உள்ளடக்கத்துக்குச் செல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் (சூரா தவ்பா) தவிர மற்ற அனைத்து அத்தியாயங்களின் தொடக்கத்திலும் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ' பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்" என்னும் வசனம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். இதன் பொருள் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்" என்பதாகும்.

வரலாறு

[தொகு]

இஸ்லாமை ஏற்கும் முன்பு அரபு மக்களிடையே ஒரு வழமை இருந்து வந்தது. ஏதேனும் ஓர் அலுவலை அவர்கள் துவங்க ஆரம்பித்தால், அவரவர் வழிபடும் விக்ரகங்களின் பெயர்களைக் கூறியே ஆரம்பம் செய்வர். இப்படித் தொடங்கும் பணி வெற்றி பெறும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக, முஹம்மது நபிக்கு அருளப்பெற்றக் குர்ஆனின் முதல் வசனமே, "(அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!" எனத் தொடங்கியது[1].

இறைவன் மனிதர்களிடமிருந்து எந்தத் தேவையும் அற்றவன்; இருப்பினும் தன்னுடைய அருட்கொடைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதால் அவனை எக்கணத்திலும் மறத்தல் ஆகாது; நம் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வின் தொடக்கத்திலும் இறைவனை நினைப்பது அவசியமாக இருக்கிறது என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.

நபி நூஹுவின் காலத்தில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நன்மக்கள் தப்பிச்செல்வதற்காக செய்யப்பட்ட கப்பலை செலுத்தும் முன் "இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்[2]. அல்லாஹ்வின் பெயராலேயே என்று கூறி தான் எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும் என நபிமார்கள் சொல்லித் தந்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம். இதே போல நபி சுலைமான் ஸபா நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே அமைந்திருந்தது[3].

(முஹம்மது நபியின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா அவர்களை, "சிறுவனே அல்லாஹுவின் பெயரைச்சொல். உனது வலது கரத்தை கொண்டு சாப்பிடு" என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்[4].

பிஸ்மில்லாஹ் எனும் வார்த்தையின் விளக்கம்

[தொகு]

பிஸ்மில்லாஹ் என்பதற்கு "அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று பொருள். "அல்லாஹ்வின் திருப்பெயரால் என் ஆரம்பம்" என்று பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தி வாக்கியத்தை நிறைவு செய்யலாம், அல்லது அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன் அல்லது ஆரம்பித்தேன் என்று வினைச்சொல்லாலும் வாக்கியத்துக்கு முற்றுப்புள்ளி இடலாம். இரண்டும் சரியே. ஏனென்றால் வினைச்சொல் ஒன்று இருந்தால் அதற்கு வேர்ச்சொல் (பெயர்ச்சொல்) ஒன்று இருந்தே ஆக வேண்டும். எந்த ஒரு துவக்கமும் வேண்டுதலோடு நன்முறையில் அமைய அல்லாஹுவின் பெயர் கூறப்பட வேண்டுமென்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. பெயர்ச்சொல்லால் வாக்கியத்தை முடிக்கலாம் என்பதற்கு "அல்லாஹ்வின் பெயராலேயே இக்கப்பல் ஓடுவதும், நிற்பதும் (அமைகின்றன)" எனும் வசனம் சான்றாகும்[5]. வினைச்சொல்லால் வாக்கியத்தை முடிக்கலாம் என்பதற்கு "(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக" எனும் வசனம் சான்றாகும்[6].

==அல்லாஹ் எனும் பெயரின் சிறப்புகள்==

"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்பதிலுள்ள அல்லாஹ் எனும் சொல் அனைத்து உலகையும் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனின் இடுகுறிப் பெயராகும். இதுவே அவனுக்குரிய "அல்இஸ்முல் அஃளம்" (மகத்துவம் பொருந்திய திருநாமம்) என்றும் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வுக்குரிய 'அர்ரஹ்மான்' 'அர்ரஹீம்' போன்ற பண்புப்பெயர்கள் அனைத்தும் அல்லாஹ் எனும் பெயருக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து "அல்லாஹ்" என்பது இடுகுறிப் பெயர்தான் என அறிய முடிகிறது. முஹம்மது நபி அவர்கள் அல்லாஹுவிற்கு தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்கள்[7].

