லெனின்கிராட் முற்றுகை

ஆள்கூறுகள்: 59°55′49″N 30°19′09″E / 59.930248°N 30.319061°E / 59.930248; 30.319061
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெனின்கிராட் முற்றுகை
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி
நாள் 8 செப்டம்பர் 1941 – 27 ஜனவரி 1944
இடம் லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்
சோவியத் வெற்றி
பிரிவினர்
 Nazi Germany
 Finland[1][2]
இத்தாலி இராச்சியம் இத்தாலி[3]
 Soviet Union
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி வில்லெம் ரிட்டர் வான் லீப்
நாட்சி ஜெர்மனி ஜியோர்க் வான் கூச்லர்
பின்லாந்து கார்ல் கஸ்தாவ் எமில் மானர்ஹீம்[4]
அகஸ்டின் மியூனோஸ் கிராண்டேஸ்
சோவியத் ஒன்றியம் கிரகோரி சூக்கோவ்
சோவியத் ஒன்றியம் கிளிமெண்ட் வோரோஷிலோவ்
சோவியத் ஒன்றியம் லியோனிட் கோவோரோவ்
இழப்புகள்
தெரியவில்லை செஞ்சேனை:[5]
1,017,881 பேர் (மாண்டவர், போர்க்கைதிகள், காணாமல் போனவர்)
2,418,185 பேர் (காயமடைந்தவர்)

குடிமக்கள்:[5]
முற்றுகையில் 642,000 பேர், காலிசெய்தலில் 400,000 பேர்

லெனின்கிராட் முற்றுகை (Siege of Leningrad) அல்லது லெனின்கிராட் அடைப்பு (Leningrad Blockade, உருசியம்: блокада Ленинграда) 1941-44 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகத் தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான லெனின்கிராடை நாசி ஜெர்மனியின் படைகள் மூன்றாண்டுகள் முற்றுகையிட்டுக் கைப்பற்ற முயன்று தோற்றன. 872 நாட்கள் நீடித்த இம்முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது.

லெனின்கிராட் நகரம் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான நகரங்களுள் ஒன்றாக இருந்தது. வலிமை வாய்ந்த சோவியத் பால்டிக் கப்பற்படையின் தளமாகவும், பெரும் தொழில்மையமாகவும் விளங்கியது. சோவியத் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் 11 சதவிகிதத்திற்கு லெனின்கிராடே மூலம். எனவே ஜெர்மானியப் படைகள் இதனைக் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டின. ஃபீல்டு மார்சல் வான் லீப் தலைமையிலான ஆர்மி குரூப் வடக்கு, செப்டம்பர் 1941 இல் லெனின்கிராடை அடைந்து நகரை முற்றுகையிட்டது. தெற்கில் ஜெர்மானியப் படைகளும் வடக்கில் ஃபின்னியப் படைகளும் லெனின்கிராட் நகரையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் சுற்றி வளைத்தன. அடுத்த மூன்றாண்டுகள் அச்சு முற்றுகைப் படைகளுக்கும் நகரை விடுவிக்க முயன்ற சோவியத் படைகளுக்கும் இடையறாச் சண்டை நிகழ்ந்தது. மூன்று ஆண்டுகளில் மூன்று முறை லெனினிகிராடை விடுவிக்க சோவியத் படைகள் பெரும் தாக்குதல்களை மேற்கொண்டன.

முற்றுகையிடப்பட்ட லெனின்கிராடுக்கு உணவு மற்றும் தளவாடங்கள் வழங்க சோவியத் படைகள் உறைபனி வழியாக ஒரு சாலையை உருவாக்கின. “உயிர்ச் சாலை” என்றழைக்கப்பட்ட இச்சாலை மூலம், இடைவிடாத ஜெர்மானிய குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கிடையே உணவும் தளவாடங்களும் லெனின்கிராடுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கிழக்குப் போர்முனையில் சோவியத் தரப்பு வெற்றி பெறத் தொடங்கிய பின்னர் ஜனவரி 1943 இல் முற்றுகை சிறிதே தளர்ந்தது; நிலம் வழியாக லெனின்கிராட் நகரை அடைய சோவியத் படைகள் வழி ஒன்றை உருவாக்கின. லெனின்கிராட் ஜனவரி 1944 இல் மேற்கு நோக்கி முன்னேறி வந்த சோவியத் படைகளால் விடுவிக்கப்பட்டு முற்றுகை முடிவுக்கு வந்தது.

872 நாட்கள் நடைபெற்ற இம்முற்றுகையினால் ஏற்பட்ட உயிரிழப்பு உலக வரலாற்றில் ஒரு நகரத்தில் ஏற்பட்ட மாபெரும் உயிரிழப்பாக அமைந்தது. நகரத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு மையங்கள் ஜெர்மானியப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு பின் அழிக்கப்பட்டன. முற்றுகையினால் லெனின்கிராட் பகுதியில் பெரும் பஞ்சம் உண்டாகியது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் லெனின்கிராட் பகுதியில் இருந்து காலி செய்யப்பட்டனர். அவர்களில் மிகப்பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். காலி செய்தலின் விளைவாக இக்குடிமக்களிடையே பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இது தவிர மூன்றாண்டுகள் போரில் 15 லட்சம் சோவியத் வீரர்கள் உயிரிழந்தனர். முற்றுகையின் போது அச்சு தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி தரவுகள் கிட்டவில்லை. நகரில் எஞ்சியிருந்த குடிமக்கள் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். பட்டினிச்சாவுகள் மிகுந்து மாந்தர் ஒருவரையொருவர் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். லெனின்கிராட் முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Brinkley & Haskew 2004, ப. 210
  2. Wykes 1972, ப. 9–21
  3. Baryshnikov 2003; Juutilainen 2005, p. 670; Ekman, P-O: Tysk-italiensk gästspel på Ladoga 1942, Tidskrift i Sjöväsendet 1973 Jan.–Feb., pp. 5–46.
  4. Salisbury 1969, ப. 331
  5. 5.0 5.1 Glantz 2001, ப. 179

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனின்கிராட்_முற்றுகை&oldid=3924030" இலிருந்து மீள்விக்கப்பட்டது