உள்ளடக்கத்துக்குச் செல்

புரோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோகா
Broga
புரோகா நகரின் அடையாளச் சின்னம்.
புரோகா நகரின் அடையாளச் சின்னம்.
Location of புரோகா
ஆள்கூறுகள்: 2°56′14″N 101°54′40″E / 2.93722°N 101.91111°E / 2.93722; 101.91111
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
துணை மாவட்டம்செமினி
அரசு
 • மலேசியா உள்ளாட்சி மன்றம்காஜாங் நகராட்சி மன்றம்
 • மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்ஜொகான் அசீஸ்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
71750

புரோகா (ஆங்கிலம்: Broga; சீனம்: 布罗加; என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். 2001-ஆம் ஆண்டில் இங்கு 150 கோடி ரிங்கிட் செலவில் எரி உலை கட்டுவதற்கு நடுவண் அரசு திட்டம் வகுத்தது. அந்தத் திட்டத்திற்கு எதிராக பொது மக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்கள். மலேசிய வரலாற்றில் அது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது.

வரலாறு[தொகு]

புரோகா எனும் பெயர் புரோகா நதியில் இருந்து பெறப் பட்டது. முன்பு காலத்தில் புரோகா காட்டு ஆற்றுப் பகுதியில் புரோகா எனும் புராண மிருகம் வாழ்ந்ததாகவும்; அந்த மிருகத்தின் பெயரே ஆற்றுக்கும்; நகரத்திற்கும் வைக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

பிரெடி ஸ்பென்சர் சாப்மேன் என்பவர் மலாயாவைப் பற்றி சில பயண நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ’’தி ஜங்கிள் இஸ் நியூட்ரல்’’ ’’(The Jungle is Neutral)’’ எனும் நூலில் புரோகாவைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.[1]

இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் பிரித்தானியர் ஆதரவுப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கு இடையே இங்கே பெரிய சண்டை நடந்ததாக அவர் அந்த நூலில் எழுதி உள்ளார்.

நிலவியல்[தொகு]

புரோகா நகருக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. நெகிரி செம்பிலான்; சிலாங்கூர் மாநிலங்களின் மைய எல்லையில் அமைந்து இருப்பதே அதன் சிறப்பு அம்சமாகும். அந்த நகரின் வலது புறத்தில் சிலாங்கூர் செமினி துணை மாவட்ட நகராட்சி மன்றத்தின் கண்காணிப்பு. இடது புறத்தில் நெகிரி செம்பிலான் லெங்கேங் துணை மாவட்ட நகராட்சி மன்றத்தின் கண்காணிப்பு.

இந்த நகரத்தின் அரசாங்க மருத்துவமனையும்; நகரக் காற்பந்து விளையட்டுத் திடலும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளன. அதே வேளையில் அந்த நகரத்தின் காவல் நிலையம்; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ளது.

இவ்வாறு தனிச் சிறப்பு பெற்ற சில நகரங்கள் மலேசியாவில் உள்ளன. அவற்றுள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தம்பின் நகரம்; மலாக்கா மாநிலத்தில் உள்ள பத்தாங் மலாக்கா நகரம்; ஆகிய இரண்டையும் எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

புரோகா மலை[தொகு]

புரோகா மலையின் பசுமை இயற்கை

மலேசியா தித்திவாங்சா மலைத்தொடரின் விளிம்பில் இந்த நகரம் வீற்று உள்ளது. இந்த நகரம் வெப்பமண்டல மழைக்காடுகளும் பசுமையான மலைகளாலும் சூழப்பட்டு உள்ளது. அவற்றில் மிக முக்கியமானது புரோகா குன்று. பொதுவாக இந்தக் குன்றை புரோகா மலை என்றே பலரும் அழைக்கிறார்கள்.

ஏறக்குறைய 400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை; அதன் தனித்துவமான தோற்றத்திற்குச் சிறப்புப் பெற்று உள்ளது. ஏனெனில் அந்த மலையில் மரங்கள் எதுவும் இல்லை. ஆனால் அதைச் சுற்றிலும் வெப்ப மண்டல மழைக்காடுகள் சூழ்ந்து உள்ளன. அதுவே ஓர் அசாதாரணமான நிலவியல் அமைப்பாகும்.

புரோகா மலையின் மற்றொரு இயற்கைக் காட்சி
புரோகா மலையின் அடிவாரத்தில் நடைப் பயணிகள்

புரோகா மலை மிக உயரமான மலை அல்ல. 400 மீட்டர் உயரம் தான். ஆக அதன் உயரத்தின் காரணமாகப் பெரும்பாலான மக்கள் அந்த மலையில் ஏறுவதற்கு அடிக்கடி வருகிறார்கள். சாதாரண நடைப் பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் மாறி வருகிறது.

=மேம்பாட்டுத் திட்டங்கள்[தொகு]

அத்துடன் மலை அடிவாரத்தைச் சுற்றிலும் அழகு அழகான இயற்கைக் காட்சிகள். அதனால் அண்மைய காலங்களில் இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தளமாகத் தடம் பதித்தும் வருகிறது.

2016-ஆம் ஆண்டில் ஓலா போலா Ola Bola எனும் உள்ளூர்த் திரைப் படத்தின் சில காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டன.[2] புரோகா மலையும் மிகப் பிரபலம் அடைந்தது. அதன் பின்னர் இந்தப் பகுதிகளில் சில மேம்பாட்டுத் திட்டங்கள் தீவிரம் அடைந்தன. அதனால் இந்த மலையின் தனித்துவமான அழகு அமைப்பும் நிரந்தரமாகச் சேதம் அடைந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் புரோகா நகரம் அதிகம் அறியப் படாத நகரமாய் இருந்தது. ஒரு விவசாய நகரமாகவே இருந்தது. ரப்பர் முக்கியமான பயிர்த் தொழில். ஆனால் அண்மையில் இந்த நகரத்தில் ஒரு திருப்புமுனை. நகரத்திற்கு அருகாமையில் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வளாகம் தோற்றுவிக்கப்பட்டது. அதனால் கணிசமான அளவிற்கு மாணவர்கள் கல்வி கற்க வந்தார்கள்.[3]

அந்த வகையில் அவர்கள் இந்த நகரத்திற்கு விரைவான வளர்ச்சியையும் கொண்டு வந்து உள்ளனர் என்று சொல்லலாம். புரோகா நகரம் அதன் சீன உணவகங்களுக்கும்; டுரியான் பழத் தோட்டங்களுக்கும் மிகவும் பெயர் பெற்றது.

புரோகா எரி உலை[தொகு]

2001-ஆம் ஆண்டில் செமினி நகருக்கும் புரோகா நகருக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியில், 150 கோடி ரிங்கிட் செலவில் ஓர் எரி உலை கட்டுவதற்கு நடுவண் அரசு திட்டம் வகுத்தது.[4] அந்தத் திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய எரி உலை திட்டமாகக் கருதப் பட்டது.

அதன் முக்கிய நோக்கம் கோலாலம்பூரின் கழிவுகளை அங்கு கொண்டு வந்து சுத்திகரிப்புச் செய்வது ஆகும். 2003-ஆம் ஆண்டில் செமினி, புரோகா வாழ் மக்கள் ஆலைக் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.

2005-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றம் தற்காலிகமாகத் ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தது.[5] அந்த வகையில் பொது மக்கள் வெற்றி பெற்றார்கள்.இருப்பினும் அந்த ஆலையின் கட்டுமானத்திற்கு அதிகம் செலவாகும் என்பதால் அந்தக் கட்டுமானம் நிறுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. F. Spencer Chapman (August 1, 2003). The Jungle is Neutral. The Lyons Press; 1st edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59228-107-7.
  2. "'Ola Bola' rakes in RM23 million at local box office". பார்க்கப்பட்ட நாள் 27 January 2021.
  3. Geetha Krishnan (February 5, 2009), Reviving Semenyih Sentral, The Star (Malaysia), பார்க்கப்பட்ட நாள் 27 January 2021
  4. New dumpsite in Broga under study, New Straits Times, January 16, 2001
  5. Sashi Ambi (April 2, 2006), Burn, Broga, burn..., New Straits Times

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோகா&oldid=3996950" இலிருந்து மீள்விக்கப்பட்டது