புனித திமொத்தேயு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Saint Timothy
புனித திமொத்தேயு
ஆயர்
பிறப்புகி.பி. சுமார் 17
இறப்புகி.பி. சுமார் 97
மசெதோனியா
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்கம்
கீழை மரபுவழி சபைகள்
கிழக்கு மரபுவழி சபை
ஆங்கிலிக்கன் சபை
லூத்தரன் சபை
திருவிழாசனவரி 22 (கீழைத் திருச்சபை)
சனவரி 26 (உரோமன் கத்தோலிக்கம், லூத்தரன் சபை)
சனவரி 24 (1970 நாள்காட்டி சீர்திருத்தத்துக்கு முன் சில தலத் திருச்சபைகள்)

திமொத்தேயு (கிரேக்கம்:Τιμόθεος= Timótheos) என்பவர் கிறித்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும் ஆயரும் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்" என்றும் "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள் உண்டு.[1][2]

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின்படி திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறித்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும் (காண்க: 1 திமொத்தேயு), 2 திமொத்தேயு.

வாழ்க்கை வரலாறு[தொகு]

திமொத்தேயு பற்றிய சில குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூலில் உள்ளன. புனித பவுல் தமது இரண்டாம் மறையறிவிப்புப் பயணத்தை மேற்கொண்ட போது அனத்தோலியா பகுதியில் லிஸ்திராவுக்குச் சென்றார். "லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரர்களிடையே நற்சான்று பெற்றவர்" (திருத்தூதர் பணிகள் 16:1-2).

திமொத்தேயு தம் பாட்டி லோரியிடமிருந்து மறைக்கல்வி பெறுதல். ஓவியர்: ரெம்ப்ராண்ட். ஆண்டு: 1648

ஓரிடத்தில் பவுல் திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைத்து, "ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர்" என்று கூறுகின்றார் (1 கொரிந்தியர் 4:17). மேலும் பவுல் திமொத்தேயுவைக் குறித்து "விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை" என்கிறார் (1 திமொத்தேயு 1:1). இன்னோர் இடத்திலும் பவுல் திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைக்கிறார் (2 திமொத்தேயு 1:1).

திமொத்தேயு பவுலோடு சேர்ந்து பல மறையறிவிப்புப் பயணங்களை மேற்கொண்டார். யூத மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று உணர்ந்த பவுல் திமொத்தேயு யூத முறைப்படி விருத்தசேதனம் செய்ய ஏற்பாடு செய்தார் (காண்க: திருத்தூதர் பணிகள் 16:3).

திமொத்தேயு திருப்பணியில் அமர்த்தப்பட்டார். "இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே" என்று பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் (காண்க: 1 திமொத்தேயு 4:14).

திருப்பணி[தொகு]

திமொத்தேயு பவுலோடு கீழ்வரும் இடங்களுக்குப் பயணமாகச் சென்று கிறித்தவ மறையைப் போதித்தார் (காண்க: திருத்தூதர் பணிகள் 16-18):

  • பிரிகியா
  • கலாத்தியா
  • மீசியா
  • துரோவா
  • பிலிப்பி
  • பெரோயா
  • கொரிந்து

திமொத்தேயுவின் தாய் யூனிக்கி என்பவரும், பாட்டி லோயி என்பவரும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததை பவுல் எடுத்துக்காட்டுகிறார் (காண்க: 2 திமொத்தேயு1:5). அவர்கள் கிறித்தவர்களாக இருந்திருக்கலாம்.

மற்றோர் இடத்தில் பவுல் திமொத்தேயு சிறந்த விவிலிய அறிவு கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்: "நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறித்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது" (2 திமொத்தேயு 3:15).

திமொத்தேயு ஒருமுறையாவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது எபிரேயர் திருமுகத்திலிருந்து தெரிகிறது: "நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார்" (எபிரேயர் 13:23).

திமொத்தேயுக்கு ஒருவித வயிற்று நோய் இருந்தது என்பதும் பவுலின் கூற்றிலிருந்து தெரிகிறது: "தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து"(1 திமொத்தேயு 5:23).

எபேசு நகரில் தவறான கொள்கைகள் பரவும் ஆபத்து இருந்ததால் பவுல் திமொத்தேயுவிடம் அங்கேயே தங்கி இருக்கும்படி கூறுகிறார்: "நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு" (1 திமொத்தேயு 1:3).

எபேசு சபையில் தகுதிவாய்ந்த சபைக் கண்காணிப்பாளர்களையும் திருத்தொண்டர்களையும் தேர்ந்தெடுத்து நியமிப்பது குறித்து பவுல் திமொத்தேயுக்கு விரிவான வழிகாட்டல் தருகிறார் (காண்க: 1 திமொத்தேயு 3:1-13). இந்த வழிமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றன.

பிற்கால மரபுச் செய்திகள்[தொகு]

பிற்கால மரபுப்படி, பவுல் திமொத்தேயுவை கி.பி. 65ஆம் ஆண்டளவில் எபேசு சபையின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அங்கே திமொத்தேயு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். கி.பி. 97இல், திமொத்தேயுவுக்கு 80 வயது ஆனபோது, அவர் பேகனிய சமயக் கொண்டாட்டங்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் அவரைத் தெருவில் இழுத்துக்கொண்டுபோய் கல்லால் எறிந்து கொன்று போட்டனர்.

கி.பி. 4ஆம் நூற்றாண்டில் திமொத்தேயுவின் மீபொருள்கள் காண்ஸ்டாண்டிநோபுளில் தூய திருத்தூதர்கள் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

வணக்கம்[தொகு]

கீழை மரபுச் சபையில் திமொத்தேயு ஒரு திருத்தூதராகவும், புனிதராகவும் மறைச்சாட்சியாகவும் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா சனவரி 22ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்பையில் திமோத்தேயுக்கு பவுலின் மற்றொரு சீடரான தீத்து என்பவரோடு இணைத்து விழாக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழா சனவரி 26ஆம் நாள் ஆகும்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "MFnames.com - Origin and Meaning of Timothy". Archived from the original on 2010-08-30. பார்க்கப்பட்ட நாள் 2013-01-29.
  2. Zelo.com - What does the name TIMOTHY mean?

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_திமொத்தேயு&oldid=3564453" இலிருந்து மீள்விக்கப்பட்டது