மருந்துவாழ் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருந்துவாழ் மலை (மருத்துவா மலை)

மருந்துவாழ் மலை (Marunthuvazh Malai) யுனஸ்கோ என்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் வழங்கிய உலக பாரம்பரிய மையங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்முனை பகுதியில் அமைந்துள்ள பல்லுயிரினங்கள் வாழும் குன்று தொகுதி ஆகும். இது மருந்துவாழ்மலை, தெய்வேந்திரன் குன்று பெரியகுறைவாய் என்ற முகடுகளை உடையது. குன்றின் உயர்ந்த முகடு 958 அடி அதாவது 279 மீட்டர் உயரமுள்ளது.[1][2]. இதுவே மருந்துவாழ்மலை என்றழைக்கப்படுகிறது. நாகர்கோவில் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி முதல், கன்னியாகுமரி – நெல்லை நெடுஞ்சாலை வரை விரிந்து பரந்துள்ளது.

மூலிகை வளம் நிறைந்துள்ளதாக நம்பிக்கை நிலவுவதால் மருத்துவாமலை என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த குன்றில் கடல் மட்டத்தில் இருந்து 40 மீட்டர் உயரத்தில் ரிச்சியா சாரியே Riccia sarieae என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3] இது, இந்திய அரசு 2022 இல் வெளியிட்ட பிளாண்ட் டிஸ்கவரி என்ற புத்தகத்தில், 72ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆசியா கண்டம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தென்முனையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் அருகே உள்ளது. ஞானம் போதித்த அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழி தலைமை பதியான சுவாமித்தோப்பில் இருந்து 3 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

இந்த குன்றை சுற்றி, பொற்றையடி, மந்தாரம்புதுார், வைகுண்டபதி, கன்னிமார்குன்று, கோட்டவிளை, ஆலடிவிளை கிராமம், பொட்டல்குளம், புன்னார்குளம், அழகப்பபுரம், கொட்டாரம், அச்சன்குளம், சாலக்குளம் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன. பேரூராட்சிகளான மைலாடி, அழகப்பபுரம், கொட்டாரம் சிற்றுாராட்சியான குலசேகரபுரம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் சூழ்ந்து உள்ளன.

குன்றை சுற்றி பேச்சிப்பாறை அணை பாசனக் கால்வாய்களான தோவாளை சானலில் மருந்துவாழ்மலை பிரதான கால்வாயும், புத்தனாறு கால்வாய் அமைந்து நீர்வளம் பெருக்குகின்றன. இவை சுற்றிலும் உள்ள பரப்பை வளப்படுத்துகின்றன. புத்தனாறு குளம், நாராயணிகுளம், மந்தாரம்புதுார்குளம், அச்சன்குளம் உட்பட பாசன நீர்பரப்புகள் உள்ளன. தோவாளை சானல் என்ற பாசன கால்வாய் தாடகைமலை அருகே நிலப்பாறை என்ற இடத்தில் பிரிகிறது. அங்கு தாடகை மலை அடிவாரத்தில் இருந்து உயர்த்தப்பட்ட கால்வாய் வழியாக மருந்துவாழ்மலை பிரதான பாசனக்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இது மருந்துவாழ்மலை தொடர்குன்றின் தெய்வேந்திரன் குன்று முகடு பகதியில் கவிழ்கிறது. அங்கிருந்து இரண்டாக பிரிந்து, மருந்துவாழ்மலையை சுற்றி பாய்ந்து படுகை நிலங்களை வளப்படுத்துகிறது. இந்த குன்றுத் தொகுதி, தமிழக வனத்துறையின், பூதப்பாண்டி வனச்சரகம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக உள்ளது. நிலப்பரப்பின் பெரும் பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா, குலசேகரபுரம் வருவாய் கிராமம் பகுதிக்கு உட்பட்டது. மைலாடி, அழகப்பபுரம், கொட்டாரம் வருவாய் கிராம பகுதிகளிலும் உள்ளது.

