந.கிரிதரனின் வலைப்பதிவு
- வ.ந.கிரிதரனின் வலைப்பதிவு ஆங்கில மொழிபெயர்ப்பு
- Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner