விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கியூடகத் திட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கியூடகத் திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் விக்கிமீடியா நிறுவனத்தின் சின்னம்

விக்கிப்பீடியாவில் செய்திகளைத் திரட்டித் தரும் கலைக்களஞ்சியம் மட்டுமல்லாமல் 2002 இல் அகராதிகளுக்கு என்று விக்சனரி திட்டம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் பாட நூல்களுக்கு என்று "விக்கி நூல்கள்", மேற்கோள்களுக்கு என்று "விக்கிமேற்கோள்" ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. 2004 இல் மூல ஆவணங்களுக்கு என்று "விக்கிமூலம்" என்னும் திட்டமும், பல்லூடகங்களுக்கு என்று "விக்கிப் பொதுவகம்", உயிரினங்களை ஆவணப்படுத்துவதற்கு என்று "விக்கி உயிரினங்கள்" ஆகிய திட்டங்களும் தொடங்கப்பட்டன. கல்விக்கு உதவும் பாட உள்ளடக்கங்களைக் கொண்டு "விக்கிப் பல்கலைக்கழகம்" என்னும் திட்டம் 2006 இல் தொடங்கப்பட்டது. பயணிகளுக்கு உதவும் தகவல்களைக் கொண்ட "விக்கிபயணம்", தரவுகளைப் பகிர்வதற்கு என்று "விக்கித் தரவுகள்" ஆகிய திட்டங்கள் 2012 இல் உருவாகி செயற்படுகின்றன.

விக்கிப்பீடியா[தொகு]

wikt:முதற் பக்கம்
wikt:முதற் பக்கம்

விக்கிப்பீடியா கூட்டாக 287 மொழிகளில், கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் 55,600 க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 30 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள விக்கிப்பீடியர் சமூகத்தால் அதாவது தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன.

தமிழ் விக்கிபீடியா தமிழ் மொழியில் கிடைக்கின்ற கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. இங்கு தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு மட்டுமன்றி உலகளாவிய பல்வேறு துறைகளைப் பற்றிய பொது அறிவை தமிழ் மொழி ஊடாகப் பெறுகின்ற முதன்மைத் தளமாக விளங்குகின்றது. மேலும் இதனுள் இடுகை இடுதலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் உரை திருத்தலாம்.

விக்சனரி[தொகு]

Wiktionary
Wiktionary

விக்சனரி என்பது விக்கிப்பீடியாவின் ஒரு கிளைத் திட்டமாகும். விக்சனரி திட்டம் என்பது தமிழ் சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், பலுக்கல், அவற்றுக்கான படங்கள் முதலியவற்றைக் கொண்டு கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் குறிக்கோளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது தமிழ் விக்சனரி 2,83,300 க்கும் அதிகமான சொற்களுடன் (ஆங்கிலம் – தமிழ்) உலக மொழிகளுக்கான விக்சனரி பட்டியலில் உள்ள 180 மொழிகளில் 10 ஆம் இடத்தில் இருந்து வருகிறது. சீன மொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள், தெலுங்கு மொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள், உருது மொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் போன்ற சொற்களும் இந்த விக்சனரியில் தொகுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவைப் போலவே இதிலும் அனைவரும் பங்களிக்கலாம்.

விக்கி செய்திகள்[தொகு]

Wikinews
Wikinews

விக்கி செய்திகள் என்பது விக்கிப்பீடியாவில் நாட்டு நடப்புகள் மற்றும் செய்திகளைக் கட்டற்ற முறையில் தரும் திட்டமாகும். இத் திட்டத்தின் மூலம் சட்டமும் ஒழுங்கும், பண்பாடு, பேரிடர் மற்றும் விபத்து, பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவம், அரசியல், வரலாறு, அறிவியல், ஆன்மிகம், விளையாட்டு போன்ற பகுப்புகளின் கீழாகவும், ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா, உலகம் எனும் பகுப்புகளின் கீழாகவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் பெயரிலான பகுப்புகளிலும் முக்கியமான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன.

விக்கி நூல்கள்[தொகு]

Wikibooks
Wikibooks

விக்கி நூல்கள் எனும் திட்டம் கட்டற்ற, திறந்த உள்ளடக்கம் கொண்ட பாடநூல்கள் மற்றும் உரை நூல்களை உருவாக்கிப் பயன்பெறச் செய்து வருகிறது. இத்திட்டத்தில் குறைவான பங்களிப்புகள் உள்ளதால் குறைவான நூல்களே இதில் உள்ளன. இதிலிருந்து புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

விக்கி மேற்கோள்கள்[தொகு]

Wikiquote
Wikiquote

விக்கி மேற்கோள்கள் எனும் திட்டத்தில் நபர்கள், தொழில்கள், இலக்கிய ஆக்கங்கள், பழமொழிகள், ஆங்கிலப் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனும் உள் பகுப்புகளில் பல மேற்கோள்கள் தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன.

விக்கிமூலம்[தொகு]

Wikisource
Wikisource

விக்கி மூலம் எனும் திட்டத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாக்கங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கியச் சேகரிப்புகள், பிறரால் எழுதப்பட்டு காப்புரிமை விலக்கு பெற்ற புத்தகங்கள் போன்றவை தொகுக்கப்பட்டுள்ளன.

விக்கி பொதுவகம்[தொகு]

Commons
Commons

விக்கிப் பொதுவகம் என்பது கட்டற்ற ஊடகங்களை கொண்டுள்ள ஒரு விக்கித் திட்டமாகும். அது பகிரப்பட்ட ஒரு ஊடகக் கிடங்காகும். இதில் 1,84,59,477 ஒலி ஒளிக் கோப்புகள் உள்ளன. இயற்கை, கலை, வரலாறு, மொழி, இலக்கியம், இசை, பொருள்கள், மக்கள், இடங்கள், அரசியல், விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், புவி, வெளி முதலான பல தலைப்புகளில் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அசைபடங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், உலகவரைபடங்கள் (அட்லஸ்), ஓவியங்கள், புகைப்படங்கள், குறியீடுகள், இசைக் கோப்புகள், உச்சரிப்புகள், பேச்சுகள், காணொளிகள் ஆகியவை பகிரப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் ஆக்குநர்கள் வெளியிட்டுள்ள உரிமத்தின் கீழ் யாவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விக்கித்தரவு[தொகு]

Commons
Commons

விக்கித்தரவு ஒரு கட்டற்ற அறிவுத் தளம் ஆகும். இதனை மனிதர்களும் பொறிகளும் படிக்கவும் தொகுக்கவும் முடியும். ஊடகக் கோப்புகளுக்கு விக்கிமீடியாப் பொது பயன்படுத்தப்படுவது போல இத்தளம் தரவுகளுக்கானது: விக்கியிடை இணைப்புகள், புள்ளிவிவரத் தகவல்கள் போன்ற கட்டமைக்கப்பட்ட தரவுகளுக்கான அணுகலையும் மேலாண்மையையும் இது மையப்படுத்துகின்றது. விக்கிமீடியாவின் திட்டங்கள் உள்ள அனைத்து மொழிகளிலும் விக்கித்தரவு தரவுகளை கொண்டுள்ளது. விக்கித்தரவு பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள அறிமுகத்தைப் படிக்கலாம்.