பழுப்பு காணான் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு காணான் கோழி
Brown crake
சாம்பல் ஆறு, உத்திரப்பிரதேசம், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவைகள்
வரிசை: குருயுபார்மிசு
குடும்பம்: ராலிடே
பேரினம்: ஜாபோர்னியா
இனம்: ஜா. அகூல்
இருசொற் பெயரீடு
ஜாபோர்னியா அகூல்
சைக்கீசு, 1832
வேறு பெயர்கள்

அமாயுரோர்னிசு அகூல்
சைக்கீசு,1832

பழுப்பு காணான் கோழி (Brown crake)(ஜாபோர்னியா அகூல்), அல்லது பழுப்பு புதர் கோழி தெற்காசியாவில் காணப்படும் காணான் கோழிகள்/நாமக் கோழிகள் வகைகளுள் ரல்லிடே குடும்பத்தினைச் சார்ந்த நீர்ப் பறவையாகும். இதன் சிற்றினப்பெயரான அகூல் தோற்றம் குறித்த நிச்சய தகவல் இல்லை. இது இந்து புராணங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் அல்லது சிங்கள வார்த்தையான குக்குல என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம். இச்சொல்லானது தாழைக்கோழி மற்றும் தண்ணீர்க்கோழிக்கும் பயன்படுத்தப்படுகிறது.[2]

விளக்கம்[தொகு]

பழுப்பு காணான் கோழி கௌதாரியைவிட அளவில் சிறியதாக, சுமார் 28 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு பச்சை நிறம், விழிப்படலம் கரும்பழுப்பு, கால்கள் வெளிர் சிவப்பு நிறமாக இருக்கும். இந்தக் கானங்கோழி பழுப்பு நிறத்தில் மிகக் குறுகிய வாலுடன் இருக்கும். தலையின் பக்கங்களும், கழுத்தும் சாம்பல் நிறத்தில் இருக்கும். முதுகும் இறக்கைகளும், வாலும் ஆலிவ் நிறங் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பும் வயிறும் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். வாலடிப் பகுதி சற்றுப் பழுப்பாக இருக்கும். ஆணும் பெண்ணும் உருவத்தில் ஒன்று போலவே இருக்கும் என்றாலும், ஆண் பறவையைவிட பெட்டை சற்று சிறியதாக இருக்கும்.[3]

பரவல்[தொகு]

ஆந்திராவிலும் கருநாடகத்திலும் இதைக் கண்டு குறித்துள்ளனர்.[3] தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரையிலும், மலைகளிலும் இவை வாழ்வது குறித்த குறிப்புகள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.

நடத்தை[தொகு]

இவை பிற கானாங்கோழிகளைப் போலவே அஞ்சி மறைந்து திரியக்கூடியவை. பொதுவாக காலை மாலை வேளைகளில் மட்டுமே மறவிடத்தில் இருந்து வெளிவரும். நாணல், நீர்த்தாவரங்கள் மீது ஏறி நடக்கும். பறக்கும் ஆற்றல் குறைவு. புழுபூச்சிகள், குடம்பிகள், நத்தைகள், விதைகள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. மே முதல் ஆகத்து வரையிலான காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. நீர்த்தாவரங்கள், புற்களிடையே சிறு மேடைபோல கூடு அமைத்து ஐந்து முதல் ஆறு வரையிலான முட்டைகளை இடுடுகிறது. முட்டைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், முட்டையின் பெரிய முனையில் செம்பழுப்பு செங்கல் சிவப்புக் கறைகள் காணப்படும். முட்டைகளை ஆணும் பெண்ணும் அடைகாத்து குஞ்சுகளைப் பேணும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Zapornia akool". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22692612/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London, UK: Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. https://archive.org/details/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling. 
  3. 3.0 3.1 3.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 118-119. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_காணான்_கோழி&oldid=3764031" இலிருந்து மீள்விக்கப்பட்டது