நா. இரகுநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகுநாதன்

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையை பிறப்பிடமாக கொண்ட திரு இரகுநாதன் அவர்கள் பரம்பரை இசைக்கலைஞர் ஆவார். இவரது தந்தையார் திரு நாகமுத்து அவர்கள் ஒரு நாட்டுக்கூத்து கலைஞரும் ஹார்மோனிய கலைஞரும் ஆவார்.

திரு இரகுநாதன் அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இசைத்துறையில் கற்று கர்நாடக இசையில் மிக்க தேர்ச்சி பெற்றவர். இவர் ராக ஆலாபனை செய்வதில் சிறந்த தேர்ச்சி படைத்தவர். அதற்கு மேலாக திரைப்பாடல்கள் மூலம் பிரபலமடைந்து இலங்கை, இந்தியா, கனடா, சிங்கப்பூர், பிரித்தானியா முதலிய நாடுகளில் தனது குரல் வளத்தை பிறர் ரசிக்க வைத்தவர்.

இசை அமைக்கும் ஆற்றலும் கைவரப்பெற்ற இவர் பல பாடல்களிற்கு இசையமைத்துள்ளார். இறைவன் மேல் பாடிய மற்றும் இசையமைத்த பல இசைத்தட்டுக்கள், ஒலிநாடாக்கள், இவரது திறமையை நிரூபித்துள்ளன.

தொழிலால் இசை ஆசிரியரான இவர் மாத்தளை இந்து கல்லூரியில் நீண்ட காலம் கடமையாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரின் துணைவியார் திருமதி நிர்மலா இரகுநாதன் ஒரு பயிற்றப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியராவார். மாத்தளை முத்துமாரியம்மன் மீதும் முத்துவிநாயகர் மீதும் இவர் பாடிய பாடல்கள் பிரபலமானவை.

மத்திய மாகாண அமைச்சினாலும் இலங்கை அரசாலும் பலமுறை கௌரவிக்கப்பட்ட இவர் நாடறிந்த, ஒரு ஊடக கலைஞர் ஆவார். தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற T.M.சௌந்தரராஜனின் பாடல்களை தனது குரலில் தனது பாணியில் பாடிவரும் இவர், சுசீலா, ஜானகி, ஜிக்கி, ஜமுனாராணி, முதலான தென்னிந்திய பாடகிகளுடன் பாடி அவர்களின் பாராட்டை பலமுறை பெற்றவர்.

இலங்கை வானொலி, ரூபவாஹினி முதலாக அனைத்து தனியார் ஊடகங்கள்வரை இவரை பலமுறை கௌரவித்ததுடன் பல இசை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் இவரின் திறன்களை பயன்படுத்தியுள்ளன.

இரகுநாதனின் ஒரு பாடல்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._இரகுநாதன்&oldid=3218114" இலிருந்து மீள்விக்கப்பட்டது