பல்லுயிரியம்[தொகு]

இயற்கை வளம் நிறைந்தது மருந்துவாழ்மலை. கிட்டத்தட்ட 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரந்துள்ளது. குன்று தொடர் முழுதுவம் எங்கும் பால்கள்ளி என்ற வாலஸ் ஸ்பர்ஜ் செடிகளும் அவற்றின் ஊடாக சுக்குநாறி என் புல்வகையும் வளர்ந்துள்ளன. இந்த பகுதியில், 103 வகை பறவை இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏராளமான மருத்துவ தாவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில், 134 வகை பறவைகள் இருப்பதாக, இபேர்ட் இணையதளம் குறிப்பிடுகிறது. பல்வகை ஓணான்கள், அணில், அரணைகள், முள்ளெலி, நரி, பாம்புகள், மரநாய், முயல், மிளா, குரங்கு மற்றும் பல விலங்கினங்கள் வசிக்கின்றன.

பறவைகள்[தொகு]

கொண்டலாத்தி, வெண்மார்பு மீன்கொத்தி, கறுப்பு வெள்ளை மீன்கொத்தி, பழுப்பு மீன் ஆந்தை, மணிப்புறா, கருஞ்சிட்டு, ஊதா தேன்சிட்டு, காட்டு மைனா, பச்சை குக்குறுவான், ஒணான் கொத்தி கழுகு, கரும்பருந்து, பச்சை பஞ்சுருட்டான், கரிச்சான் என்ற இரட்டைவால் குருவி, அரசங்காகம், அண்டங்காகம், ராசாளி, தையல்சிட்டு, உழவாரன், ஆசியன் குயில், வால்காக்கை, கள்ளிப்புறா, சாம்பல் கவுதாரி, ஆரஞ்சு மார்பு பச்சைப் புறா, செம்பருந்து, பாருகழுகு, வெண்கழுகு, வைரி, தகைவிலான், கருந்தலை சில்லை, புள்ளி ஆந்தை, மாடப்புறா, நீலவால் பஞ்சுருட்டான், பனங்காடை, பொன்மார்பு மரங்கொத்தி, செம்போத்து உட்பட 134 வகை பறவையினங்கள் இங்கு உள்ளன. பல பறவைகள் வலசை வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தாவரங்கள்[தொகு]

மருந்துவாழ் மலை குன்றில் எங்கும் சுக்குநாறி என்ற வகை புல் தாவரத்தை பார்க்கலாம். பால்கள்ளி என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் வாலஸ் ஸ்பர்ஜ் வகை தாவரம் வளர்ந்துள்ளது. கொடிகள்ளி, மட்டைக் கள்ளி என்ற பால்வடியும் தாவரங்களையும் அதிகம் காணலாம்.

மருந்துவாழ் மலையில் கல்லரசு, கல்லிச்சி, மருது, பட்டை விராசு, பூனைங்குரு, டீக்காமல்லி, கருவேல், குடைவேல், கல்லால் போன்ற மரங்களையும், விழுதி, பூமி சக்கரை கிழங்கு, கருடன் கிழங்கு, செந்தொட்டி, குறுந்தொட்டி, உத்தமதாளி, நிலநெல்லி, மேல்காய் நெல்லி, ஒடுஒடுக்கி, மலை முள்ளங்கி, சீமை நிலவேம்பு, மருந்து கூர்க்கன், கற்பூரவல்லி, துரட்டி, முறிபொருந்தி, மணலிக்கீரை, நித்திய கல்யாணி, நன்நாரி, சித்திரப்பாலை, சிறு தொய்யாக்கீரை, கருந்துளசி, நரிபச்சை, பொன் முசுட்டை, விழால், ஜலஸ்தம்பினி, மலை சிவனார்வேம்பு, பாறைக்கள்ளி, கொடிகள்ளி, சோமவள்ளி, அங்காரவள்ளி, பேராமுட்டி, தேங்காய் பூண்டு, கிரந்தி நாயகம், நல்நெருஞ்சில், நிலச்சடைச்சி, சுருட்டி, கருடி, கொமட்டிக்கீரை, குத்துக்கால் சம்மட்டி, பணப்புல், சந்தணப்புள்ளடி, வில்வம், கல் துயிலிக்கீரை, மரிக்குன்றிமணி, விரக்கைதை, மான்செவிக்கள்ளி, பெருநரளை, கூத்தன் குதம்பை, ஓமவல்லி, கரும்பூலா, வெட்பூலா, பாறையொட்டி, குமரி, செப்பு நெருஞ்சில், தரைப்பசலை, இறச்சிப்பச்சிலை, காட்டு ஆதொண்டை, செம்பருத்தி, மலைக்கல்லுருவி, நற்கொழிஞ்சி, சிறியாநங்கை, பெரியா நங்கை, சிறுகண்பீளை, நேத்திரப்பூண்டு, சதையொட்டி, விஷமூங்கில், திருப்பன்புல், விஸ்ணுகிரந்தி, கருடக்கொடி, அமிர்தவள்ளி, சரக்கொன்றை, செங்கொன்றை, இருவேலிமரம், கழற்ச்சி போன்ற தாவரங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. Barleria cuspidata என்ற முள்செடியும் இங்கு காணலாம். இதை பகுதிமக்கள், பூச்சி செடி என்கின்றனர்.

