மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில்

ஆள்கூறுகள்: 8°44′35.2″N 77°43′09.0″E / 8.743111°N 77.719167°E / 8.743111; 77.719167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில்
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் is located in தமிழ் நாடு
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில்
தமிழ்நாட்டில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி மாவட்டம்
அமைவு:திருநெல்வேலி
ஏற்றம்:58 m (190 அடி)
ஆள்கூறுகள்:8°44′35.2″N 77°43′09.0″E / 8.743111°N 77.719167°E / 8.743111; 77.719167
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகரில், உச்சிட்ட கணபதி மூலவராக அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் இதுவாகும். 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்[1] 'உச்சிஷ்ட கணபதி' அல்லது உச்சிட்ட கணபதி என்பது பிள்ளையார் 32 உருவ வேறுபாடுகளும் ஒன்று (எட்டாவது வேறுபாடு). மூலவர் உச்சிஷ்ட கணபதி தனது இடது தொடையில் அவரது மனைவி நீலவாணி (நீலசரசுவதி) உடன் அவரது துதிக்கை நீலவாணியின் வயிற்றுப் பகுதியில் படியுமாறு அமைந்த கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலின் தீர்த்தம், தாமிரபரணி ஆற்றின் ரிஷி தீர்த்தக் கட்டம் என்று அழைக்கப்படுகின்றது. பைரவ தீர்த்தம் கிணறு இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். வன்னி மரமும் பனை மரமும் இக்கோயிலின் தலவிருட்சங்கள் ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. சுவாமி சங்கரானந்தா தலைமையிலான கமிட்டி மூலம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 65 இலட்சம் ரூபாய்க்கு புனரமைப்புப் பணித் திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.[2]

கோயில் சிறப்புகள்[தொகு]

ஆசியாவின் மிகப்பெரிய ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் இதுவாகும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை மாதம் முதல் தேதி) அன்று மூலவர் உச்சிஷ்ட கணபதி மீது சூரியக் கதிர்கள் விழும் அரிய நிகழ்வு இக்கோயிலின் சிறப்பாகும்.[3] 2016ஆம் ஆண்டு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், கொடிமரம் ஒன்று உள்ளது. மொத்தமுள்ள 3 பிரகாரங்களில், மூலவர் உச்சிஷ்ட கணபதியைச் சுற்றிய பிரகாரத்தில் 16 வகை விநாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.[4] இக்கோயிலின் நீளம் சுமார் 80 மீட்டர். இதன் அகலம் சுமார் 40 மீட்டர்.

கோயில் வரலாறு[தொகு]

முன்னொரு காலத்தில், வித்யாகரன் என்ற அசுரன் பிரம்மாவை நினைத்து, கடும் தவம் புரிந்ததால், பிரம்மா அவர் முன் தோன்றினார். அவரிடம் வித்யாகரன் தனக்கு வரம் அருள வேண்டும் என்று கேட்க, பிரம்மாவும் வரம் அருள சம்மதித்தார். தனக்கு மரணமே ஏற்படக்கூடாது என்று வித்யாகரன் வேண்ட, மரணம் எல்லோருக்கும் பொதுவானது; எனவே வேறு வரம் அருள தயாராக இருப்பதாக பிரம்மா தெரிவிக்க, அப்படியானால் தன்னைக் கொல்ல வருபவர், தனியாக, ஆயுதங்கள் இல்லாமல், தன் துணைவியுடன் தன்னை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற வேண்டும்; அப்போது தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று கூற பிரம்மாவும் அவ்வாறே வரமருளினார். இது நடக்க சாத்தியம் இல்லாததால், தனக்கு மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதிய வித்யாகரன் தேவர்களை அதிகம் வருத்தினான். அவனால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட தேவர்கள் மும்மூர்த்திகளிடமும் அவனைப் பற்றி முறையிட, அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட மும்மூர்த்திகளின் யாகங்களினால், ஆதிபராசக்தி அவர்களின் முன் தோன்றி, அவர்களின் கோரிக்கையை ஏற்று, யாகத்திலிருந்து உச்சிட்ட கணபதியைத் தோன்றச் செய்தார். இதே வேளையில், பிரம்மாவும் தன் யாகத்திலிருந்து தன் மகளாக நீலசரசுவதி தோன்றுமாறு செய்ய, உச்சிட்ட கணபதிக்கும், நீலசரசுவதிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இச்சந்தர்ப்பத்தில் மும்மூர்த்திகளும், இந்திரனிடம், வித்யாகரனை உச்சிட்ட கணபதியுடன் இவ்வேளையில் போரிட வைத்தால் வித்யாகரனின் மரணம் நிச்சயம் என்று தெரிவிக்க, அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. வித்யாகரனும், உச்சிட்ட கணபதியுடன் போரிடச் சென்றவன், உச்சிட்ட கணபதி, நீலசரசுவதியுடன் தனித்திருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தவன், ஆயுதங்கள் இல்லாமல், தன் துணைவியுடன் இருக்கும் போது, உச்சிட்ட கணபதியின் தாங்க முடியாத ஒளிப் பிரகாசத்தால், மூர்ச்சையாகி மரணம் எய்தினான் என்பது புராண வரலாறு. அவ்வண்ணமே, உச்சிட்ட கணபதி நீலசரசுவதியுடன் இதே இடத்திலிருந்து எல்லோருக்கும் அருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கு அருள் பாலித்து வருகிறார்.

கோயிலின் மற்ற தெய்வங்கள்[தொகு]

அருள்மிகு நெல்லையப்பர், அருள்மிகு காந்திமதி அம்மன், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணியர், அருள்மிகு தட்சிணாமூர்த்தி, அருள்மிகு சண்டிகேஸ்வரர், அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் முனிவர் மற்றும் அருள்மிகு கன்னிமூல விநாயகர் இவர்களுடன் 16 வகை விநாயகர் (ஹேரம்ப கணபதி, சொர்ண கணபதி, சந்தானலட்சுமி கணபதி போன்ற) சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன.

அமைவிடம்[தொகு]

இக்கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் திருநெல்வேலி நகரில், மணிமூர்த்தீஸ்வரம் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 8.743098°N, 77.719160°E (8°44'35.2"N, 77°43'09.0"E). கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் இக்கோயிலிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் விரிவாக உள்ளது.[5]

கோயில் நேரங்கள்[தொகு]

இக்கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக, காலையில் 8 மணி முதல் 11.30 வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவிழாக்கள்[தொகு]

விநாயகர் சதுர்த்தி ஒவ்வோர் ஆண்டும் ஆவணி (தமிழ்) மாதம் 10 நாட்கள், தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி மூலவர் உச்சிஷ்ட கணபதி மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு ஆகியவை திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று, சங்கடஹர சதுர்த்தி அன்று, மாதந்தோறும் முதல் தேதி அன்று என முக்கிய நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "3 பிரகாரங்கள், 8 மண்டபங்கள், 900 ஆண்டுப் பழைமை; மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.
  2. "Uchishta Ganapathi - Tirunelveli>Tamil Nadu>Temple>உச்சிஷ்ட கணபதி". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.
  3. "மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு". Puthiyathalaimurai. https://www.puthiyathalaimurai.com/newsview/134989/Manimoortheeswaram-Uchishta-Ganapathy-Temple-Sunlight-is-a-rare-phenomenon. 
  4. "மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் வருஷாபிஷேகம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.
  5. "நலம் தரும் கணபதி". Hindu Tamil. பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.