அல்லாஹ் எனும் அரபுச்சொல் அனைத்து ஆற்றல்களும், உயர் பண்புகளும் கொண்ட எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் வாழ்ந்த அரபு மக்களும் "அல்லாஹ்" என்பது ஈடு இணையில்லாத இறைவனுக்கு உரிய பெயர் என்று விளங்கியிருந்தார்கள். அதனாலேயே தாங்கள் வழிபட்டு வந்த சிலைகள் எதற்கும் "அல்லாஹ்" என்னும் பெயரை சூட்டவில்லை. எனினும் அவர்கள் வழிபட்டு வந்த விக்ரஹங்கள், தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடும் என அரபு மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இந்த நம்பிக்கையை களைந்து அல்லாஹ் ஒருவனையே வழிபடவேண்டும், அவனுக்கு இணையாகவோ, அவன் நெருக்கத்தைப் பெறுகிற எண்ணத்திலோ வேறு எந்தப் பொருளையும் வழிபடக்கூடாது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

'அர் ரஹ்மான்', 'அர் ரஹீம்'

[தொகு]

"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனும் வசனத்திலுள்ள 'அர் ரஹ்மான்' மற்றும் 'அர் ரஹீம்' ஆகிய இரு சொற்களும் 'அர் ரஹ்மத்' (கருணை) எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மிகைப் பெயர்களாகும். 'அர் ரஹீம்' என்பதை விட 'அர் ரஹ்மான்' என்பது இன்னும் கூடுதலான மிகையைக் காட்டுகிறது. 'அர் ரஹ்மான்' எனும் சொல்லுக்கு அனைத்துப் படைப்புகளின் மீதும் கருணை காட்டுபவன் என்றும், 'அர் ரஹீம்' எனும் சொல்லுக்கு இறை நம்பிக்கையாளர்கள் மீது கருணை காட்டுபவன் என்றும் பொருள் கூறப்படும் என்று குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர் கூறுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே தனது ஆட்சி அதிகாரத்தைப் பற்றி குறிப்பிடும் போது "அர்ரஹ்மான் அரியாசனத்தின் மீது தன் ஆட்சியை நிலை நாட்டினான்” என்று இறைவன் கூறுகிறான்[8].

இங்கு தன் ஆட்சி அதிகாரம் எனும் அருள் அனைத்துப் படைப்புகளுக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் முகமாக 'அர் ரஹ்மான்' எனும் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். மற்றொரு வசனத்தில் "இறை நம்பிக்கையாளர்கள் மீது அவன் மிகவும் கருணை கொண்டவன் ஆவான்" என தன்னைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்[9]. இங்கு 'அர் ரஹீம்' எனும் சொல் கையாளப்பட்டுள்ளது. இதிலிருந்து 'அர் ரஹ்மான்' என்பது இம்மை, மறுமை ஆகிய ஈருலகிலும் கருணை காட்டுபவன் என்ற பொருளையும், 'அர் ரஹீம்' என்பது 'நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் கருணை காட்டுபவன்' என்ற பொருளையும் பொதிந்துள்ளன என்று தெரிகிறது. 'அர் ரஹ்மான்' – அருள்மிக்கவன், 'அர் ரஹீம்' - அன்புமிக்கவன் என்னும் பண்புகளை பிஸ்மில்லாஹ்வுடன் இணைத்து, தங்களுக்கு இறைவன் அறிவுரையை புகட்டுவதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு 'பிஸ்மில்லாஹ்' கூறிப் பழக்கப்படுத்திக் கொண்ட ஒருவர், எக்கணமும் அல்லாஹ்வை மறக்க வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

"பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்" என்பதன் பொருள் இலக்கணம் மற்றும் விளக்கம்

[தொகு]

எந்த ஒரு செயலையும் தொடங்கும் போதும் மேற்கண்ட வாக்கியத்தை கூறிக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இந்த சொற்றொடரை தனித்தனி வார்த்தைகளாகப் பிரித்துப் பொருள் காணலாம்.

பிஸ்மில்லாஹி - அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம் செய்கிறேன்.) அர்-ரஹ்மான் - அவன் அளவற்ற அருளாளன். அர்-ரஹீம் - அவன் நிகரற்ற அன்புடையோன்.

இந்த வார்த்தைகளைச் சேர்த்து அந்த சொற்றொடருக்கு முழுப்பொருளைக் கூற வேண்டுமென்றால் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்" என்பது பொருளாகும். இந்த வாக்கியத்தில் வரும் "அல்லாஹ்", "ரஹ்மான்', "ரஹீம்" என்ற மூன்று வார்த்தைகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனின் பெயர்களாகக் கூறப்படும் 99 பெயர்களில் முதல் மூன்று பெயர்கள் ஆகும் [10].

இந்த வாக்கியம் மேலே குறிப்பிட்டது போல (திருக்குர்ஆனில் ஒன்பதாவது அத்தியாயமான "அத்-தவ்பா" தவிர மற்ற எல்லா அத்தியாயங்களுக்கு முன்னரும் முதலில் ஓத வேண்டிய வாக்கியமாகத் தரப்பட்டுள்ளது) என்பது போக இந்த வாக்கியம் குர்ஆனில் 27வது அத்தியாயத்தில் 30வது வசனமாகவும் வந்துள்ளது. அதில் சுலைமான் நபி ஸபா நாட்டு ராணிக்கு எழுதிய கடிதத்தில் இந்த வசனத்தைக் கூறி ஆரம்பிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது[11].

