திருவித்துவக்கோடு

ஆள்கூறுகள்: 10°46′59.1″N 76°11′03.5″E / 10.783083°N 76.184306°E / 10.783083; 76.184306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உய்ய வந்த பெருமாள் கோயில்
திருவித்துவக்கோடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:பாலக்காடு
அமைவு:திருவித்துவக்கோடு
ஏற்றம்:37 m (121 அடி)
ஆள்கூறுகள்:10°46′59.1″N 76°11′03.5″E / 10.783083°N 76.184306°E / 10.783083; 76.184306
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 'திருமிற்றக்கோடு', 'திருவீக்கோடு', 'ஐந்து மூர்த்தி திருக்கோவில்' என்றும் இதனை வழங்குவர்.[2]

தலவரலாறு[தொகு]

இந்துத் தொன்மங்களின்படி துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள்வழிபாட்டிற்காக சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர். முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மானித்தனர். அவர்களது வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.[2]

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் என அழைக்கபடுகிறார். இறைவியின் பெயர் வித்துவக்கோட்டு வல்லி, பதமாசனி நாச்சியார். என்பதாகும். இத்தலத்தீர்த்தம் சக்ர தீர்த்தம். விமானம் தத்வ காஞ்சன விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.

சிறப்புக்கள்[தொகு]

கேரள நாட்டு ஆழ்வாரான குலசேகராழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது சிறப்பானதாகும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக 108 வைணவத் திருத்தலங்களில்10க்கு மேற்பட்ட தலங்கள் உள்ளன. பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
  2. 2.0 2.1 2.2 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவித்துவக்கோடு&oldid=3837033" இலிருந்து மீள்விக்கப்பட்டது