இவை, இந்திய கல்வி சங்கம் வெளியிடும் ஆய்வு இதழிலும், தி சவுதி ஜேர்னல் ஆப் லைப் சயின்ஸ் என்ற ஆய்விதழிலும் உள்ள கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. மருந்துவாழ்மலையில் கோசிபையும் ஆர்போரியம் Gossypium arboreum[4] என்ற மரப் பருத்தி தாவரம் இருப்பதை இந்திய தாவரவியல் ஆய்வாளர் பால்மதி வினோத் என்பவர், படத்துடன் பதிவு செய்துள்ளார்.

வரலாறு[தொகு]

மருந்துவாழ் மலை குன்றில் வரலாற்று தடயங்கள் பல உள்ளன. சிவ வழிபாட்டை அடையாளப்படுத்தும், கல்லால் செதுக்கப்பட்ட லிங்கங்கள் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் ஆட்சி பகுதிக்கு உட்பட்டிருந்த போது, மலையின் உச்சி முகடுக்கு தெற்கு பகுதியில் இருந்து ஏறும் வழியில் மூன்று மடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, பற்றி கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி சேர, சோழ, பாண்டிய மரபினர் ஆட்சி எல்லைகளில் மாறி மாறி வந்துள்ளது. இறுதியாக திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி பகுதியாக இருந்தது. சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாநிலங்கள் பிரித்த போது, தமிழ்நாடு அரசில் சேர்க்கப்பட்டது.

தொன்மம்[தொகு]

தமிழகத்தில் பல பகுதிகளில் வழங்கப்படும் தொன்மங்களில் மருந்துவாழ்மலை பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிப்பாக வாய்மொழி ராமாயணக் கதையுடன் தொடர்புபடுகிறது. ராமாயணக்கதையில் ராவணனுடனான போரில் இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து சென்றதாக ஒரு கதை உள்ளது. பெயர்த்து சென்றது இந்த மலைதான் என்று வாய்மொழி கதைகளில் கூறப்படுகிறது. வடக்கில் இருந்து பெயர்த்து வந்த போது தமிழ்நாட்டில் சிதறி விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலை ஒன்று என்ற கருத்தும் உள்ளது. இம்மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத்தடம் என்ற குகை உள்ளது. குன்றின் தென்மேற்கு பகுதி அரபிக்கடலில் இருந்து வீசும் காற்றால் இந்த குகையில் வித்தியாசமான தட்ப வெப்பம் நிலவும். இங்கு, புழு போன்ற மண் உயிரினங்களின் பெருக்கமும் வித்தியாசமாக அமைந்து சாதாரண மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

ஆன்மீகம்[தொகு]

சாதி மத ஏற்ற தாழ்வுகளை அகற்ற போராடிய ஸ்ரீ நாராயணகுரு இந்த குன்றின் ஒரு குகையில் தவமிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. இந்த குன்றின் தென்மேற்கு பகுதியில் பழையாறை ஒட்டி, அய்யா வைகுண்டர் தங்கி தவம் செய்து உருவாக்கிய சுவாமிதோப்பு பதி அமைந்துள்ளது. இது அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழி ஆன்மிகத்தில் தலைமை பதியாகும். மருந்துவாழ்மலை குறித்து, அய்யாவழி தொண்டர்களின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது. எனவே அய்யாவழி வழிபாட்டில் இம்மலை புனிதமாக மதிக்கப்படுகிறது.[5] கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பவுர்ணமியன்று இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். குன்றின் கிழக்கு பகுதி முகடான தெய்வேந்திரன் குன்றிலும் விளக்கு ஏற்றும் வழக்கம், 1990 ஆம் ஆண்டுக்கு பின் உருவாகியுள்ளது.

