வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாரிஸ்மியின் 1200 ஆவது பிறந்த நாளின்போது 1983 செப்டெம்பர் 6 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல்தலை.

முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார். இவர் பொ.ஆ 780ல் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும் அக்காலத்தில் குவாரிசும் என்று அழக்கப்பட்டதுமான இடத்தில் பிறந்தார். இவ்விடம் அக்காலத்தில் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. கிபி 820 ஆம் ஆண்டளவில் இவரால் எழுதப்பட்ட இயற்கணிதம் என்பதே ஒருபடிச் சமன்பாடு, இருபடிச் சமன்பாடு என்பவற்றின் முறையான தீர்வுகள் தொடர்பான முதல் நூலாகும். பலர் இவரை இயற்கணிதத்தின் தந்தை என்கின்றனர். எண்கணிதம் என்னும் இவரது நூலின் இலத்தீன் மொழிபெயர்ப்பு 12 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. இந்திய எண்கள் பற்றி விளக்கிய இந்த நூல் பதின்ம இட எண்முறையை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தியது. தொலெமியின், புவியியல் என்னும் நூலைத் திருத்தி இற்றைப்படுத்திய இவர் வானியல், சோதிடம் ஆகியவை தொடர்பிலும் நூல்களை எழுதியுள்ளார்.