மேற்குலக மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.

தோற்றம்[தொகு]

பழங்காலத்துப் புரிதல் அடிப்படையிலும், அக்காலத்து மெய்யியலாளர்கள் எழுதியவற்றின் அடிப்படையிலும், மெய்யியல், எல்லா அறிவுசார் துறைகளையும் உள்ளடக்கி இருந்தது எனலாம். இன்று நாம் மெய்யியல் என்று புரிந்து கொள்ளும் விடயங்களோடு, கணிதத் துறையும், இயற்பியல், வானியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளும் மெய்யியலுள் உள்ளடங்கி இருந்தன. மேற்குலகத்தின் மெய்யியல், பல்வேறுபட்ட தனித்துவமான மரபுகள், அரசியல் குழுக்கள், சமயக் குழுக்கள் போன்றவற்றின் சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதால், பல வேளைகளில் மேற்குலக மெய்யியல் என்னும் தொடர் தெளிவற்ற பொருளையே தருகிறது என்பதுடன் அதனைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருப்பதில்லை.

மேற்குலக மெய்யியலின் துணைத் துறைகள்[தொகு]

மேற்குலக மெய்யியலாளர்கள், பல பிரிவுகளாக அல்லது சிந்தனைக் குழுக்களாகப் பிரிந்து இருப்பதைக் காணலாம். மெய்யியல் துறையின் வெவ்வேறு பகுதிகள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதனாலும், கருத்தியல் அடிப்படையிலான வேறுபாடுகளினாலும் இப்பிரிவுகள் உருவாகின்றன. பழங்காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது, ஏரணம், அறவியல், இயற்பியல் என்பவற்றைக் கையாளும் உறுதிப்பாட்டியல் (அல்லது "நடுநிலைக் கோட்பாடு") எனப்படும் மெய்யியல் பிரிவு. இது உலகின் இயல்பை அறிந்துகொள்வதற்கான ஒரு துறையாகக் கருதப்பட்டதுடன், மீவியற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியும் இருந்தது. தற்கால மெய்யியல், பொதுவாக, மீவியற்பியல் (அல்லது "நுண்பொருளியல்"), அறிவாய்வியல், அறவியல், அழகியல் என்னும் பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது[1]. ஏரணம் சில வேளைகளில், மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவாகவும், சில வேளைகளில் ஒரு தனியான அறிவியலாகவும், வேறு சில சமயங்களில் மெய்யியலின் பல்வேறு கிளைகளிலும் பயன்படும் ஒரு மெய்யியல் முறையாகவும் விளங்குகிறது.

தற்காலத்தில், இவ்வாறான முக்கிய பிரிவுகளுள் எண்ணற்ற துணைப் பிரிவுகளும் உள்ளன. பரந்த அளவில் பகுத்தாய்வு மெய்யியல், கண்டம்சார் மெய்யியல் போன்ற பிரிவுகளும் அவற்றுக்குள் துணைப்பிரிவுகளும் உள்ளன.

குறிப்பிட்ட துணைப்பிரிவுகளின் மீதான ஆர்வம் பல்வேறு கால கட்டங்களில் குறைந்தும் கூடியும் வந்துள்ளது. சில வேளைகளில் சில துணைப்பிரிவுகள் மெய்யியலாளரிடையே பெருமளவு ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைவதுடன், மெய்யியலின் முக்கியமான பிரிவுகளைப் போலவே இவை தொடர்பிலும் பெருமளவு நூல்கள் வெளியாவதையும் காணலாம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மீவியற்பியலின் ஒரு துணைப்பிரிவான மனம்சார் மெய்யியல், பகுத்தாய்வு மெய்யியலுள் பெருமளவு கவனத்தை ஈர்த்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

குறிப்புகள்[தொகு]

  1. நாராயணன், க., மேலைநாட்டு மெய்ப்பொருள், மாரி பதிப்பகம், புதுச்சேரி, 2003. பக். 21
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்குலக_மெய்யியல்&oldid=1430956" இலிருந்து மீள்விக்கப்பட்டது