பயன்படுத்தப்பட வேண்டிய சூழல்கள்

[தொகு]

முஸ்லிம்கள் எந்தவொரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் மேற்கண்ட வசனத்தைக் கூறிக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அவர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் பல செயல்களில் இவ்வசனம் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணம்: உண்ணும்போது[12], உறங்கும்போது[13], எழுதுவற்கு, படிப்பதற்கு முன்[14], ஓதுவதற்கு முன்[15], தாம்பத்ய உறவுக்கு முன்[16], பலி பிராணியை அறுக்கும் முன்[17], வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் முன்[18], வீட்டினுள் நுழையும் முன்[19].

முஸ்லிம்களால் உலகின் இறுதி இறைத்தூதுவராகக் கருதப்படும் முஹம்மது நபி அவர்கள், உலகின் பல்வேறு நாட்டு மன்னர்களுக்குத் தன் தூதுச் செய்தியைக் எடுத்துக் கூறி கடிதம் எழுதும் போதும், அந்த கடிதங்கள் இந்த வாக்கியம் கொண்டே தொடங்கப்பட்டன. முஹம்மது நபி எழுதப்படிக்க தெரியாதவர் என்பதால் தன்னுடைய தோழர்களை வைத்துக் கடிதங்களை எழுதுவார். அந்தக் கடிதங்களில் சில இன்றும் இஸ்லாமிய நாடுகளின் அருங்காட்சியங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன[20] [21].

அதே போல் நபிகளுக்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வழிநடத்திய கலிஃபாக்கள் (ஆட்சியாளர்கள்) மற்றும் முஹம்மது நபியின் தோழர்களும் தமது கடிதப் போக்குவரத்துகளின் போது "பிஸ்மில்லாஹ்" என்ற வசனத்தைக் கொண்டே தொடங்கியுள்ளதாக அறிகின்றோம்[22].

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரை 786 என்ற இந்த எண்ணுக்கு ஒரு எண்ணுக்குரிய அடையாள மதிப்பீட்டைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும், விசேஷமும் இல்லை. ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் நியூமராலஜி போன்று அரபு அறிந்த முஸ்லிம்களில் சிலர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற அரபுப்பதத்திற்கு ஈடான எண்களைக் கொடுத்து முடிவில் 786 என்ற எண்ணிக்கையைக் கொண்டு வந்தனர். (உதாரணம்: அரபி எழுத்து அலீஃப்-ற்கு 1, ப-விற்கு 2, த-விற்கு 3.... )

இதனை தற்காலத்திலும் முஸ்லிம்களில் சிலர் எழுத்து வடிவில் செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இறைவனின் வார்த்தைகளைக் கொண்ட காகிதம் கீழே விழுந்து பலரின் காலடிகளுக்கு இலக்காகலாம் என்பதும், கிழியலாம் என்பதுமாகும். இது அறியாமை மிகுந்ததும் முற்றிலும் தவறான நடைமுறையுமாகும். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் என ஒருவர் எழுதும் போது அதற்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு எழுதுவதில்லை. மேலும் முஸ்லிமல்லாத பிற நாட்டு மன்னர்களுக்கு முஹம்மது நபி கடிதம் எழுதும் போதும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்றே எழுதியுள்ளார்கள்[23]. அப்படி எழுதப்பட்ட கடிதங்களில் சில கிழிக்கப்பட்டும் இருக்கின்றன. அப்போதும் கூட முஹம்மது நபி மாற்று வழிகளை அல்லது இது போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தியதில்லை.

ஆக 786 என்ற எண்ணின் பயன்பாடு "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்பதற்கு ஒப்பானது என்று எண்ணுவதும், தர்க்கரீதியாக அப்படி பயன்படுத்துவது சிறந்தது என்பதும் தவறானது மட்டுமல்ல இஸ்லாமிய மார்க்க ரீதியில் அடிப்படை ஆதாரமற்றதுமாகும்.

ஆதார மேற்கோள்கள்

[தொகு]
  1. குர்ஆன் 96:1
  2. குர்ஆன் 11:41
  3. குர்ஆன் 27:30
  4. புகாரி:5376
  5. குர்ஆன் 11.41
  6. குர்ஆன் 96.1
  7. புகாரி :2736
  8. குர்ஆன் 20:5
  9. குர்ஆன் 33:43
  10. 99 Names of Allah ( God )
  11. குர்ஆன் 27:30
  12. முஸ்லிம் 4105
  13. முஸ்லிம் 5257
  14. புகாரி 6260
  15. புகாரி 5046
  16. புகாரி 5165
  17. புகாரி 5565
  18. அபூதாவூது 5095, திர்மிதி 3426
  19. அபூதாவூத் 5096
  20. புகாரி 7, புகாரி 3184
  21. http://www.tamililquran.com/rarepic_4[தொடர்பிழந்த இணைப்பு].asp
  22. புகாரி 1454
  23. புகாரி 7, 2941, 4553

ஏனைய மேற்கோள்கள்

[தொகு]
  1. தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன்
  2. தப்ஸீர் இப்னு கஸீர்
  3. Tamilil Quran