மில்வினா டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மில்வினா டீன்
Millvina Dean
பிறப்புஎலிசபெத் கிளாடிஸ் மில்வினா டீன்
(1912-02-02)2 பெப்ரவரி 1912
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு31 மே 2009(2009-05-31) (அகவை 97)
ஹாம்ப்சயர், ஐக்கிய இராச்சியம்
பெற்றோர்பேர்ட்ரம் பிரான்க் டீன்
ஜியோர்ஜெட்
உறவினர்கள்பேர்ட்ரம் டீன் (தமையன்)

மில்வினா டீன் (Millvina Dean, பெப்ரவரி 2, 1912 - மே 31, 2009) என்பவர் 1915, ஏப்ரல் 15 ஆம் நாளில் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியாவார். அத்துடன் இரண்டு மாதக் குழந்தையாக இக்கப்பலில் பயணித்த வயதில் குறைந்த பயணியும் இவராவார்[1].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மில்வினா டீன் இலண்டனில் பிறந்தவர். டீனின் பெற்றோர் இங்கிலாந்தை விட்டு ஐக்கிய அமெரிக்காவின் கான்சசில் குடியேறத் தீர்மானித்து குடும்பத்துடன் புறப்பட்டனர்[2]. முதலில் வேறொரு கப்பலில் பயணத்தை ஆரம்பித்த டீன் குடும்பம் நிலக்கரித் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக டைட்டானிக் கப்பலில் பயணத்தைத் தொடர்ந்தனர். அங்கு அவர்கள் மூன்றாம் வகுப்பில் பயணித்தனர். மில்வினாவிற்கு அப்போது வயது இரண்டு மாதங்களே. 1912 ஏப்ரல் 14 ஆம் நாளில் கப்பல் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து டீன் குடும்பம் அவசரகாலப் படகு மூலம் வேறு சிலருடன் வெளியேற்றப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது தந்தை இறந்து விட்டார். அவரது உடலும் அடையாளம் காணப்படவில்லை.

மில்வினா டீன், (வலது பக்கத்தில்), தமையன் பேட்ரம் உடன்

தந்தை இறந்து விடவே இரண்டு பிள்ளைகளுடன் தனித்து அமெரிக்கா செல்ல விரும்பாமல் தாயார் இங்கிலாந்து திரும்ப முடிவு செய்து ஏட்ரியாட்டிக் என்ற கப்பலில் இங்கிலாந்து திரும்பினர்.

திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோர் அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது[3].

மறைவு[தொகு]

இந்நிலையில் 97 வயதான மில்வினா 2009 மே 31 இல் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் இறந்தார்[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Last Titantic survivor dies aged 97
  2. Mr Bertram Frank Dean - Titanic Biography
  3. "டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த கடைசி நபரும் மரணம்". Archived from the original on 2010-09-02. பார்க்கப்பட்ட நாள் 2009-06-02.
  4. Millvina Dean, last remaining survivor of the Titanic, dies aged 97

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்வினா_டீன்&oldid=3858255" இலிருந்து மீள்விக்கப்பட்டது