ரோமின் ஆக்னெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோமின் புனித ஆக்னெஸ்
கன்னி, மறைசாட்சி
பிறப்புசுமார். 291
இறப்புசுமார். 304
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம், கீழை சபைகள், ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
முக்கிய திருத்தலங்கள்ரோமின் ஃபோரி லி முரா, அகோன் ஆகிய இடங்களில் உள்ள புனித ஆக்னெஸ் ஆலயங்கள்
திருவிழாஜனவரி 21
சித்தரிக்கப்படும் வகைசெம்மறி குட்டி
பாதுகாவல்கற்பு; திருமண ஒப்பந்தமானோர்; தானியங்கள்; தோட்டக்காரர்கள்; சிறுமிகள்

ரோமின் புனித ஆக்னெஸ் (291 – 304) ஒரு கன்னி மறைசாட்சி (கிறிஸ்தவ விசுவாசத்துக்காக கொல்லப்பட்டவர்) ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், மற்றும் லூதரனியம் ஆகிய கிறிஸ்தவப் பிரிவுகளில் புனிதராகப் போற்றப்படுகிறார். திருப்பலியில் பெயர் குறிப்பிடப்படும் புனிதர்களுள் இவரும் ஒருவர்.

தொடக்க காலம்[தொகு]

பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, ரோம் நகரில் பேட்ரீசியன் என அழைக்கப்பட்ட உயர்குல குடும்பத்தில் ஏறக்குறைய கி.பி.291ஆம் ஆண்டு ஆக்னெஸ் பிறந்தார்.[1] ஆக்னெஸ் என்ற இலத்தீன் வார்த்தைக்கு செம்மறி குட்டி என்று பொருள். இதன் மூலமான ஹாக்னெ (ἁγνή) என்ற கிரேக்க வார்த்தைக்கு கற்பு, தூய்மை, புனிதம் ஆகிய அர்த்தங்கள் உண்டு. சிறு வயது முதலே இயேசுவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எனவே, 12 வயதிலேயே தனது கன்னிமையை இயேசுவுக்கு அர்ப்பணித்தார்.

இவர் அழகான தோற்றம் கொண்டவராக இருந்ததால் உயர்குல இளைஞர்கள் பலர் இவரை மணம் முடிக்க போட்டி போட்டுக்கொண்டு சென்றனர். ஆனால் இவரோ அவர்களிடம், “விண்ணக மணவாளர் இயேசு கிறிஸ்துவுக்கு எனது கன்னிமையைக் கையளித்து விட்டேன்” என்று கூறினார். இதனால் அந்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கற்புடைமை[தொகு]

ரோமில் தியோக்ளேசியன் பேரரசனாக இருந்த அக்காலத்தில், கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றிய மக்கள் ரோமையரால் வதைத்துக் கொலை செய்யப்பட்டனர். ஆக்னெசைத் திருமணம் செய்ய முடியாமல் ஏமாந்த ஒருவன், கோபத்தில் இவர் கிறிஸ்தவர் என்பதை ரோம அதிகாரி செம்ப்ரோனியஸ் என்பவனிடம் போய்க் கூறினான்.

தொடக்கத்தில் அதிகாரி இவரது மனதை மாற்ற முயற்சி செய்தான். ரோமத் தெய்வங்களுக்கு சாம்பிராணிப் போட்டால் இவரை விட்டு விடுவதாகக் கூறினான். அது பலன் அளிக்காததால், கிறிஸ்தவர்களை கொடுமைப் படுத்தும் ஆயுதங்களை இவர்முன் கொண்டுவந்து மிரட்டினார்கள். இவரோ எதைக் கண்டும் பயப்படவில்லை.இதனால் ஆக்னெசை விலைமாதர் இல்லத்திற்கு கொண்டு செல்லுமாறும், யாரும் இவரை கறைபடுத்தலாம் என்றும் அதிகாரி அறிவித்தான்.

காமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு சென்று இவரைத் நெருங்க முடியாமல் திரும்பினர். ஒருவன் இவரைத் தொட நெருங்கியபோது, “உன் வாளில் என் இரத்தக் கறை படிந்தாலும், இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான என் உடலை உன்னால் கறைபடுத்த இயலாது” என்று ஆக்னஸ் கூறினார். உடனே மின்னல் போன்ற ஒரு ஒளி அவன் கண்களைப் பார்வையிழக்கச் செய்தது. இவர் அவன்மேல் இரக்கம் காட்டி அவனுக்காக செபம் செய்தார். அப்பொழுது அவன் பார்வை பெற்று மனம் மாறினான்.

மறைசாட்சி[தொகு]

இயேசுவின் மேல் கொண்ட அன்பால், இறுதி வரை ரோமத் தெய்வங்களை வணங்காத காரணத்தால் ரோம அதிகாரி இவருக்கு மரண தண்டனை விதித்தான். கி.பி.304 ஜனவரி 21ந்தேதி, வாளால் தலை வெட்டப்பட்டு தனது 13ஆம் வயதில் இயேசுவுக்கு சாட்சியாக ஆக்னெஸ் உயிர் துறந்தார். இவரது கன்னிமை மற்றும் மரணம் பற்றி புனித அம்புரோசும் குறிப்பிட்டிருக்கிறார்.[1]

இவரது கல்லறையில் செபித்த பலருக்கும் இறைவன் அற்புதங்கள் செய்ததால், அக்காலம் முதலே இவர் புனிதராக வணங்கப்படுகிறார். கிறிஸ்தவ சமயத்திற்கு சுதந்திரம் அளித்த ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் மகளான புனித கான்ஸ்டன்ஸ் என்பவர் புனித ஆக்னெசின் கல்லறையில் செபித்ததால் தொழுநோயில் இருந்து குணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

1962 முதல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியின்படி, இவரது திருவிழா ஜனவரி 21ந்தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "NPNF210. Ambrose: Selected Works and Letters - Christian Classics Ethereal Library". Ccel.org. 2005-06-01. பார்க்கப்பட்ட நாள் 2009-01-21.
  2. cf. LiturgyOffice.co.uk

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமின்_ஆக்னெஸ்&oldid=3481618" இலிருந்து மீள்விக்கப்பட்டது