ஓ. தணிகாசலம் செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் (திசம்பர் 1874 – சூலை 21, 1929) என்பவர் நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். வழக்குரைஞராக இருந்தார். பேச்சாற்றலும் வாதத் திறமையும் கொண்டவர். நீதிக்கட்சி சார்பில் சட்ட மன்ற மேலவையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார்.

1919 இல் சென்னை மாநகராட்சிக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1925 இல் சென்னை மாநகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அக்காலத்தில் நடந்த பிராமணரால்லாத மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டும் தலைமையேற்றும் செயல்பட்டார். நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராயரோடு இணைந்து பணியாற்றினார்.

அரசுப் பணியிடங்களைச் சமூக விகிதாச்சாரப்படி நிரப்பிப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டில் ஓ. தணிகாசலம் சென்னை சட்ட மன்ற மேலவையில் தீர்மானங்கள் கொண்டுவந்தார். அவை பிற்காலத்தில் 1928 ஆம் ஆண்டில் எஸ் முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்பு வாரி ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக அமைந்தன.

நீதித் துறையில் முனிசீப் நியமன அதிகாரத்தை அரசே ஏற்று செயல்படுத்தவேண்டும் என்று 1921 ஆம் ஆண்டில் தீர்மானம் கொண்டு வந்தார். சென்னையில் தியாகராயர் நகர் பகுதியில் ஒரு தெருவுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு[தொகு]

ஓ. தணிகாசலம் செட்டியார் தனது 54-ஆவது அகவையில் 1929 சூலை 21 இல் நீரிழிவு நோய் காரணமாகக் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 'பத்திராசிரியர் குறிப்புகள், லக்‌ஷ்மி மாத இதழ், சூன்-சூலை 1929, பக்: 355, மதராஸ்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._தணிகாசலம்_செட்டியார்&oldid=3237384" இலிருந்து மீள்விக்கப்பட்டது