பாலம் கல்யாணசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூலகர் பாலம் கல்யாணசுந்தரம்

பாலம் கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகத்து 1940) நூலகரும், சமூக சேவகரும் ஆவார். பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்து உள்ளார்.[1]. ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கல்யாணசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940ஆம் ஆண்டில் பிறந்தவர். திருமணமாகாதவர்.[2] பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் இவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வம் காரணமாக தமிழ் படிப்பதில் பிடிவாதமாக இருந்தார். பின்னர் கருமுத்து தியாகராஜ செட்டியார் பணம் கொடுத்துப் படிக்க உதவினார்.[3]. 1963ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது இந்திய சீனப் போரின் போது சவகர்லால் நேருவின் வானொலிப் பேச்சைக் கேட்டு தேசியப் பாதுகாப்பு நிதிக்காக எட்டரைப் பவுன் தங்கச் சங்கிலியை காமராசரிடம் கொடுத்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றி 1998-இல் ஓய்வு பெற்றார்.

தொண்டு நிறுவனம்[தொகு]

இவர் பாலம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் சேவை செய்து வருகிறார்.[4]

சிறப்புக்கள்[தொகு]

  • இந்திய அரசின் இந்தியாவின் சிறந்த நூலகர் விருது[5]
  • கல்வியறிவில்லாத ஏழை மக்களுக்கு 30 கோடி நிதியுதவி[6]
  • சுபாஷ் கலியன் இயக்கியத்தில் வெளியான "பாலம் கல்யாணசுந்தரம்" பற்றிய ஆவணப்படம். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்குத் தேர்வானது[7].
  • பில் கிளிண்டன் (அமெரிக்க அதிபர்) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். இதில் ஒருவர் டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம்.
  • 35 ஆண்டுகள் கல்லூரி நூலகராகப் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் வேலை பார்த்தவர்.
  • உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். இதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
  • தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்தார்
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடத்திற்கு நன்றியுடன் திரும்பினார்.
  • ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் A Most Notable intellectual in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
  • பிரபல கல்வியாளர் அரிமா லியோ முத்து சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை பரிசாக அளித்தார். ஆனால், தனது கொள்கைக்கு முரணானது என இப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.
  • ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஒருவர்.
  • பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.
  • கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.
  • பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.

1. எதற்காகவும் பேராசைப்படாதே. 2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய். 3. 'தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்' என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Practising what he preaches". Archived from the original on 2013-05-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2013-12-09.
  3. http://worldshockingphotos.blogspot.in/2012/12/mrkalayanasundarama-true-legend.html
  4. "பாலம் கல்யாணசுந்தரம் போன்று உதாரண புருஷராகத் திகழுங்கள்: ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 10 திசம்பர் 2013.
  5. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/rotary-honours-achievers/article4230582.ece
  6. http://www.dnaindia.com/india/report-73-year-old-tamil-nadu-librarian-donated-rs-30-crore-to-the-uneducated-poor-1928555
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2013-12-10.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலம்_கல்யாணசுந்தரம்&oldid=3970922" இலிருந்து மீள்விக்கப்பட்டது