நடுநிலக்கடல் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடுநிலக்கடல் சண்டை
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி

நடுநிலக்கடல் களம்
நாள் 10 ஜூன் 1940–2 மே 1945
இடம் நடுநிலக்கடல்
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஆத்திரேலியா
 ஐக்கிய அமெரிக்கா
 கனடா
 நெதர்லாந்து
யுகோஸ்லாவியா
 கிரேக்க நாடு
 போலந்து
 பிரான்சு
 இத்தாலி
 ஜெர்மனி
பிரான்சு விஷி பிரான்சு
இத்தாலிய சோசலிசக் குடியரசு

நடுநிலக்கடல் சண்டை (Battle of the Mediterranean) என்பது இரண்டாம் உலகப் போரில் நடுநிலக்கடலில் நடந்த கடற்படைப் போர்த்தொடரைக் குறிக்கிறது. ஜூன் 10, 1940-மே 2, 1945 காலகட்டத்தில் நடந்த இப்போர்த்தொடரில் நேச நாட்டுக் கடற்படைகள் வெற்றி பெற்றன. இது நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இரண்டாம் உலகப் போரில் பசிபிக் போர்முனைக்கு அடுத்தபடியாக பெருமளவில் மரபுவழி கடற்படை மோதல்கள் இப்போர்த்தொடரில் தான் நடைபெற்றன.

இப்போர்த்தொடரின் மோதல்கள் பெரும்பாலும் இத்தாலிய வேந்திய கடற்படைக்கும் பிரித்தானிய வேந்திய கடற்படைக்கும் இடையே நிகழ்ந்தன. இத்தாலியக் கடற்படைக்குத் துணையாக பிற அச்சு நாட்டுக் கடல் மற்றும் வான்படைகளும், பிரித்தானியக் கடற்படைக்கு ஆதரவாக நேச நாட்டு கடல் மற்றும் வான்படைகளும் பங்கேற்றன. இரு தரப்புகளுக்கும் இப்போர்த்தொடரில் மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. அவை:

  1. எதிர்தரப்பின் தளவாட வழங்கல் வழிகளைத் தாக்கி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல்
  2. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போரிட்டுக் கொண்டிருந்த தங்கள் தரப்பு படைகளின் தளவாட வழங்கல் வழிகளை எதிர் தரப்புத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தல்
  3. எதிர்தரப்பின் கடற்போர் வன்மையை அழித்தல்

1940ஆம் ஆண்டு மேற்குப் போர்முனையில் ஜெர்மானியத் தாக்குதல் ஆரம்பான பின்னால், இத்தாலி நேச நாடுகளுடன் போர் சாற்றியது. உடனடியாக நடுநிலககடலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இரு தரப்புகளும் மோதத் தொடங்கின. பிரான்சு ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்த பின்னால் அதன் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு கடற்படைப் பிரிவுகள் அச்சு வசமாகாதிருக்க அங்கிருந்த பிரெஞ்சு கப்பல்களை நெச நாட்டுக் கடற்படைகள் அழித்தன. அடுத்து வடக்கு ஆப்பிரிக்காவிலும் பால்கன் குடாப் பகுதிகளிலும் நடைபெற்ற தரைப்படை மோதல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இரு தரப்பு கடல்-வான் படைகள் மோதிக்கொண்டன. 1941 இல் பால்கன் போர்த்தொடரில் அச்சு தரப்புக்கும் இரண்டு ஆண்டுகள் கழித்து வடக்கு ஆப்பிரிக்காவில் நேச நாடுகளுக்கும் வெற்றி கிட்டியது. இடையே மால்டா தீவினைக் கைப்பற்ற அச்சுப் படைகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி கண்ட நேசப் படைகள் 1943 இல் இத்தாலி மீது படையெடுத்தன. இத்தாலி சரணடைந்த பின்னால் இத்தாலிய வேந்தியக் கடற்படை இரண்டாகப் பிளவுபட்டு ஒரு பிரிவு நேச நாடுகளுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவு நாசி ஜெர்மனிக்கு ஆதரவாகவும் போரிட்டன. 1944 இல் அச்சு கடல் மற்றும் வான்படைகள் மெல்ல அழிக்கப்பட்டு நேச நாட்டுப் படைகளின் கை ஓங்கியது. 1945இல் நேசப் படைகள் நடுநிலக்கடல் பகுதியில் முழு வான் மற்றும் கடல் ஆளுமை பெற்றன. மே 2, 1945 இல் இத்தாலியத் தீபகற்பத்தில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்ததுடன் நடுநிலக்கடல் சண்டை முடிவுக்கு வந்தது.


குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Blitzer, Wolf; Garibaldi, Luciano (2001). Century of War. Friedman/Fairfax Publishers. New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58663-342-2
  • Mollo, Andrew (1981). The Armed Forces of World War II. New York: Crown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-54479-4. {{cite book}}: Check |isbn= value: checksum (help)
  • Sadkovich, James (1994). The Italian Navy in World War II. Greenwood Press, Westport. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-28797-X
  • Walker, Ian W. (2003). Iron hulls, iron hearts: Mussolini's elite armoured divisions in North Africa. Marlborough: Crowood. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781861266460.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுநிலக்கடல்_சண்டை&oldid=3800659" இலிருந்து மீள்விக்கப்பட்டது