வட சீனச் சமவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு சீனச் சமவெளி (North China Plain) (எளிய சீனம்: 華北平原; மரபுவழிச் சீனம்: 華北平原பின்யின்: Huáběi Píngyuán) என்பது பிந்தைய தொன்னெழு காலம் மற்றும் புதுவெழு காலம் ஆகிய காலத்தில் தோன்றிய பெரிய அளவிலான பள்ளத்தாக்கு மற்றும் வடிநிலம் ஆகும். பின்னால் இது மஞ்சள் ஆற்றின் படிவுகளால் மாற்றியமைக்கப்பட்டது. சீனாவின் மிகப்பெரிய வண்டல் மண் சமவெளி ஆகும். இந்தச் சமவெளி வடக்கே யான்சான் மலைத்தொடராலும், மேற்கே டாய்காங் மலைத்தொடராலும், தெற்கில் டேபி மலைத்தொடர் மற்றும் டியான்மு மலைத்தொடராலும், கிழக்கில் மஞ்சள் கடலாலும் சூழப்பட்டுள்ளது. மஞ்சள் ஆறு இச்சமவெளியின் மையப்பகுதியில் பாய்ந்தோடி போகாய் கடலில் கலக்கிறது.

வட சீனா சமவெளி எனான், எபீ மற்றும் சாண்டோங் மாகாணங்களில் பெரும்பகுதி வரை பரவியுள்ளது, மேலும் வடக்கு ஜியாங்சு மற்றும் அன்கூய் மாகாணங்களில் உள்ள யாங்சே சமவெளியுடன் இணைகிறது. மஞ்சள் ஆறானது இந்த மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் வளைந்து நெளிந்து ஓடி போகாய் கடலில் கலக்கிறது. இந்தச் சமவெளியானது சீனாவின் மிக முக்கியமான விவசாயப் பிரதேசமாகும். இங்கு சோளம், கோதுமை, காய்கறிகள் மற்றும் பருத்தி ஆகியவை விளைவிக்கப்படுகின்றன. "மஞ்சள் பூமியின் நிலம்" எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தச் சமவெளியின் தெற்குப் பகுதியானது மரபுரீதியாக மத்திய சீனச் சமவெளி என அழைக்கப்படுகிறது. இந்தச் சமவெளியே சீனப் பண்பாட்டின் நாகரிகத்தின் தொட்டிலை உருவாக்குகிறது.[1][2]

இந்தச் சமவெளியானது 409,500 சதுர கிலோமீட்டர்கள் (1,58,100 சதுர மைல்கள்) பரந்து விரிந்துள்ளது. இந்தச் சமவெளியின் பெரும்பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 50 மீட்டர் (160 அடி) அளவு உயரத்திலேயே அமைந்துள்ளது. இந்த மஞ்சள் சமவெளியானது சீனாவில் சோளம், சிறுதானியம், மக்காச்சோளம் மற்றும் பருத்தி உற்பத்தியின் மிக முக்கியப் பகுதியாக அமைந்துள்ளது. கோதுமை, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களும் இப்பகுதியில் விளைகின்றன. இந்தச் சமவெளியானது உலகிலேயே மிக அதிகமான மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

சீனாவின் தேசியத் தலைநகரான பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் ஆகியவை இந்தச் சமவெளியின் வடகிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. இது வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு முக்கியமான தொழில் நகரமும், வணிகத் துறைமுகமும் ஆகும். இந்தச் சமவெளியில் சாண்டாங்கில் உள்ள செங்லி எண்ணெய்ப் படுகை ஒரு முக்கியமான பெட்ரோலிய வளப்பகுதியாகும்.

வரலாற்று முக்கியத்துவம்[தொகு]

வட சீனா சமவெளியின் புவியியல் ஆழமான கலாச்சார மற்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது. யாங்சியின் தெற்கே உள்ள பகுதிகளைப் போலல்லாமல், சமவெளியானது பொதுவாக மலைகளால் தடையேதுமின்றியும், மிகக் குறைவான ஆறுகளைக் கொண்டும் பரந்து கிடக்கிறது. இதன் விளைவாக குதிரை மூலமான தகவல் தொடர்பு இச்சமவெளியில் விரைவானதாக இருந்துள்ளது. இதன் விளைவாக, தெற்கு சீனாவில் உள்ள மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளின் பெருக்கத்திற்கு மாறாக இச்சமவெளியில் பயன்பாட்டில் இருக்கும் பேச்சு மொழி ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியானதாக உள்ளது.கூடுதலாக, விரைவான தகவல்தொடர்புக்கான சாத்தியம் இருந்த காரணத்தாலேயே சீனாவின் அரசியல் மையம் இங்கு அமைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.[3]

ஸ்டெப்பி புல்வெளிகள், சுங்கேரியாவில் உள்ள பாலைவனம்,உள் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனா ஆகியவற்றுடன் படிப்படியாக இந்தச் சமவெளியின் வளமான மண் இணைவதால், நாடோடிகள் மற்றும் பகுதியளவு இடம் பெயர்வோர் (பூர்வகுடிமக்கள்) ஆகியோரின் படையெடுப்பிற்கு அடிக்கடி ஆளாகக் கூடிய இடமாக இருந்தது. இதுவே சீனப் பெருஞ் சுவரின் கட்டுமானத்திற்கும் அடிப்படையாக அமைந்தது.

வட சீனா சமவெளியின் மண் வளமானதாக இருந்த போதிலும், வானிலையானது கணிக்க முடியாததாக உள்ளது. இப்பகுதியின் காலநிலையானது பசிபிக் பகுதியிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று மற்றும் ஆசிய கண்டத்தின் உட்புறத்திலிருந்து வருகின்ற வறண்ட காற்று இவற்றின் சந்திப்பின் விளைவானதாக அமைகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி இரண்டுமே மாறி மாறி உருவாகின்றன. மேலும், ஆற்றில் நீரோட்டத்தின் காரணமாக சேதமேற்படும் போது இச்சமவெளி பெரும் சமதளப்பரப்பாக இருப்பதன் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.இந்த காரணிகள் ஒரு மையப்படுத்தப்பட்ட சீன அரசின் வளர்ச்சியை ஊக்குவித்ததாக பல வரலாற்றாசிரியர்கள் முன்மொழிந்துள்ளனர். இப்பகுதி மக்கள் ஸ்டெப்பி பகுதி வாழ் மக்களோடு ஒப்பிடும் போது குதிர் பயன்பாடு, நீர்ப்பாசன முறைகளையும்,கோட்டைகளையும் நிர்வகிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BASIC INFORMATION ON CHINA
  2. Keekok Lee (24 October 2008). Warp and Weft, Chinese Language and Culture. Strategic Book Publishing. பக். 39–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60693-247-6. https://books.google.com/books?id=Ku1Sr-q9KNUC&pg=PA39. பார்த்த நாள்: 2 November 2011. 
  3. Ramsey, S. Robert, The Languages of China. Princeton University Press (1987), pp. 19-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_சீனச்_சமவெளி&oldid=2866559" இலிருந்து மீள்விக்கப்பட்டது