எண்மூர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்மூர்த்தம்
காரோட் தலத்திலுள்ள எண்ணுருச்சிவன்
தேவநாகரிअष्टमूर्ति
துணைமாமாயை

எண்மூர்த்தம் எண்ணுரு அட்டமூர்த்தி என்பது சிவனின் எட்டுத் திருவுருவங்களைக் குறிக்கும் சொல்லாடல் ஆகும்.

வடமொழி இலக்கியங்கள்[தொகு]

இருக்கு வேதத்தில் உருத்திரனாக தோற்றம் பெறும் சிவன், சுவேதாசுவதர உபநிடதத்திலும் பின் யசுர்வேதத்தில் பெருந்தெய்வமாக வளர்ந்து நிற்கின்றார். சதபதப் பிரமாணமானது, பவன், உருத்திரன், வீமன். மாதேவன், சர்வன், பசுபதி, உக்கிரன், ஈசானன் முதலான எட்டுத் திருப்பெயர்களால் ஈசனைக் குறிப்பாக அழைக்கின்றது. இவை, காற்று, நீர் , வானம், பூமி, தீ, சூரியன், சந்திரன், ஆதன் எனும் எட்டுப் பொருட்களையும் மறைகுறியாய்ச் சொல்வதென்பர்.[1] இலிங்க புராணத்திலும் (2.13.03 - 2.13.18), பிற்கால சிவ மகிமா தோத்திரத்திலும் (சுலோகம் 28[2]), இவ்வெண்ணுரு பற்றிய குறிப்புகளைக் காண முடிகின்றது. சிவாகமங்கள் இந்த எட்டுப் பருண்மைகளுக்கும் ஈசனது எட்டு வடிவங்களாகப் பெருவடிவம் கொடுத்தன.[3]

தமிழ் இலக்கியங்கள்[தொகு]

தமிழ்ச் சைவ இலக்கியங்களில், இவ்வெண்ணுரு பற்றிய குறிப்புகளை அடிக்கடி காணமுடிகின்றது. ""நிலனீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்"" என்கின்றது திருவாசகம்.[4] ""அட்டமூர்த்திக்கு என் அகநெக ஊறும் அமிழ்தினுக்கு" என்று திருப்பல்லாண்டும்[5] இன்னும் தேவாரத் திருமுறைகளும் பற்பலவாகப் போற்றுகின்றன.

திருவுருக்கள்[தொகு]

ஐம்பூதங்களுடன், ஞாயிறு, நிலவு, ஆன்மா எனும் மூன்று பொருள் இணைத்து மொத்தம் எண்பொருள் ஆனது. ஐம்பூதங்களே பூவுலகில் அனைத்துக்கும் ஆதாரமாவது இந்து மெய்ஞ்ஞானத்தின் நம்பிக்கை. அவற்றுடன், மானுட வாழ்க்கைக்கு அவசியமான ஞாயிறும், அதன் கதிரை மீலத்தரும் நிலவும், இவை அனைத்தும் கூடுவதால் இயங்கும் ஆன்மாவும் இறைவனின் திருவுருவங்களே என்ற மூதிகம், "சர்வம் சிவமயம்" என்ற சைவக்கோட்பாட்டுக்கு அடித்தளமாகின்றன.[6]

உசாத்துணை[தொகு]

  1. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 70.
  2. சிவ மகிமா தோத்திரம்
  3. Kapila Vatsyayan, (1995)"Prakr̥ti: The Āgamic tradition and the arts" Page 32 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8124600392
  4. திருத்தோணோக்கம் 05
  5. சேந்தனார் திருப்பல்லாண்டு[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Stella Kramrisch (1992) "The Presence of Siva", Page 435, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691019304

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்மூர்த்தம்&oldid=3583503" இலிருந்து மீள்விக்கப்பட்டது