தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. அந்நூலின் ஐம்பத்திரண்டாவது படலமாக தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் உள்ளது. இதில் சோமசுந்தரப் பெருமான் வறுமையில் வாடிய வேதியனாகிய தருமி என்பவனுக்கு மன்னனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலை தானே எழுதிக்கொடுத்து பொற்கிழி பெற்றுக் கொடுத்த வரலாறு கூறப்படுகிறது.

படலச் சுருக்கம்[தொகு]

வங்கிய சூடாமணி பாண்டியன் என்பவன் மதுரை ஆட்சி செய்து வந்தார். அவர் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் கோயிலில் நந்தவனம் அமைத்து பல வகையான மரங்களையும், மலர்ச் செடிகளையும் வைத்து பராமரித்தார். அந்த நந்தவனத்தில் செண்பகப்பூ செடிகளை அதிகம் வைத்து அந்தப் பூக்களை இறைவனுக்கு அணிவித்து வந்தார். அதிகமாக செண்பக மாலையிலேயே இறைவன் காட்சியளித்தமையால், செண்பக சுந்ததரர் என்றும், மன்னன் செண்பகப் பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டார்.

செண்பக தோட்டத்தில் மன்னன் தன்னுடைய மனைவியுடன் இருந்தபோது, அவளுடைய கூந்தலில் இருந்து மணம் வருவதை அறிந்தான். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா. செயற்கையாக பூக்களை வைப்பதால் மணம் வருகிறதா என்ற கேள்வி எழுந்தது. தன்னுடைய சந்தேகம் என்ன வென்று கூறாமல், மன்னரின் சந்தேகத்தினை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவிக்க செய்து, சபையின் முன்பு அந்த பொற்கிழியையும் தொங்க விட்டான்.

மதுரை சொக்கநாதரை வணங்கும் தருமி என்ற ஆதி சைவர் இருந்தார். அவர் உறவுகள் இல்லாத அனாதையாக இருந்தார். அவருக்கு திருமணம் செய்து இறைவன் அடி சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஏழையாக இருந்தமையாலும், அனாதையாக இருந்தமையாலும் பெண் கிடைக்காமல் சிரமம் கொண்டார். தன்னுடைய மணவாழ்க்கைக்காக காத்திருந்தவருக்கு மன்னன் அறிவித்த ஆயிரம் பொற்காசுகள் போட்டியைப் பற்றிய செய்தி தெரிந்தது. அப்போது அங்கு வந்த சொக்கநாதர் புலவராக மாறி ஒரு ஓலையை தருமிக்குத் தந்தார். இதை மன்னிடம் கொடுத்தால் பரிசு கிடைக்கும் எனக் கூறினார்.

தருமியும் மன்னரின் அவைக்கு சென்று இறைவன் கொடுத்த பாடலைப் படித்தான். அதில் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்ற செய்தி மறைமுகமாக கூறப்பட்டிருந்தது. மன்னனுக்கு தருமியின் பாடல் சந்தேகம் தீர்த்து என்று பரிசினை தருமிக்கு கொடுத்தார். ஆனால் அவையிலிருந்த புலவர் நக்கீரன் என்பவர் தனக்கே அனைத்து புலமையும் தெரியும் என்ற ஆனவத்தால் அந்தப் பாடலில் பொருட் குற்றம் இருப்பதாக கூறி பரிசினை தடுத்துவிட்டார்.

தருமி சொக்கநாதர் கோயிலில் உள்ள இறைவனிடன் நடந்ததைக் கூறி முறையிட, இறைவன் மீண்டும் புலவராக வந்து தருமியுடன் இணைந்து அவைக்குச் சென்றார். அங்கு நக்கீரனுடன் வாதம் செய்தார். நக்கீரன் இயற்கையாக கூந்தலுக்கு மனமில்லை என்று மறுத்தே கூறிவந்தார். அதனால் கோபம் கொண்ட சொக்கநாகப் புலவர், இறைவியின் கூந்தலுக்குமா மனமில்லை என்ற கூற, ஆம் இறைவியின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை என்றார் நக்கீரர். பிழையான செய்தியை நக்கீரர் தன்னுடைய ஆனவத்தினால் சரியானது என்றே மறுப்பு தெரிவித்துவந்தார். அதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணால் அவரை எரித்தார். [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2196