மகான் ஸ்ரீ நாராயணகுரு உருவாக்கிய சதயபூஜா சங்க நிர்வாகம் 1992 ஆம் ஆண்டில் ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் ஒன்றை மருந்துவாழ்மலை குன்றின் தெற்கு அடிவாரமான வைகுண்டபதி சிற்றுாரில் அமைத்து தொண்டு செய்துவருகிறது. பிரம்மசாரிகள் வசிக்கும் ஐயப்பசுவாமி மடம் இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது, சட்டம்பி சுவாமி என்பவரால் நிறுவப்பட்டது. மருந்துவாழ்மலை தென்பகுதியில் உள்ள குகையில் அமர்ந்து மாயம்மா தவம் செய்தார். தவக்காலம் முடிந்து ஐயப்பசுவாமிகள் மடத்தில் தங்கி சமூகப்பணிகள் செய்துவந்தார். பின், கன்னியாகுமரி கடற்கரையில் ஏகாந்த நிலையில் திரிந்தார். எல்லா உயரினங்களுக்கும் இந்த உலகம் பொதுவானது என வாழ்ந்து காட்டி அமைதி நிலை அடைந்தார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா உட்பட தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இவரது பக்தராக வலம் வந்தனர்.

எவ்வுயிரும் இனிதானது என வாழ்ந்த நைனான் சுவாமிகளும் இந்த குன்றின் தென்முனையில் அமைதி நிலையடைந்தார். இவர் இந்தியாவின் வடகிழக்கு மாநில பகுதியில் இருந்து இங்கு வந்ததாக கூறப்படுகிறது. புதிய வாழ்முறைகளை தேடியலைந்த பலர் மருந்துவாழ்மலை குன்று பகுதியில் தேடலுடன் வாழ்ந்த வரலாறு பல உள்ளன.

மருந்துவாழ்மலைக் குன்றின் கிழக்கு பகுதியில் தெய்வேந்திரன் குன்று உள்ளது. அதில் தெய்வேந்திரன் பெயரில் ஒரு கோவில் அமைந்துள்ளது. செங்குத்தான பாறையில் குடைவரை போன்ற இயற்கை குகை அமைப்பில் அது உள்ளது. அங்கு புடைப்பு சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுசீந்திரம் கோவில் கட்டுமான பணியின் போது, சிற்பக்கலைஞர்கள் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இங்கிருந்து சுசீந்திரம் கோவில் கோபுரத்தை பார்க்க முடியும். இந்த குடைவரையில் இரண்டு சுனைகள் உள்ளன. இதை தெய்வேந்திரன் சுனை என்பர். இதன் அருகே ஆலமரம் ஒன்று வளர்ந்திருந்தது. 1985ம் ஆண்டு வாக்கில் அது அடர்ந்து விழுந்தது. கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் போது இந்த சுனையை குடிநீர் ஆதாரமாக ஆலடிவிளை கிராம மக்கள் பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-18. பார்க்கப்பட்ட நாள் 2013-01-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-13.
  3. https://bsi.gov.in/uploads/documents/Plant%20Discoveries/Plant%20Discoveries%202022%20for%20upload%20final.pdf
  4. https://www.inaturalist.org/observations?nelat=8.132062500000025&nelng=77.50769439999999&place_id=any&swlat=8.129000599999975&swlng=77.5031539
  5. வருடியிருப்பதாலே மருந்து வாழ் மலையில் மருந்து வளரலாச்சே சிவனே அய்யா - சாட்டு நீட்டோலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்துவாழ்_மலை&oldid=3984771" இலிருந்து மீள்விக்கப்பட்டது